மக்களவைத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிவிட்டதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை மற்றும் புதிய புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவிலிருக்கும் நலிவுற்றோருக்கான ஆண்டு உதவித்தொகையாக ரூபாய் 72,000 வழங்கப்படும் என அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
5 கோடி குடும்பங்கள்
கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மாதம் 6000 ரூபாய் மட்டுமே ஊதியம் பெரும் குடும்பங்களின் எண்ணிக்கை 20 மில்லியன்கள் ஆகும். காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் – I (MNREGA Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme ) மூலம் 14 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டதாக காங்கிரஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இதுவே MNREGA – II வில் வறுமையிலிருந்து வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 25 கோடியாகும்.
இந்த முறை ஆட்சி காங்கிரஸ் வசமாகும் பட்சத்தில் இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் இந்தியாவில் இருக்கும் 5 கோடி குடும்பங்கள் பயனடையும். இந்தியா முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 20 சதவிகித மக்கள் இதனால் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுந்தம் ஆய் யோஜனா (NYAY – Nyuntam Aay Yojana) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத்திட்டத்தில் பயன்பெறும் நபரின் மாத வருமானம் 12,000 த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மூவர் குழு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து இத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூபாய் 3.6 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.

பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் நிதியமைச்சருமான அருண்ஜெட்லி காங்கிரசின் இந்தத் திட்டம் வெறும் கண்துடைப்பு என விளாசியுள்ளார். மேலும் பாஜக தலைமையிலான அரசு இதைவிட அதிக பயனுள்ள திட்டங்களை எல்லாம் செயல்படுத்திவருதாக தெரிவித்திருக்கிறார்.
பிரேசில் அமெரிக்கா ஆகியநாடுகளில் இம்மாதிரியான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இதுவே முதன்முறை.