ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளும்… வீணாகும் உணவுகளும்

0
52

சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உணவு இல்லாமலும், தகுந்த ஊட்டச்சத்தில்லாமலும் ஆயிரக்கணக்கில் மடிகின்றனர் என்ற செய்தி நமக்குப் பரிதாபத்தைத் தரும் அதே வேளையில் மற்றொரு அதிர்ச்சிச் செய்தி, உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகி அழிந்து போகிறது என்பது தான்.

இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 40% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கின்றன. மற்றொரு பக்கம் இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் 58000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப்பொருட்கள் வீணடிக்கப் படுகின்றன. அதிர்ச்சியாக இருக்கிறதா? விவசாய நிலங்களிலேயே வீணாகுதல், போக்குவரத்தில், சேமித்து வைக்கும் இடங்களில், இயற்கையால் வீணாகும் உணவுகள் மட்டுமன்றி, விருந்து, கேளிக்கை மற்றும் ஆடம்பர காரணங்களுக்காக வீணாக்கப் படும் உணவுகளும் இதில் அடங்கும்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறி

உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோலின் படி, ஒரு குழந்தை அதன் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் இருந்தாலோ, அல்லது பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து காணப்பட்டாலோ, உள்ளங்கால்கள் வீக்கம் கண்டிருந்தாலோ அக்குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படிருக்கிறது என்று அர்த்தம்.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு

உலகளவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

2005-15 வரை, பச்சிளம் குழந்தைகள் மற்றும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில், இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Credit : Thomson Reuters

உலகளவில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கையில், 50 சதவீதம் இந்தியாவில் உள்ளது. 2015-இல், இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. நகரங்களில் வசிக்கும் குழந்தைகளை விட, கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான் ஊட்டச்சத்து விஷயத்தில் பின் தங்கி உள்ளனர்.

அறிந்து தெளிக!
இந்தியாவில் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் மொத்தம் சுமார் 1.11 லட்சம் ஊட்டச்சத்துக்  குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 19,980 குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஓரளவு பாதிக்கப்பட்ட குழந்தைகள் 29,442 பேர் உள்ளனர்.

தமிழகக் குழந்தைகள்

2017-ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8% பேர் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய சராசரியை விட அதிகமாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து தெளிவான ஆய்வுகள் நடத்தப்படுவது இல்லை. மாநிலத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டமும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை – உயரத்தை சரியாகக் கணக்கிடுவதில்லை. அதற்கான வசதி அவர்களிடம் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்தியாவில் வீணாக்கப்படும் உணவுகள் – ஒரு பார்வை

  • இந்தியாவில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாத்து வைக்கும் வசதிகள் இல்லாததால், ஆண்டு தோறும் 21 மில்லியன் டன் கோதுமை வீணாவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாறு வீணாகும் கோதுமையானது, ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த கோதுமைக்கு சமமாகும்.
  • குளிர்பதனப் போக்குவரத்து இல்லாமை, மோசமான சாலைகள், மோசமான வானிலை மற்றும் ஊழல் போன்றவற்றால் இந்தியாவில் குறைந்தபட்சம் 40 சதவீத பழங்கள், காய்கறிகள் வீணாகின்றன.
அறிந்து தெளிக!
வீணாகும் அல்லது நாம் வீணாக்கும் உணவுப் பொருட்களை எடையை வைத்தோ அல்லது பணத்தை வைத்தோ மதிப்பிடல் கூடாது. உலகம் முழுவதும் ஒரு நாளில் வீணாகும் உணவுப் பொருட்களை வைத்து, பசியால் தவிக்கும் மக்களுக்கு நான்கு வேலை உணவளிக்கலாம். 
  • தேவைக்கு அதிகமாக வாங்கும் பழக்கமும் பிரச்சனைக்கு ஒரு காரணம். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவை வழங்கத் தேவைப்படும் இயற்கை வளங்கள் பூமியில் குறைவாகவே உள்ளன. இப்போதுள்ள மக்களின் இயற்கை நுகர்வுக்கே 1.7 அளவு பூமி தேவையாக இருக்கிறது. மேலும், இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இன்னும் கூடுதலாக முன்னூறு கோடி பேருக்கு உணவளிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். எனவே உணவை வீணாக்குவது இனியும் தொடரக் கூடாது
Credit : Granma

 

  • சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கூடுதலான நிலங்களை விவசாயத்திற்குப்  பயன்படுத்துவதும் சிரமமான விஷயம் என்பதால் விவசாயத்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது.

இவை அனைத்திற்கும் மேல், நம்மால் முடிகிறது என்பதற்காக உணவை வீணாக்குவதைத் தவிர்க்கத் தொடங்குங்கள். மனிதனால் போதும் என்று சொல்ல முடியும் ஒரே தேவை உணவு மட்டுமே. முடிந்த வரை உங்கள் அருகில் உணவுக்குத் தவிக்கும் ஏதேனும் ஒரு குழந்தையைப் பார்த்தால் … கண்டிப்பாகப் பார்ப்பீர்கள் அந்தக் குழந்தைக்கு  உணவளியுங்கள். உணவின்றி ஒரு மனிதன் உயிரிழக்கவே கூடாது. அது மொத்த மனித இனத்திற்கான அவமானம்.

நீடூழி வாழ்க.