தேர்தல் பத்திரம் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நேற்று இடைக்காலத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

தேர்தல் பத்திரம் சட்டம் (Electrol bond scheme)
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் விவரங்களை பிற கட்சிகளின் கண்களில் இருந்து மறைக்கவும், அவர்கள் கட்சிக்கு அளிக்கும் நிதியை வங்கிகள் மூலம் செலுத்துவதன் மூலம், கட்சிகள் கருப்புப் பணமாக நன்கொடை பெற்றுவரும் நடைமுறை ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த தேர்தல் பத்திரச் சட்டம். ஆனால் இந்த செயல்பாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பார்வையிலிருந்தும் விலகி நடைபெறுவது தான் இச்சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தது.
வாதங்கள் மற்றும் பிரதி வாதங்கள்
இந்த புதிய சட்டத்தை கொண்டுவருவதற்காக மத்திய அரசு வேறு 5 சட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தை எல்லோராலும் சந்தேகத்தோடு பார்க்க வைத்தது. மத்திய அரசின் நோக்கத்தை தவிர்த்து, இச்சட்டம் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக பல்வேறு தரப்பினராலும் உச்சநீதிமன்றத்தில் இதற்கெதிராக வாதிடப்பட்டது. இதற்காக உச்சநீதிமன்றத்தின் இதர வேலை (செவ்வாய் முதல் வியாழன் வரை) நாட்களில் இதன் மீதான முழு விவாதங்கள் நடைபெற்றன.
“கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியின் மூலத்தைப் பற்றி அறிய வாக்காளர்களுக்கு அவசியமில்லை” என மத்திய அரசின் சார்பாக அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். மேலும் இந்தச் சட்டத்தின் பலன்கள் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர்தான் புலப்படும் எனவும், மறைமுகமாக புழங்கிக் கொண்டிருந்த நன்கொடைகள் இப்போது வெளிப்படையாக கணக்கில் காட்டப்படுகின்றன என்பதால் இது கருப்புப் பணத்தை ஒழிக்கும் வெள்ளைப் புரட்சி எனவும் மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் அவர்கள் “ஆனாலும் மறைமுகமாக நன்கொடை பெறுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது…” என்று இடைமறித்தார்.
எதிர்தரப்பின் சார்பாக வாதிடிய பிரஷாந்த் பூஷன் அவர்கள் மத்திய அரசின் வாதத்தை எதிர்த்ததோடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையும் தேர்தலின் வெளிப்படைத் தன்மையையும் பாதிக்கும் இச்சட்டத்தின் பக்கவிளைவுகளை எடுத்துரைத்தார். மேலும் வாக்காளர்கள் தான் உண்மையான அதிகாரம் கொண்டவர்கள் என்றும், அவர்கள் தான் வாக்களிக்கும் வேட்பாளரின் நிதி மூலத்தை அறிய கடமைப்பட்டவர்கள் என்றும் நன்கொடை அளிப்பவர்களின் அடையாளத்தை மறைக்கும் இச்சட்டத்தையும் எதிர்த்தும் தேர்தல் ஆணையம் சார்பாக வாதிட்டார்.
தீர்ப்பு
இறுதியில் நேற்று முன்தினம் (12-4-18) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இடைக்காலமாக இவ்வழக்கில் தீர்ப்பளித்தது. அதன்படி ரகிசியமாக இருந்த நன்கொடையாளர்களின் விவரங்களையும், அவர்கள் அளித்த மற்றும் கட்சிகள் பெற்ற பத்திர விவரங்களையும், தேதி மற்றும் நேர விவரங்களையும் வங்கிக் கணக்கோடு ரகசியக் கவரிலேயே தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. மேலும் பத்திரம் விற்பனை செய்யப்படும் மே 15 ஆம் தேதிமுதல், பத்திரம் பணமாக மாறும் மே 30 ஆம் தேதி வரையிலும் நடைபெற்ற பத்திர விவரங்களையும் அதன் மூலாதார விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும்படியும் இடைக்கால உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்திரத்தை விற்பனை செய்ய வழங்கபட்டுவந்த கால நீட்டிப்பில் இருந்து ஐந்து நாட்களை குறைக்கவும் (மொத்தம் 55 நாட்கள்) தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுவதாலும் வழக்கின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு யாருக்கும் சாதக பாதகமில்லாமல் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இதன் மீதான முழுமையான தீர்ப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்தது.
தீர்ப்பை வரவேற்கிறோம்
வழக்கின் முதல் எதிர்மனு தாரார்களில் ஒன்றான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் தீர்ப்பை வரவேற்பதாகவும் அதே நேரத்தில் அட்டர்னி ஜெனரலின் வாக்காளர்கள் கட்சிகளின் நிதி மூலத்தை அறிய தேவையில்லை என்ற கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி,” கொடையாளர்களின் பெயர்களை மறைத்து வைத்திருப்பதால் ஏற்படப்போகும் நன்மைதான் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் 95 சதவிகித விழுக்காடு பத்திரங்கள் பிஜேபி க்கு செல்வதாகவும் அக்கட்சி 62 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தீர்ப்பு எப்படிப் பட்டதாயினும் அதனை மதிப்பதாகவும் அதேசமயம் இறுதித் தீர்ப்பிற்க்காக காத்திருப்பதாகவும் பிஜேபி செய்தித் தொடர்பாளரும் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான நவீன் கோலி தெரிவித்துள்ளார்.
அதிக நன்கொடை பெறுவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளை “ ஆம் நாங்கள் அதிகமாக நன்கொடை பெறுகிறோம். ஆனால் அதைத்தான் கணக்கில் காட்டுகிறோமே!. எதிர்க்கட்சிகள் அனைத்தும் நிதியே பெறவில்லை என்கிறதா? இல்லை கருப்புப் பணமாக நிதிகளை பெறுகின்றனவா?” என்று கடந்த நாட்களில் மத்திய அமைச்சர் திரு. அருண் ஜேட்லி பேசியது குறிப்பிடத்தக்கது.