தீபாவளி அன்று தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் தெரியுமா ?

0
47
இந்தப் பதிவு 02-11-2018 அன்று வெளியான தமிழக அரசின் புதிய அறிவிப்பின் படி, தகவல்களைச் சேர்த்து புதுப்பிக்கப்பட்டது.

இந்த வருடம் தீபாவளிப் பண்டிகைக்குப் பட்டாசுகள் வெடிப்பதற்கு நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தி செய்யத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து, கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பை வழங்கியது. அதாவது நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கவோ, விற்பனை மற்றும் உற்பத்திக்கோ  தடை விதிக்க முடியாது. ஒரு சில நிபந்தனைகளுடன் பட்டாசு வெடிக்கலாம் என தீர்ப்பை வழங்கியது.

அதாவது, நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையன்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று இரவு 11 .55 முதல் இரவு 12 .30 வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருந்தது.

இந்தத் தீர்ப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்று கடந்த 29 – ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்  தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தீபாவளியைப் பொருத்தவரையிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள் உள்ளன. வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை இரவிலும், தமிழகத்தில் அதிகாலையிலும் கொண்டாடப்படுகிறது. எனவே, தமிழகத்தில் அதிகாலை 4.30 – 6.30 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் இரண்டு வெவ்வேறு நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. அப்போது, தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், தீபாவளி அன்று காலை ஒரு மணிநேரமும் , மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவில் 9 மணி முதல் 10 வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்ற அதிரடி உத்தரவைப்  பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், இந்த உத்தரவு தமிழகம், ஆந்திரம், புதுவை, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்குப் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு,  தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம்  என்று அறிவித்திருக்கிறது.

வருகிற தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆட்சியர் முதல் வி.ஏ.ஓ வரை அனைத்து அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எத்தனை பேரை இப்படிக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவார்கள் ? விதிகளை மீறினால் என்ன  தண்டனை? பட்டாசுகள்  வெடிப்பது பெரும்பாலும் குழந்தைகள் தான். அவர்களுக்கு தண்டனை உண்டா? நீதிமன்றம் அனுமதித்த நேரத்தில் மழை குறுக்கிட்டு விட்டால் என்ன செய்வது? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரிந்தபாடில்லை.