சபரிமலைக் கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் – உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

0
257
temple

மாதவிடாயைக் காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14-ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று,  இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் இந்த அமர்வில் அங்கம் வகித்தனர்.

தீர்ப்பின் சாராம்சம்

பழக்க வழக்கங்களும் நடைமுறையும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த விதிமுறையே இழிவானது. மாதவிடாயைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பது பெண்களின் தனிப்பட்ட கண்ணியத்துக்கு எதிரானது. இதுவும் ஒரு வகையான தீண்டாமை தான்

சபரிமலை கோயில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமான கோயில் இல்லை என்பதால் பழைய வழக்கங்களையே பின்பற்ற முடியாது என்று நீதிபதி நாரிமன் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமையை மறுக்க முடியாது என்றும் பெண்களை நுழைய அனுமதி மறுக்கும் வழக்கம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் சம உரிமை உண்டு. சில ஆண்களின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் விழுமியங்களை முடிவு செய்ய முடியாது. பெண்களால் கோயிலுக்கு விரதம் இருக்க முடியாது என்பதால் அவர்களின் அனுமதியை மறுப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது,” என்று நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

sbarimala temple“இந்த விதிமுறையே இழிவானது. மாதவிடாயைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பது பெண்களின் தனிப்பட்ட கண்ணியத்துக்கு எதிரானது. இதுவும் ஒரு வகையான தீண்டாமை தான்,” என்று சந்திரசூட் கூறினார்.

இந்த அமர்வில் அங்கம் வகித்த பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா, “மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏனெனில், பிற மத வழிபாட்டு இடங்களிலும் இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும்,” என்று மாறுபட்ட, சிறுபான்மை தீர்ப்பை அளித்துள்ளார்.

“பகுத்தறிவுக்கு உற்பட்டதோ இல்லையோ, எல்லா மக்களும் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்ற மதசார்பற்ற ஜனநாயகத்தில் இடம் உண்டு. அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. சம உரிமைக் கோட்பாடு வழிபாட்டு உரிமையை மீறும் வகையில் இருக்கக் கூடாது,” என்று இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அரசின் நிலைப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்குத் தாங்கள் ஆதரவாக உள்ளதாகவே கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தது. பெண்களுக்கோ பொது மக்களுக்கோ எதிரான பாரபட்சத்தை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்றும் கேரள அரசு தெரிவித்திருந்தது.

அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்குவதாகவும், பெண்களின் ஒரு பகுதியினரை மட்டும் அனுமதிக்காமல் இருப்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் மத வழக்கங்களும், நடைமுறைகளும் கடந்த 50 ஆண்டுகளில் மாறியுள்ளதால், அதற்கேற்ப அரசியலமைப்பும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாரபட்சமின்றி சம உரிமைகளை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேரளா தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்கள்

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிராக இந்தத் தடை உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு எதிராக வாதிட்டவர்கள் இது நீண்ட காலமாக உள்ள நடைமுறை என்பதால், காலம் காலமாகத் தொடரும் மத நம்பிக்கை எனும் அடிப்படியில் அரசியலமைப்பின் பிரிவு 25(1)இன் கீழ் மாற்ற முடியாது என்று கூறியிருந்தனர்.

பாலின சமத்துவத்தை அடிப்படையாக கொண்டு 2006-ஆம் ஆண்டு, பெண் வழக்கறிஞர்கள் சிலர் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர். இந்து மதத்தின் படி மாதவிடாயின் போது பெண்கள் அசுத்தமானவர்கள் என்று அவர்கள் கோயில்களில் நுழைய தடை இருந்து வருகிறது.

முன்னதாக இது குறித்து பேசிய அக்கோயில் அதிகாரிகள், ஐயப்ப சுவாமி ‘பிரம்மச்சாரி’ என்பதால் இந்த வழக்கத்தை பின்பற்றி வருவதாகத் தெரிவித்தனர். சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், இந்த வழக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருவதாக வாதிடுகின்றனர்.

