அரசுப் பணிகளில் SC/ST பிரிவினர் பதவி உயர்வு பெற வழியே இல்லை

0
47
creamy layer

‘தனி ஒருவன்’ திரைப்படம் நினைவிருக்கிறதா? ஒவ்வொரு சிறிய செய்திக்கும் பின்னால் ஆயிரம் பெரிய செய்திகள் நம் கண்ணிலிருந்து மறைக்கப்படலாம். அப்படித் தான் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது எந்த வயதுப் பெண்களும் இனி சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பு. அதைப் பற்றி நாடே விவாதித்துக் கொண்டிருக்க, நாம் கவனிக்க மறந்த அல்லது கவனத்திற்கு கொண்டு வராமல் மறைக்கப்பட்ட தீர்ப்பு தான், அரசு பணி உயர்வுகளில் SC/ST பிரிவினரை கிரீமி லேயரில் (Creamy Layer) வைத்த தீர்ப்பு.

பணி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தானே ரத்து செய்யப்பட்டது என்கிறீர்களா? நமக்குச் சொல்லப்பட்டது அவ்வளவு தான். உண்மையில் SC/ST பிரிவினருக்கு பணி உயர்வே கிடைக்காத வண்ணம் வழி செய்திருக்கிறது இந்தத் தீர்ப்பு.

வழக்கின் வரலாறு

அரசு உயர் பதவிகளில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் சலுகைள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்க்கு அரசுப் பணிகளில் வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக் கட்டாயமில்லை. பொருளாதார நிலையைக் கணக்கில்கொண்டு, பின்தங்கிய நிலையில் அவர்கள் இருப்பதற்கான தரவுகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை மறுபரீசிலனை செய்யக்கோரி மத்திய அரசு நீதிமன்றத்தில் முறையிட்டது. தீர்ப்புக்கு எதிராகப் பல அமைப்பினர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். தொடர்ந்து, 2006-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

அரசுப் பணிகளில் உள்ள பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாகத் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வெகுநாள்களாக நடந்து வந்தது.  இந்த வழக்கிற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.

கிரீமி லேயர்

இந்தத் தீர்ப்பில் SC/ST பிரிவினருக்கு அரசு பணி உயர்வுகளில் இடஒதுக்கீடை ரத்து செய்ததோடு அவர்களை கிரீமி லேயரில் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீமி லேயரில் இருப்பவர்கள் அவர்களது வருமானத்தைக் கொண்டு, அரசு தரும் சலுகைகளில் இருந்து விலக்குப் பெற்றவர்கள்.

இங்கு வருமானம் எல்லாம் கணக்கில் இல்லை. அரசு பணியில் இருந்தாலே இனி அப்பிரிவினர் கிரீமி லேயரில் தான் வருவார்கள். எந்த சலுகைகளும், இட ஒதுக்கீடும் இன்றி பொதுப் பிரிவினராகக் கருதப் படுவார்கள். என்றாலும், நேரடியாகத் தேர்வெழுதி உயர் பதவிகளில் அமர்பவர்கள் அமரலாம். ஆனால், நான்காம் நிலை, ஐந்தாம் நிலை ஊழியர்கள் இனி அந்த நிலையிலேயே தான் கடைசி வரை பணியாற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு SC/ST பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் தேர்வெழுதி நீதிபதி ஆகலாம். ஆனால், அவர் அதில் பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆக முடியாது. முதல் நிலைப் பதவிகளான உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் பணியிடங்கள் அனைத்துமே பணி உயர்வின் மூலமே தற்போது நிரப்பப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் உயர் பதவிகளை அடைவதை இந்தத் தீர்ப்பு நிரந்தரமாக தடை செய்கிறது என்றே தோன்றுகிறது.

அறிந்து தெளிக
வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரீமி லேயர். அதாவது வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் OBC பிரிவினருக்கு பணி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது. ஆனால், SC/ST பிரிவினர் மாதம் 8000 ரூபாய் சம்பளம் பெற்றாலும் அவர்களுக்கு பணி உயர்வு மறுக்கப்படும்.

அரசியமைப்பு இதைத் தான் விரும்பியதா ?

காலம் காலமாக சாதியின் பெயரால் கொடுமைகளுக்கும், தீண்டாமைக்கும் ஆளான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர்களுக்குத் தனிப் பட்டியலே அமைத்து அவர்கள் நலனிற்கு வழி செய்தது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அவை அனைத்தும் அவர்கள் அந்தக் கொடுமைகளில் இருந்து காக்கப் பட வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல. துணிவோடு அவர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக அவர்களே போராட வேண்டும் என்பதற்காகவும் தான்.

ஆனால், இன்று உச்சநீதி மன்றம் இடது கையால் வழங்கியதை, வலது கையால் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.