கடந்த 2016 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு, அச்சடிக்க வேண்டிய புது ரூபாய் நோட்டுகளின் பட்டியலில் ரூபாய் 11 மற்றும் ரூபாய் 21 ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தியதாக தகவல் கசிந்தது. இந்திய ரிசர்வ் வங்கி இதனைக் கடுமையாக மறுத்ததால் இதைப்பற்றிய பேச்சுகள் குறைந்துவிட்டன. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கம், பணம் வந்தால் போதும் என்ற மன நிலையில் மக்களை நிறுத்தியிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் மேர்ஷி (Rajiv Mehrishi), இப்புதிய ரூபாய் 11 மற்றும் ரூபாய் 21 நோட்டுகளின் தேவை குறித்து அமைச்சகத்தில் பல விவாதங்கள் நடந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதனை Shagun என்னும் பெயரில் கொண்டுவர மத்திய அரசிற்குத் திட்டம் இருந்தது. Shagun என்றால் மொய், கடவுளிற்கு அளிக்கப்படும் பணம் என்று அர்த்தமாம்.
கலர் கலர் பணம்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போது அதற்கு மாற்றாக புது நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்றார் மதிப்பிற்குரிய பிரதமர். முதலில் வந்த 2000 ரூபாய், பின்னால் வந்த 500, 100, 50, 200 என அனைத்து நோட்டுக்களுமே வாய்ப்பிருக்கும் எல்லா நிறங்களிலும் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தன.
எப்போதும் ஒரு ரூபாய் பெரிய பணத்துடன் தான் சேர்த்து சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அந்தத்திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்ததாக பின்னர் ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் வருடந்தோறும் புதிய நோட்டுகள் அச்சடிப்பதைப் பற்றிய கோரிக்கைகள் வைக்கப்படுவது நடைமுறையில் இருக்கும் வழக்கம்தான் என ரிவர்வ் வங்கியின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிப்பது புதிது அல்ல. 5, 10 மற்றும் 50 பைசாக்கள் ஏற்கனவே இப்படி வாபஸ் வாங்கப்பட்டிருக்கிறது. இதேபோல் 1934 மற்றும் 1954 ஆகிய ஆண்டுகளில் 10,000 ரூபாயும் செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய பிரச்சனை
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை நாட்டில் உள்ள பாதிக்கும் அதிகமான ATM மையங்கள் 200 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வசதியைப் பெறவில்லை. இதற்கான தரமேம்பாட்டுப் பணிகள் இன்றுவரை நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
புதிய 200 ரூபாய் நோட்டுகளை வைக்கும் அளவிற்கு ATM களில் மாற்றம் கொண்டுவருவதே தற்போதிய ஒரே இலக்கு என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பொருளாதாரம் பற்றிய தகவல்கள் என்றும் பகீர் வகைதான். கடந்த வாரம் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தம் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது மக்கள் அடைந்த பயத்திற்கு அளவே இல்லை. இந்தச் செய்தியும் அதே வகைதான்.