டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு..!! – காரணங்கள் என்னென்ன??

0
253

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சீரான வேகத்தில் சரிந்து வருகிறது. இது அமெரிக்காவில் வேலை செய்து, இங்கு குடும்பத்திற்கு அனுப்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே இனிப்பான செய்தி ஆகும்.

2018-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு 9.90% சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த சரிவு வீதம் 3.30% ஆக இருக்கிறது. ஆசிய நாடுகளிலேயே மிக மோசமான சரிவைச் சந்தித்திருக்கும் பணம் இந்திய ரூபாய் ஆகும்.

மாதக் கடைசியில் இறக்குமதியாளர்களுக்கான அமெரிக்கா டாலர்கள் தேவை அதிகரிப்பு, தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்தச் சரிவிற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. உண்மையில் இந்த வரலாறு காணாத ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

வர்த்தகப் பற்றாக்குறை

இந்தியாவின் இறக்குமதி அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், நாட்டின் நிகர லாபத்தில் ஏற்றுமதியின் மதிப்பு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது. இது வர்த்தகப் பற்றாக்குறையை (Trade Deficit) ஏற்படுத்துகிறது. நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையேயான பற்றாக்குறை வேறுபாடு, 2018-ஆவது நிதி ஆண்டில் 156.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது சென்ற நிதி ஆண்டில் 105.72 பில்லியன் டாலராக இருந்தது.

இது இந்தியா பிற நாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதை விட, கணிசமான அளவு டாலர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

மார்ச் 2018-ல் முடிந்த நிதியாண்டில், இந்தியா இறக்குமதி செய்திருக்கும் மதிப்பு, அது ஏற்றுமதி செய்த மதிப்பிற்கு இரண்டு மடங்கு எனத் தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் நாட்டிற்கும் அதன் உலகளாவிய வர்த்தகப் பங்காளர்களுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனைகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% அளவிற்கு , நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படும்.

இது இந்தியா பிற நாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதை விட, கணிசமான அளவு டாலர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

கச்சா எண்ணெய்

இந்தியா மற்ற பொருட்களை விட, கச்சா எண்ணையை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. ஏறத்தாழ 80% எரிபொருள் தேவையை நாடு கச்சா எண்ணெய் இறக்குமதி மூலமாக மட்டும் தான் பூர்த்தி செய்கிறது.

நாட்டுமக்களின் மொத்த எரிபொருள் தேவை 2018-ல், 190,000 பேரலாக இருக்கிறது. இது 2017-ம் ஆண்டு உபயோகித்த எரிபொருளின் இரண்டு மடங்கு. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும் என்பதே பொருளாதாரத்தின் அடிப்படை விதி. கச்சா எண்ணெய் விவகாரத்தில் அது தான் நடக்கிறது. சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில், இந்த வருடம் நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை 22% உயர்ந்துள்ளது.

அறிந்து தெளிக !!
கச்சா எண்ணெய் விலை 10 டாலர் உயர்ந்தால், நம் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 0.1% அதிகரிக்கிறது.

மூலிகை எரிபொருளில் இயங்கிய இந்திய விமானம்..!! – இது பெட்ரோலுக்கு மாற்றாகுமா??

அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவிற்கு இன்னும் பல டாலர்கள் தேவைப்படும், மேலும், கச்சா எண்ணெய் என்னும் பெருஞ்செலவை சமாளிக்க வேண்டும் – எதிர்பார்த்த மற்றும் தவிர்க்க முடியாத இந்த அழுத்தம் நம் ரூபாயை வீணடித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரியும் போது நாம் இறக்குமதிக்கும் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

மூலதன வெளியேற்றம்

அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மதிப்புக் குறைந்த ரூபாய் மற்ற பகுதிகளையும் வெகுவாக பாதிக்கின்றன. உதாரணமாக, மூலதனச் சந்தைகளை. இதனால் இந்தியப் பங்குகள் மற்றும் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீடு குறைந்து விடுகிறது. கடந்த மூன்று மாதங்களில், வெளிநாட்டு முதலீடுகள் 13,260 கோடி ரூபாயாக இருக்கின்றன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் முதலீட்டு அளவின் ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.

இந்தக் காரணிகள் எல்லாம் ஒன்றிணைந்து தான் இந்திய ரூபாயின் மதிப்பை வரலாறு காணாத சரிவிற்கு ஆளாக்கி உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலைக் கொண்ட ஒரு நாட்டிற்கு இந்தச் சரிவு மிகவும் அழுத்தத்தைத் தரக்  கூடிய ஒன்றாகும். எனவே, பொருளாதாரச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாடு உள்ளது.