28.5 C
Chennai
Friday, December 2, 2022
Homeஅரசியல் & சமூகம்காந்தியின் தோற்றமும் காமராஜர் மறைவும் - மகத்தான தலைவர்களின் ஒற்றுமைகள்

காந்தியின் தோற்றமும் காமராஜர் மறைவும் – மகத்தான தலைவர்களின் ஒற்றுமைகள்

NeoTamil on Google News

வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள். காந்தி உயரிய வாழ்ந்து காட்டியாகத் திகழ்ந்தவர். உலகமே அவரை ‘மகாத்மா’ என்று கொண்டாடிய போது சுயசரிதை எழுதித் தன் தவறுகளை மக்கள் முன் வைத்தவர் அவர். உலகின் தலைசிறந்த தலைவர்களுள் முதன்மையானவராய் நம் காந்தியடிகள் கருதபடுவதற்குக் காரணம், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர் அவர் என்பதே. காந்தி வழியில் வாழ்ந்து காந்தியத்தின் உன்னதத்தை உணர்த்தி ‘தென்நாட்டு காந்தி’ என்று மக்களால் போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜர்.

அக்டோபர் 2 ஆம் நாள் காந்தியடிகள் பிறந்தநாள், அதேநாள் தான் காமராஜர் மறைந்த நாள். நாளில் மட்டுமா ஒற்றுமை? கொள்கையில், தனிமனித வாழ்க்கையில், நேர்மையில் என்று எல்லாவற்றிலும்
இருவருக்குள்ளும் ஒற்றுமைகள் இருந்தன.

3844470 3x2சிறு வயது ஒற்றுமை

காந்தி ராட்டையைச் சாட்டையாக்கி ஆங்கிலேருக்கு எதிராகப் புதியதோர் ஆயுதம் செய்தார். அவர் சிறுவயது வாழ்க்கை, சோகங்கள் நிறைந்தது. பதின்மூன்று வயதில் கஸ்தூரிபாயை மணக்கக் காலம் அவரை நிர்பந்திக்கிறது. பதினாறு வயதில் தந்தையை இழந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, உயர்ந்த லட்சியமுள்ள இளைஞனாய் மாற்றியவர் அன்னையார் புத்திலிபாய் தான். பதினெட்டு வயதில் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்ற போது தாயாருக்குத் தந்த சத்தியத்தின் படி வாழ்நாள் முழுக்கத் தனி மனித ஒழுக்கத்தைக் கடைபிடித்தார்.

காமராஜரும் ஆறுவயதில், தந்தை குமாரசாமி நாடாரை இழக்கிறார். தாயார் சிவகாமி அம்மையாரின் அன்பில் வளர்ந்தார். குழந்தைப் பருவத்தில் காந்தியும், காமராஜரும் தந்தையின் அன்பின்றித் தாயின் அன்பில் வாழக் காலம் பணித்தது. காந்தியின் பொது வாழ்க்கையும், அவரது தனி வாழ்க்கையும் ஒளிவு மறைவற்ற உன்னதமான வாழ்க்கையாகத் திகழ்ந்தது. உள்ளத்தில் தூய்மையோடும், செயலில் நேர்மையோடும், பேச்சில் சத்தியத்தோடும், ‘என் வாழ்வுதான் இந்தச்சமூகத்திற்கு நான் விட்டுச் செல்கிற செய்தி’ என்று வாழ்ந்தவர் காந்தி. காமராஜர் அப்பழுக்கற்ற தலைவராக பொதுவாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.

புகழை விரும்பாத தலைவர்கள்

“ராஜீயத்துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள் நாகரிக உலகத்திற்கு இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக நினைவு இல்லை” என்று சத்திய சோதனை நூலுக்கு எழுதிய முன்னுரையில் காந்தி எழுதியுள்ளார்.

காமராஜர் முதலமைச்சரான பின்னும் தாய் சிவகாமி அம்மையாருக்குச் செலவுக்கு ரூ.120 தான் அனுப்பினார். ‘வருகிறவர்களுக்குக் குளிர்பானம் வாங்கித் தர வேண்டும், ரூ.150 தந்தால் நலம்’ என்று தாய் வேண்டிய போதும் மறுத்தவர் காமராஜர். காந்தியைப் போல், மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்த போது கூச்சத்தோடு மறுத்து “என் கடமையச் செய்றதுல பாராட்டு ஏன்னேன்” என்று சொன்னவர் காமராஜர்.

