இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் எவ்வளவோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு போராட்டங்கள் நடந்தும் பெரிய அளவிலான கலவரம், வன்முறை போன்றவை தமிழகத்தில் ஏற்படவில்லை. அதற்கு காரணம் நம் மக்கள் கல்வி அறிவை மீண்டும் பெற்றது தான்.
சங்ககாலத்திலேயே உலகில் வேறு எங்கும் இல்லாத எண்ணிக்கையில், பெண்பாற் புலவர்களைக் கொண்ட அறிவுடைய சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்தது. இடைக்காலத்தில் தமிழக அறிவு சார் சொத்துக்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டன, மீதம் இருந்தவை திருத்தப்பட்டன. அதனால், சிக்குண்ட தமிழினம் மீண்டு வர பல நூற்றாண்டுகள் ஆயின.
60 வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். பெரியார் கருத்துக்களால் பண்பட்ட இம்மாநிலத்தை சீர்குலைக்க அண்மையில் நடந்த முயற்சிகள் பலவும் தோல்வியை தழுவின. பின்னால் வந்த திராவிட கட்சிகளால், தமிழகம் இயற்கை வளம் தொடர்பாக பல பாதிப்புகளை அடைந்தாலும் , கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் இருந்து வந்தது; இருந்தும் வருகிறது.
இந்திரா காந்தி ஆட்சியில் கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மத்திய அரசின் கீழ் வந்தது. கல்வி தனியார் மயமாகி, வணிகமயமான பிறகும், அதிக அளவில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இன்றும் இருக்கிறது. இந்தியாவிலேயே பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலம் தமிழ் நாடு தான்.
மத்திய அரசால் இலைமறை, காய்மறையாக இருபது ஆண்டுகளாக நடத்தப்பட்ட நிகழ்வுகள், அண்மைக்காலமாக வெளிப்படையாகவும், வேகமாகவும் நடக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளாகவே மத்திய அரசு செய்யும் சில விரும்பத்தகாத செயல்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புறக்கண்களுக்கே புலப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவது, மனித வளத்தையும் சிதைக்கத் தான் என்பதை உணர முடிகிறது.
இயற்கை வளத்தை முடித்தாகிவிட்டது. தண்ணீர் போன்ற இயற்கை வளமின்றி தமிழகம் எவ்வாறு தனித்து இயங்கும்? தமிழகம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களில் இருந்து மீண்டு வர சிந்தனையாற்றல் கொண்ட தலைமை தேவை. அவ்வாறான தலைமை தமிழகத்தில் உருவாகா வண்ணம் செய்துவிட்டால் தானே மொத்த ‘மா’நிலமும் திமிராமல் மீண்டும் அடிமைத்தளைக்குள் அகப்படும்? தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவது, மனித வளத்தையும் சிதைக்கத் தான் என்பதை உணர முடிகிறது. வேறு என்னென்ன இன்னல்களை நாம் அனுபவிக்கிறோம் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
இயற்கை வளங்கள் சூறை
தமிழகத்தில் ஏற்கனவே அணுமின் உலை, மீத்தேன், ஹைடிரோகார்பன், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, நியூட்ரினோ போன்ற அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இயற்கை வளங்கள் அரசால் சூறையாடப்பட்டு வருகின்றன.
ஆற்று மணல், தாதுமணல், மலைகள், நீர்வளம் போன்ற மீட்க முடியா இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்த்ததால் அனைத்தும் பத்தே ஆண்டுகளுக்குள் சூறையாடப்பட்டு தமிழகம் தடுமாறித் தான் போய்விட்டது.
இதுமட்டுமின்றி, தமிழகத்தின் உரிமையான காவிரியும், முல்லைப் பெரியாறும், பாலாறும் அண்டை மாநிலங்களால் சொந்தம் கொண்டாடப்பட்டு நதிநீர் மறுக்கப்படவே கொஞ்சம் கொஞ்சமாக தானாக எழுந்து நிற்கும் திறனை இழந்து வருகிறது தமிழகம்.
போதாக்குறைக்கு தனியார் நிறுவனங்களான பெப்சி, ஸ்டெர்லைட், ஈஷா யோக மையம் போன்றவைகள் மறுபுறம் இயற்கை வளங்களை நாசம் செய்து வருகின்றன.
