குழந்தைகளைத் துன்புறுத்தும் மத நம்பிக்கைகள் தேவை தானா? உண்மையாகவே அவற்றிற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்று விவாதிக்கிறது இக்கட்டுரை.
ஆடி – திருவிழாக்களின் மாதம்
தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஆடி மாதம் என்பது திருவிழாக்களுக்கான மாதம். தெருவிற்குத் தெரு கொலு வீற்றிருக்கும் ஏராளமான அம்மன் கோவில்கள் இம்மாதத்தில் தான் கோலாகலமாகக் காணப்படும். குறிப்பிட்ட நாட்கள் விரதமிருந்து தங்கள் நேர்த்திக்கடனை கோவில்களில் செலுத்துகின்றனர் மக்கள். நேர்த்திக்கடன் என்ற பெயரில் திருவிழா சமயங்களில் தேர் இழுத்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், தீ மிதித்தல், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்தல், கழுவேற்றுதல் (தசாவதாரம் கமல் போன்று முதுகில் கொக்கி மாட்டித் தொங்க விடுதல்) போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மூட நம்பிக்கையா? முன்னோர்களின் யுக்தியா?
பெரியவர்கள் செய்வது மட்டுமில்லாமல், குழந்தைகளையும் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது கூட, குழந்தைகளைக் கட்சியினர் வேண்டுதல்கள் செய்ய வைத்தது சர்ச்சைகளுக்கு உள்ளானது. இருப்பினும், மதம் சார்ந்த ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் ஏதேனும் அறிவியல் ரீதியான காரணம் இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எல்லாவற்றிற்கும் இல்லாவிட்டாலும் சில மத ரீதியான சடங்குகளுக்குக் காரணங்கள் இருக்கின்றன என்பதே உண்மை.
அது போல, இத்தகைய குரூர நேர்த்திக்கடன்களுக்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. மன்னர்கள் காலத்தில், வீரர்கள் போர் இல்லாத சமயங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களாம். ரத்தத்தைப் பார்த்து பயம் வரக்கூடாது என்பதற்காகவும், வலியைத் தாங்க உடல் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற பழக்கங்கள் ஏற்படுத்தப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.
48 நாட்கள் விரதம்
பொதுவாக கோவில்களில் திருவிழா சாட்டி விட்டால், அந்த 48 நாட்களுக்கு குறிப்பிட்ட ஊர் மக்கள் அனைவரும் விரதம் இருப்பார்கள். அந்தநாட்களில், அசைவம் சாப்பிடுதல், மது அருந்துதல் போன்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள். இன்னும் ஒரு சிலர், அந்த 48 நாட்களும் ஒரு நேரம் மட்டும் உணவு எடுத்துக் கொண்டு கடும் விரதத்தை மேற்கொள்வர். இது காலம்காலமாக வரும் வழக்கம் தான் என்றாலும், பகுத்தறிவுவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்த நம்பிக்கைகள் அனைத்தும் விவாதங்களுக்கு உள்ளாகின்றன. “எந்த சாமி தன்னைத் தானே வருத்திக்க சொல்லுச்சு?” , ” எந்த சாமி சாப்பிடாத பட்டினியா கெட னு சொல்லுச்சு?” என்று பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

ஆனால், அறிவியல் ரீதியாக இந்த ஒரு மண்டலம் எனும் யுக்தி நிரூபணமான ஒரு கணக்கு. உதாரணமாக, சித்த மருத்துவர்கள் நோய் குணமாக 48 நாட்கள் ஒரு மருந்தைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். உடலும் மனமும் ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை முழுதாக ஏற்றுக் கொள்ள 48 நாட்கள் தேவைப்படும்.
அதனால், தீய பழக்கங்களைக் கடவுளுக்காக என்று ஒரு மண்டலம் செய்யாதிருப்பதன் மூலம் அத்தகைய பழக்கங்களில் இருந்து நிரந்தரமாக விடுபட வாய்ப்புள்ளது.
திராவிடர்களும் – பழங்குடியினரும்
இன்னமும் நாகரீக வாசம் என்னவென்றே அறியாமல் வாழும் பழங்குடியின மக்கள் நம் நாட்டில் உண்டு. அவர்களிடம் இது போன்ற பல பழக்க வழக்கங்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல முழுக்க முழுக்க மூட நம்பிக்கைகள் தான். எனினும், நாம் இன்று பின்பற்றும் காது குத்துதல், மூக்கு குத்துதல், இன்னும் சில இடங்களில் துளையிட்டு ஆபரணம் மாட்டுதல், பச்சை குத்துதல் போன்றவை நம் ஆதிக் குடியினரிடம் இருந்து நாம் பெற்றதே ஆகும்.
ஆரியர்களிடம் இது போன்ற பழக்கங்களை நாம் காண முடியாது. இது திராவிடர்களும், பழங்குடியினரும் மட்டும் பின்பற்றும் பழக்கவழக்கங்கள்.

நேர்த்திக்கடன்கள் சரி தானா?
இத்தகைய உடலை வருத்திக் கொள்ளும் நேர்த்திக்கடன்களுக்கு என்ன காரணங்கள் சொல்லப்பட்டாலும், அறிவியல் ரீதியாக சரியானவையாக இருந்தாலும், அந்தக் காரணங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறதா என்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். நாம் அறிவியல் ரீதியாகச் சொன்னாலும், அவர்கள் அதை நம்பிக்கையாகத் தான் செய்கிறார்கள். முக்கியமாகக் குழந்தைகளை சித்திரவதை செய்யும் நம்பிக்கைகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை. குழந்தைகளை இத்தகைய கடும் வேண்டுதல்களை செய்ய வைப்பவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் மூட நம்பிக்கைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.