போராட்டமே வாழ்வு

உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக காந்தி நடத்திய தண்டி யாத்திரை அவரது மன உறுதிக்குச் சான்று. விடுதலைப் போராட்டத்தின் திருப்பு முனையாய் அமைந்த மாபெரும் போராட்டத்தை அவர் அகிம்சை வழியில் நடத்திய திறத்தை உலகே வியந்து போற்றியது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் அவரது தன்னிகரற்ற ஆளுமைக்கு மற்றுமொரு சான்று.

காந்தியின் மீதும் அவர் சத்தியாகிரகத்தின் மீதும் அளவு கடந்த பாசம் கொண்ட காமராஜர், 1927-ல் நீல் சிலை அகற்றும் போராட்டம் நடத்த மகாத்மாவிடம் அனுமதி வேண்டினார். ஆனால் அரசாங்கமே அச்சிலையை எடுத்து விட்டதால், அப்போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை. 1930 – ல் காந்தி அறிவித்த உப்புச்சத்தியாகிரகத்தில் ராஜாஜியோடு வேதாரண்யத்தில்
பங்கேற்று சிறை சென்றார் காமராஜர்.

அறம் பேணிய தலைவர்கள்

தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று போதித்த காந்தி, தென்னாப்பிரிக்கா சென்று திரும்பிய பின் எளிய கதர் வேட்டிக்கு மாறினார். வாரம் ஒரு நாள் பேசா விரதம் மேற்கொண்டார். ஆங்கிலேயரின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவரின் அகிம்சை முன் செயலற்றுப் போயின. ”பிரம்மச்சரியத்தை பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்” என்று நம்பிய காந்தி இல்லறத்திலும் அதை கடைபிடித்தார். இல்லறத் துறவியாய் வாழ்ந்தார்.

kamaraj mainகாமராஜரும் அப்படித்தான். தாயார் திருமண ஏற்பாடுகள் செய்த போதும், பொது வாழ்க்கைக்குப் பிரம்மச்சரியமே ஏற்றது என்று மறுத்து இறுதி வரைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார்.

உணவிலும் ஒற்றுமை

நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் தொடர்பு உண்டு என காந்தி நம்பினார். ”ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவே ஆகிறான்” என்று அடிக்கடிச் சொல்வதுண்டு. மிகையான உணவு நோயைக் கொண்டு சேர்க்கும் என்று எண்ணி, வாரத்தில் ஒருநாள் உண்ணா நோன்பினைக் கடைபிடித்துப் புலன்களை அடக்கும் ஆற்றலைப் பெற்றார்.

இருவரும் என்றும் பதவியைச் சுகமாய் நினைத்தவர்களில்லை.

காமராஜர் உணவின் மீது பெரும்பற்றுக் கொண்டவரில்லை. எளிமையான உணவு முறையையே என்றும் அவர் கடைபிடித்தார். சிறு வயது முதலே வறுமையில் வாழ்ந்ததால் சைவ உணவுப்பிரியராக இருந்த காமராஜரால், மாதம் முழுக்கக் கத்தரிக்காய் சாம்பார் என்றாலும் முகம் சுளிக்காமல் சாப்பிட முடிந்தது.

பதவி ஆசை

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பதவியை நாடாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர் காந்தி. லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்குப் பின் பிரதமராகும் வாய்ப்பு வந்தும் கூட அதை இந்திராகாந்திக்குத் தருவதற்குக் காரணமாய் இருந்தார் காமராஜர்.

இருவரும் என்றும் பதவியைச் சுகமாய் நினைத்தவர்களில்லை. இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் காந்தி. 1957 முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி தரும் பொருட்டு கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்து மதிய உணவு தந்து கல்விக்கண் திறந்த ஒப்பற்ற காந்தியத் தலைவனாகக் காமராஜர் திகழ்ந்தார்.

காந்தியின் வாழ்க்கை அகிம்சையை மையமிட்ட மகத்தான வாழ்க்கை என்றால், காமராஜரின் வாழ்க்கை காந்திய வழியில் மக்களை ஆண்ட மகத்தான வாழ்க்கை. மனிதராய் பிறந்து புனிதராய் தன்னைச் செதுக்கிக் கொண்ட மகான் காமராஜர், காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடிய நிறைவில் தென்னாட்டுக் காந்தியாகவே அவரின் ஆத்மாவோடு கலந்து போனார்.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பிரையன் ட்ரேசி அவர்களின் சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பிரையன் ட்ரேசி அவர்கள் கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!