எப்போதும் நேர்மறையாக சிந்திக்கும் வழக்கத்தை மீறி நடப்பதை பார்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் மொத்த தமிழகமுமே தண்ணீர் இல்லாத நிலமாகப் போகிறதோ என்ற அச்சம் எழுகிறது
மனித வளமும் சூறை
தமிழக இளைஞர்கள் ஓரளவு விழிப்புணர்வுடன் இருக்க மீண்டும் பெறத்துவங்கிய படிப்பறிவு தான் காரணம்.
இந்தியாவிலேயே மிக அதிக மனித மேம்பாட்டு குறியீடு (Human Development Index) கொண்ட மாநிலங்களில் தமிழ் நாட்டிற்கு மூன்றாவது இடம் (மக்கள் தொகை: 8 கோடி). முதல் இடம் கேரளா (மக்கள் தொகை: 3.5 கோடி). இரண்டாவது இடம் ஹிமாச்சல் பிரதேஷ் (மக்கள் தொகை: 80 லட்சம்). கேரளாவும், ஹிமாச்சல் பிரதேஷும் மிகச் சிறிய மாநிலங்கள். மக்கள் தொகை நான்கு கோடிக்கும் அதிகம் கொண்ட மாநிலங்களில் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் தமிழ் நாடு தான் முதலிடம்.

மனித வளக் குறியீட்டில் தமிழ் நாடு, பிலிப்பைன்ஸ் அளவுக்கு உள்ளது. ஆனால், உத்திரப்பிரதேசமோ பாகிஸ்தான் அளவுக்கு தான் உள்ளது. பீகார், மியார்மர் அளவுக்கு மோசமாக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவின் மனிதவளம் பூட்டான் அளவுக்கு தான் உள்ளது. தமிழ் நாட்டை நீக்கி விட்டு பார்த்தால் இந்தியாவின் மனித வள குறியீடு பங்களாதேஷ் அளவுக்கு தான் இருக்கும்.
இந்திய மாநிலங்களின் மனிதவள குறியிடு | நிகரான மனித வள குறியீடு கொண்ட நாடு |
தமிழ் நாடு (0.6663) | பிலிப்பைன்ஸ் |
உத்திரப்பிரதேசம்(0.5415) | பாகிஸ்தான் |
இது தொடர்பாக மேலும் அறிய இந்த பக்கத்துக்கு (ஆங்கிலத்தில் உள்ளது) செல்லுங்கள்.
படிப்பறிவால் விழிப்புணர்வு ஏற்பட்டது. இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் ஜல்லிக்கட்டு புரட்சிக்கு காரணம் என்பதை நாடே அறியும். மக்களும், இளைஞர்களும் விழிக்காமல் இருந்தால் தானே அரசுகள் திட்டமிட்டதை செய்யமுடியும்? இவ்வளவு சிறப்பாக இருக்கும் கல்வித்துறையை சிதைத்தால் மட்டுமே இளைஞர்கள்/மக்கள் புரட்சி மீண்டும் வெடிக்காது; மத்திய அரசு நினைத்தது நடக்கும். கல்வி முறையையே சிதைத்துவிட்டால், இளைஞர்கள் எவ்வாறு விழிப்புணர்வு பெறுவார்கள்? சிந்தித்த அரசாங்கம் தான், மனித வளத்தை சூறையாட துவங்கியிருக்கிறது. எப்படித் தெரியுமா?
1. சிதைந்து போன அரசு பள்ளிக்கூடக் கல்வி
தனியார் பள்ளிகள் பலவற்றையும் அரசியல்வாதிகள் தான் நடத்தி வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். அரசு தரமான கல்வியை தந்தால், தனியார் பள்ளிகளில் யார் படிப்பார்கள்? அதனால், திட்டமிட்டே தமிழக அரசு கல்வித்திட்டத்தை இக்காலத்திற்கு ஏற்றதாக மாற்றவில்லை போலும்; அல்லது அதன் சிறப்பை யாரும் அறியாவண்ணம் மூடி மறைக்கிறது. மேலும், அரசு தரும் இலவசக் கல்வி தரமற்றது என்ற பரப்புரை செய்யப்பட்டு, இன்று அதன் பலனை தனியார் பள்ளிகள் அறுவடை செய்கின்றன.
