உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு வாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய 10 அதிரடித் தீர்ப்புகள்!

0
62

பராசக்தி திரைப்பட பாணியில் சொல்ல வேண்டுமென்றால், நம் நீதிமன்றம் பல விசித்திரம் நிறைந்த வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. பல வித்தியாசமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கி இருக்கின்றனர். ஆனால், சமீப காலமாக ஒரு சேர ஆதரவையும் சர்ச்சையையும் பெறும் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி வருகிறது. அவற்றில் மிக முக்கியமாக நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சில தீர்ப்புகளை இக்கட்டுரையில் காணலாம்.

10. ஷரத்து 66A ரத்து

நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் இன்று சுதந்திரமாக அரசையும், அரசியல் தலைவர்களையும் விமர்சிக்கிறோம் எனில், அதற்குக் காரணம் இந்தத் தீர்ப்பு தான். 2015-ஆம் வருடம் ஷரத்து 66A உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் இந்த ஷரத்தின் படி, இணையத்தில் ஆட்சேபிக்கக் கூடிய கருத்துகளைப் பதிவு செய்தல் குற்றம். இதைத் தான் அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது உச்ச நீதி மன்றம். இந்தத் தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால், இந்நேரம் மொத்தத் தமிழ்நாடும் சிறைக்குள் தான் இருந்திருக்க வேண்டும்.

9. விசாகா கமிட்டி

பணியிடங்களில் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு முடிவு கட்ட, 1997 -ஆம் வருடம் 10 பெண்களுக்கு மேல் பணி புரியும் ஒவ்வொரு அலுவலகத்திலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

8.நோட்டா

இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்த போதும், 2013 – ஆம் ஆண்டு ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்ற தேர்வை வாக்குப்பதிவில் கொண்டு வரத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் பின் தான் நோட்டா பொத்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தப்பட்டது. 2015 – இல் நோட்டாவிற்குத் தனிச் சின்னமும் அறிமுகப்படுத்தப் பட்டது. இன்று பல கட்சிகள் நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெற இந்தத் தீர்ப்பு தான் காரணம்.

7. அரசியல்வாதிகள் மீதான குற்றவியல் வழக்குகள்

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாகும். பதவியில் இருக்கும் சட்டமன்ற அல்லது பாராளு மன்ற உறுப்பினர்களின் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், குறிப்பிட்ட வருடங்களுக்குத் தேர்தலில் போட்டி இடவும் முடியாது என 2013 – ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். நாட்டின் பல அரசியல்வாதிகள் தலையில் இடியாய் இறங்கியது இந்தத் தீர்ப்பு.

6. முத்தலாக் ரத்து

35 வயதான சாய்ரா பானு, 15 வருடங்களாகத் தன்னுடன் வாழ்ந்த தன் கணவர் இஸ்லாமியச் சட்டப்படி, மூன்று முறை தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்து விட்டதாக வழக்குத் தொடர்ந்தார். முத்தலாக் கூறி விவாகரத்து செய்தல் நாட்டின் சட்ட விதிகளுக்குப் புறம்பானது எனக் கூறி அந்த முறையைத் தடை செய்தது உச்சநீதி மன்றம். இதற்கு இன்னும் கூட இஸ்லாமிய மக்களிடம் பலத்த எதிர்ப்பு இருக்கிறது.

5. லவ் ஜிஹாத்

கடந்த 2017 மே மாதம் , கேரளாவைச் சேர்ந்த ஹாதியா மற்றும் ஷாபின் ஆகியோரின் திருமணத்தை ரத்து செய்து கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அவர்களின் திருமணத்திற்கு எதிராக ஹாதியாவின் பெற்றோர் தொடர்ந்த இவ்வழக்கில், மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் திருமணம் செய்து, இஸ்லாம் மதத்திற்கு அவர்களை மாற்றும் முயற்சி ‘லவ் ஜிஹாத்’. இதன் அடிப்படையில் ஹாதியா மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார் என்று வாதிட்டனர். இந்த வழக்கின் மேல் முறையீட்டில், இந்த வருடம் மார்ச் மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 25 வயதான பெண்ணிற்கு தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது எனக் கூறி, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன் கடுமையாகக் கண்டித்தது.

4.மரணம் அடிப்படை உரிமை

மார்ச் 2018 ல் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கௌரவத்துடன் இறப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை எனத் தீர்ப்பளித்தது. அதாவது ஒரு நோயாளியின் உடல் மருத்துவத்திற்கு ஒத்துழைப்புத் தரவில்லை எனில், அந்த நபர் விரும்பினால் அவர் மரணத்தைத் தானாக ஏற்கலாம். இந்தத் தீர்ப்பிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பின.

3. திருநங்கைகள் இனி மூன்றாம் பாலினத்தவர்

முன்பெல்லாம் விண்ணப்பங்களில், பாலினத் தேர்வில் ஆண் அல்லது பெண் ஆகிய இரண்டு பாலினங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். திருநங்கைகள் அவற்றில் தான் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், 2014 – ஆம் வருடம் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்தது. இது அவர்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம உரிமை பெற வைக்கப்பட்ட முதல் அடி ஆகும்.

2. திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழும் உரிமை உள்ளது. அது  மட்டுமின்றி திருமணம் செய்து கொள்வதற்கான தகுதியை எட்டா விட்டாலும் கூட,  18 வயது பூர்த்தி ஆன ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது எனக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது . இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பையும், பெற்றோர்களிடையே பெரும் அதிர்வலைகளையும் உருவாக்கியது இந்தத் தீர்ப்பு. காலத்திற்கேற்ப மாறுவதும், மாற்றப்படுவதும் தானே அனைத்துச் சட்டங்களும்.

1. ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி

நேற்று வழங்கப் பட்ட இந்தத் தீர்ப்பு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாகும். பாலின பாகுபாடு இன்றி விரும்பியவரை நேசிக்க அனுமதி வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு காதலைப் பொதுவுடைமை ஆக்கி இருக்கிறது. பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுக்குப் பெயர் போன ஒரு நாட்டின் பெரும்பாலான மக்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஏற்றுக்கொண்டவர்கள் சட்டத்தின் அனுமதியோடு சுயமரியாதையோடு வாழட்டும். வாழ்வார்கள். நீடூழி வாழ்க.

Image credits : MSNBC.com