இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியத் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வேள்வி உச்சகட்டடத்தை நெருங்கியிருந்த காலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் நேதாஜி. அதனால் தான் இன்றும் நாட்டின் பல நகரங்களில் இனிப்புகள் வழங்கியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் நேதாஜியின் புகழை, தியாகத்தை நினைவுகூர்கின்றனர் மக்கள். தமிழகத்திலும் இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பஞ்சம் இருக்காது. இந்தியாவில் நேதாஜியை அதிகளவில் கொண்டாடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். இன்றும் தமிழக கிராமங்களில் குழந்தைகளுக்கு சுபாஷ் சந்திர போஸ் எனப் பெயர்வைக்கும் முறை வழக்கத்தில் இருக்கிறது. அந்த அளவிற்கு நம் மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார் நேதாஜி. ஆனால் தற்கால தமிழகத்தில் நேதாஜி எப்படி உருவகம் கொள்ளப்படுகிறார்? அவருடைய கொள்கைகள் இன்றும் இளைய சமுதாயத்திடம் இருக்கின்றனவா? பார்க்கலாம்.

இரத்தத்தைத் தாருங்கள்
காங்கிரசின் அமைதிவழிப் போராட்டங்களின் மீது மக்களுக்கு எழுந்த நம்பிக்கையின்மையை அருகிலிருந்து கவனித்தார் நேதாஜி. நீண்டகால போராட்டமாக சுதந்திரப்போர் இருந்துவிடக்கூடாது என்பதில் தெளிவான சமயத்தில்தான் காந்திக்கும், சி.ஆர்.தாசிற்கும் இடையே பனிப்போர் உச்சத்தை எட்டியிருந்தது. இந்தியாவிற்கு போர் மூலமாகவே சுதந்திரம் கிடைக்கும் என தீர்க்கமாக நம்பினார் நேதாஜி. மேலும் சுதந்திரத்தை உடனடியாகப் பெறவேண்டிய அவசியம் பற்றி பல தலைவர்களிடம் விவாதித்தார். அவருடைய இந்த வேகம்தான் ஜெர்மனி வரை அவரை அழைத்துச்சென்றது.
இரத்தத்தைத் தாருங்கள், சுதந்திரத்தை நான் வாங்கித் தருகிறேன் என ஜெர்மனியிலிருந்து முழங்கினார். காங்கிரசின் கொள்கைகளில் ஈடுபாடில்லாத பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடையே நேதாஜியின் இந்த அறிவிப்பு தீப்பொறியாக வந்து விழுந்தது. ஏராளமானவர்கள் நேதாஜியின் இராணுவத்தில் சேரத் துடித்தனர். இனம், மொழி, சமயம், சாதி கடந்து சுதந்திரத்திற்கான, புதிய இந்தியாவிற்கான, கரைந்துபோன மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்கான வழியை இந்திய தேசிய இராணுவத்தின் மூலம் அமைக்க கனவுகண்டார் சரித்திர நாயகன்.

தமிழகத்தில்…
அன்றைய தமிழகத்தின் தவிர்க்கமுடியாத தலைவராக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நேதாஜியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராவார். பார்வர்டு ப்ளாக் கட்சிக்கு தமிழகத்தில் ஆதரவு பெருகியது இந்த நட்பின் மூலமே சாத்தியமானது. பல சமயங்களில் முத்துராமலிங்கத்தேவரை பாராட்டி நேதாஜி பேசியதுண்டு. இந்தியாவே அதிர்ந்துபோன நேதாஜியின் மாய மறைவிற்குப் பின்னும் முத்துராமலிங்கத் தேவரோடு நேதாஜி தொடர்பில் இருந்ததாக செய்திகள் நிலவின.
இந்த இருபெரும் தலைவர்களுக்கிடையில் இருந்த நட்புதான் தமிழகம் முழுவதும் நேதாஜியின் புகழ் அதிவேகத்தில் பரவ காரணமாகியது. புகைப்படங்கள், பேனர்கள் என இருவரின் பெயருமே இடம்பெற்றிருந்தன. இதே வழக்கம்தான் இன்றுவரை தொடர்கிறது.
வரலாறு என்னும் புதிர்
கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வரையப்படும் ஓவியமே வரலாறு. காலத்தினூடே மறைந்திருக்கும் பல தகவல்கள் வெளிப்படும்போது, பிழையான தகவல்கள் பரப்பப்படும்போது அதுவரை மக்கள் மனதில் படிந்திருந்த ஓவியத்தின் வடிவமும் மாறுகிறது. எனவே வரலாற்று அறிவிற்கு காத்திரமான வாசிப்பு அவசியம். வாய்ப்பிருக்கும் எல்லா கோணங்களில் இருந்தும் அந்த நிகழ்வை அணுகுவதன் மூலமாகவே தெளிவான முடிவிற்கு நம்மால் வர இயலும். மாறாக தன் மன நிலைப்பாடுகளுடன் வரலாற்று நிகழ்வுகளை ஒப்பிடும்போது தவறான சித்திரங்கள் கிடைத்துவிடும் அபாயம் உண்டு. இது அடுத்த தலைமுறைக்கும் தொடரும்.

நேதாஜியின் நோக்கத்தை விட அவருடைய செயல்களே பல தமிழக இளைஞர்களை கவர்கிறது. சரியான வரலாற்று புரிதல்கள் இல்லாமையால் இன்று நேதாஜி குறிப்பிட்ட சிலரின் தலைவராக சுருக்கப்பட்டிருக்கிறார். இது சாதாரண, சமூகத்தின் அடியில் வாழும் மக்களிடையே நேதாஜி விலகி வெகுதூரம் செல்வதற்கு வழிவகுக்கிறது. ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை அளித்த நேதாஜியை வழிபடும் நாம், பெண்களுக்கு இன்று நமக்குச் சரிசமமான வாய்ப்பினை வழங்குகிறோமா? அனைத்து மக்களையும் இந்தியாவின் வீரர்களாக அறிவித்த நேதாஜியின் புகழினைப்பாடும் நம்மால் இன்று வரை சாதியை கைவிட முடிந்திருக்கிறதா? இப்படி ஏராளமான கேள்விகள் நம் முன்னே குவிந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து தலைவர்களும் இப்படி ஏதாவது ஒரு வட்டத்திற்குள் வளைக்கப்படிருக்கிரார்கள். இதனைத் தகர்த்து தேசிய தலைவரான நேதாஜியை ஒற்றுமையின் கரங்களோடு வணங்குவதே அவருக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.