2. டாஸ்மாக்
மக்கள் சிறிது விழிப்புணர்வு பெற்று இருந்தனர்; பிள்ளைகளை எப்பாடு பட்டாவது, பணம் கட்டி படிக்க வைத்துவிடுகின்றனர். அடுத்த தலைமுறை படித்து தெளிவு பெற்றுவிட்டால் அரசியல்வாதிகள் பின் எப்படி ஏமாற்றி வாக்கு வாங்கி வெற்றி பெற முடியும்? மக்களை அதே நிலையிலேயே வைத்திருக்கவேண்டும் என நினைத்த அரசாங்கம் நடத்தி வருவது தான் மதுக்கடைகள். மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையானால் பின் எவ்வாறு நிறைய பணம் கட்டி பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்க்க முடியும்? கொடுமை என்னவென்றால் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட மது குடிக்கத் தொடங்கியது தான்.
3. திரைத் துறையினரால் வந்த சீரழிவு
காமராஜரை வீழ்த்திய பிறகு திரைத்துறையினரின் கவர்ச்சியில் விழுந்த தமிழகம் அவர்களின் பிடியில் இருந்து மீண்டு வர இன்று வரை திணறிக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர்களால் நாம் இழந்தவை கொஞ்ச நெஞ்சமல்ல.
தொடர்ந்து மூச்சுத்திணற வைக்க வருகின்றனர் ரஜினி, கமல் போன்றோர். நடிகர்களை தலைவன் என்று கூறி அவர்கள் பின்னால் செல்பவர்கள் தமது மனிதவளத்தை உணராத முட்டாளாகிப்போன தீவிர ரசிகர்கள் மட்டுமே என்பதை நாம் அறிவோம்.
ஆனால், குறுக்கு வழிகளை பயன்படுத்தி ரஜினி, கமல் போன்றோர் ஆட்சிக்கு வர நேர்ந்தால் மனிதவளத்தில் உத்திரபிரதேச கதிதான் நமக்கும்.
4. நீட் தேர்வு
தமிழர்கள் பலரும் பொறியியல், மருத்துவம் படித்து வந்தனர். இந்தியாவிலேயே அதிக பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலம் தமிழ் நாடு. தமிழ்ப் பிள்ளைகளின் மருத்துவர் கனவை தகர்க்க மத்திய அரசு கொண்டுவந்தது தான் நீட் தேர்வு. ஏழை, எளிய மாணவர்கள் எப்படி நிறைய பணம் செலவு செய்து தனியார் பயிற்சி பட்டறைகளில் சேர்ந்து, மருத்துவர்களாக முடியும்? அரசுப் பள்ளிகளில் படித்தோர் மருத்துவர் ஆவது முடியாதவண்ணம் திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுத்தியது தான் நீட் தேர்வு. ஒரு ஏழை, எளிய தலைமுறையின் மருத்துவ கனவ சிதைந்து விட்டது.
5. சாரணர் இயக்க உள்ளடி வேலைகள்
கடந்த ஆண்டு, 2016 செப்டம்பர் மாதம், சாரணர் இயக்க தேர்தல் நடந்தது. அப்போது விகடன் ‘எச்.ராஜாவின் 52 வாக்குகளும், தேர்தல் தோல்வி பின்னணியும்!‘ என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையின் செய்தியின் சில பகுதிகள் கீழே உங்களுக்காக.
தேர்தலுக்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் சாரண,சாரணியர் இயக்க செயற்குழு நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியலில் கல்வித்துறைக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். இதன் பின்னணி என்னவென்று பார்த்தால் தங்களுக்குச் சாதகமான ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளை இதற்குள் புகுத்துவதற்காகவே இவ்வாறு பலரை நீக்கியுள்ளார்கள், என ஹெச்.ராஜா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சாரணர் இயக்கத்திலும் அரசியல் புகுந்தால் மாணவர்களின் எதிர்காலம் என்னாவது? சாரணர் இயக்க தேர்தலுக்குப் பின், எடப்பாடி அரசு போல் சாரணர் இயக்கமும் அடிமையானதா? சாரணர் இயக்கத்தின் தற்போதைய நிலை பற்றி நமக்கு ஏதும் தெரியவில்லை.
6. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ் மாணவர்களின் (தற்)கொலைகள்
வெளிமாநிலங்களில் படித்து வந்த திருப்பூர் சரவணன், சேலம் முத்து கிருஷ்ணன், திருப்பூர் சரத்பிரபு, இராமேஸ்வரம் கிருஷ்ணபிரசாத் போன்ற பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் (தற்)கொலை செய்தி தமிழ் மாணவர்கள் மத்தியில் வெளி மாநிலங்களில் சென்று படிப்பது பற்றிய அச்சத்தை உண்டாக்கியது.