18 steps in sabarimalaசபரிமலைக் கோயிலுக்கு ஐயப்ப வழிபாட்டிற்காக செல்பவர்கள், 41 நாட்கள் விரதம் இருந்து செல்ல வேண்டும். உடலியல் காரணங்களால் மாதவிடாய் இருக்கும் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

2006-ஆம் ஆண்டே இதனை எதிர்த்து வழக்கு போடப்பட்டாலும், 2016-ல் தான் இது விசாரணைக்கு வந்தது . கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விசாரணையில், அரசியல் அமைப்பு வழங்கியுள்ள பாலின சமத்துவத்துக்கு எதிராக இந்த வழக்கும் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோயிலுக்குள் நுழைய பெண்கள் என பாரபட்சம் காட்டப்படுவதாகவும் , அவர்கள் வழிபடும் உரிமைகளுக்கு எதிராக இது இருப்பதாகவும் வாதிடப்பட்டது. 2016-ஆம் ஆண்டு, இதனை கேரள அரசு எதிர்த்தாலும், சமீபகால விசாரணைகளில் மனுதாரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடந்து கொண்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சபரிமலைக் கோயிலில் பின்பற்றப்படும் வழக்கம், ஒரு மனத்தடை என்றும், பெண்களை அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த, அதாவது இந்த வழக்கம் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளதா அல்லது இது “அத்தியாவசிய மத நடைமுறையா” என்பதை விசாரிக்க 2017-ஆம் ஆண்டு அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.

சபரிமலைக் கோயிலின் முக்கியத்துவம் என்ன?

இந்தியாவில் உள்ள இந்து வழிபாட்டு தளங்களில் சபரிமலை மிக முக்கியமான ஒன்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.

இந்தக் கோயிலுக்குள் நுழைய, யாத்ரீகர்கள் 18 புனிதப் படிகள் ஏற வேண்டும். சபரிமலைக் கோயிலின்  சாசனங்களில் இந்த 18 படிகளும் மிகப் புனிதமானவை. 41 நாட்கள் கடும் விரதம் இருக்காமல் இதனை ஏற முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலுக்குச் செல்லும் முன், சில சடங்குகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும். கருப்பு மற்றும் நீல வண்ண உடை மட்டுமே அணிய வேண்டும். 41 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு முடியும் வரை அவர்கள் சவரம் செய்யக்கூடாது. நெற்றியல் சந்தனம் வைத்திருக்க வேண்டும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி பிரசாரம்

2016-ஆம் ஆண்டு, சபரிமலையில் பின்பற்றப்படும் வழக்கத்திற்கு எதிராகப் பெண்கள் பிரசாரம் மேற்கொண்டனர். கோயில் தலைவர் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடியாக இது மேற்கொள்ளப்பட்டது.

மாதவிடாய் இல்லாமல் சுத்தமாக இருக்கிறார்களா என்பதை அறிய ஒரு கருவி கண்டுபிடித்த பிறகுதான், பெண்களை அனுமதிப்பேன் என்று தலைவர் ப்ரயர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

“சபரிமலைக் கோயிலில் பெண்களை ஆண்டு முழுவதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் கூறும் நேரம் வரும்” என்றும் அவர் கூறியிருந்தார்.

happy to bleed“இப்போது மனிதர்களின் உடலில் ஏதேனும் ஆயுதங்கள் உள்ளதா என்பதை அறிய கருவி வந்துவிட்டது. பெண்கள் கோயிலுக்குள் நுழைய இது ‘சரியான நேரமா’ என்பதை கண்டுபிடிக்கவும் விரைவில் ஒரு கருவி கண்டுபிடிக்கப்படும். எப்போது அந்த கருவி கண்டுபிடிக்கப்படுகிறதோ, கோயில்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்குவது குறித்துப் பேசுவோம்” என்றார்.

கோபாலகிருஷ்ணனின் இந்த கருத்துகள், பெண்களுக்கிடையே பெரும் கிளர்ச்சியை கிளப்பியது. இதனையடுத்து, #HappyToBleed என்ற பிரசாரம் ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்டது.

இந்த பிரசாரத்தை தொடங்கிய நிகிதா அசாத் பிபிசியிடம் பேசியபோது, கோயிலுக்குள் நுழைய “சரியான நேரம்” என்ற ஒன்று கிடையாது. “எப்போது வேண்டுமோ எங்கு வேண்டுமோ” அங்கு செல்ல பெண்களுக்கு உரிமை உள்ளது என்றார்.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.