நீட் தேர்வு மூலம் பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து மகிழ்ச்சியுடன் படிக்கின்றனர். ஆனால், தமிழ் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கவே அஞ்சுகின்றனர். வட மாநிலங்களை விட வெளிநாடுகள் பாதுகாப்பானது என்று சீனா, ரஷ்யா போன்ற வேறு பல நாடுகளுக்கு சென்று படிக்கின்றனர்.
7. துணை வேந்தர் நியமனம்
தமிழக அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கு, தமிழர்கள் யாரும் துணை வேந்தர்கள் இல்லை என்றால் உங்களுக்கு கோபம் வருமா… வராதா? ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்த துணைவேந்தர்கள் யாரும் தமிழர்கள் இல்லை.
தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக கேரளாவின் பிரமீளா குருமூர்த்தி. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் ஆந்திராவின் சூரிய நாராயண சாஸ்திரி. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் கர்நாடகாவின் சூரப்பா.
இந்தியாவிலேயே மனிதவள குறியீட்டில் முதல் இடத்தில் இருக்கும் தமிழர்களுக்கு துணை வேந்தராகும் தகுதி இல்லையா? அல்லது திட்டமிட்ட மனித வள சீரழிப்பின் அடுத்த நடவடிக்கையா? பாடத்திட்டம் உருக்குலையப் போவதை கைகட்டி வேடிக்கை பார்க்கபோகிறதா தமிழகம்?
8. போராடிக்கொண்டே இருந்தால் எப்படி படிப்பது?
வெகு சிலரைத் தவிர அனைவரும் போராட்டக்களத்திற்கு வந்துவிட்டனர். மாணவர்கள் மிகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். போராட்டமே வாழ்க்கையாயின், பின் எப்போது படிப்பது? எங்கே செல்லுமோ இந்த பாதை?
கல்வி, மாணவர்கள் தொடர்பான இன்னும் பல ‘மாணவர் நலத்திட்டங்கள்’ வரவிருக்கின்றன, நம்மிடம் மிச்சம் இருக்கும் மனித வளத்தையும் சூறையாட.
பெரும் சந்தேகத்திற்கிடமான வகையில் ஜெயலலிதா மறைவு, கருணாநிதி அவர்களின் முதுமை காரணத்தால் ஏற்பட்ட இயலாமை, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது போன்ற மாயத்தோற்றங்களால், அண்மைக்காலமாக இளைய தலைமுறையிடம் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வும் சூறையாடப்படுகிறது.
கவலையற்ற இரட்டையர்களாக (Careless Duo) உலாவரும் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வத்தின் அடிமைத்தனமான கூட்டு ஆட்சியால் போராடும் அறிவையும் இழக்கப்போகிறதோ தமிழகம்?
இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் தான் ஜல்லிக்கட்டு புரட்சிக்கு காரணம் என்பதை நாடே அறியும். தமிழக இளைய தலைமுறையைக் கவர நடிகர்களே ஏற்றவர்கள் என்பதை சில அரசியல் சாணக்கியர்கள் அறிந்துகொண்டனர். இளைய தலைமுறை, பின் எப்போதும் விழிப்புணர்வு பெறாமல் மழுங்கடிக்கப்படவே, இரண்டு ஓய்வு பெற்ற நடிகர்கள் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப திறமை உள்ளவர்களாக ஊடகங்களால் காட்டப் படுகிறார்கள்.
ஸ்டாலின், விஜயகாந்த் போன்றவர்களின் ‘சிறுபிள்ளை தனமான பேச்சாற்றல்’ அரசியல் காற்று திசை மாற மிக முக்கிய காரணம். இவர்கள் இருவராலும் பெரிய அளவில் பயனேதும் இருக்காது என்பதை நாம் அறிவோம்.
இனிமேல், எம்.ஜி.ஆர் காலத்தைய இளைஞர்கள் போல நடிகர்களின் பின்னால் ஓடி, மீண்டும் எழ முடியாதபடி விழுந்து படுகாயம் அடைய போவது தான் இறுதிக்காட்சியா… இல்லை மக்கள் விழிப்புடன் செய்யப்போகும் புரட்சி வெல்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.