மீண்டும் அனல் பறக்கத் தொடங்கும் சிரியா போர்

0
50

சிரியா போர் மீண்டும் உக்கிரமாக தொடங்கி இருக்கிறது. சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட 8 வருடங்களாக நடந்து வரும் இந்த போர் உள்நாட்டுப் போர் என்று சொல்லப்பட்டாலும் உலக வல்லரசுகள் இப்போரில் முக்கிய பாத்திரங்கள் ஏற்றிருக்கின்றனர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இதனால் சிரியா அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.

ரஷ்யா இந்த போரில் சிரியா அரசுக்கு ஆதரவளிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முதலில் சிரியா ரஷ்ய நாட்டின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது.எனவே சிரியாவை ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முனைகிறது.இரண்டாவதாக பனிப்போரில் சிரியா ரஷ்யாவிற்கு உதவியது அப்போது முதல் சிரியா அதிபர் குடும்பமும் ரஷ்யாவும் கொஞ்சம் நெருக்கம்.

அடுத்ததாக ஈரான் சியா நாடு. சிரியாவில் நடப்பது சியா ஆட்சி. ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் சன்னி இன மக்கள். அங்கு சியா ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே ஈரான் தற்போது சிரியாவிற்கு உதவி வருகிறது. இதற்காக பெரும் நிதியும் அந்நாட்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது

அதேபோல் சவூதி எப்போதும் ஈரானிற்கு எதிரான நிலைப்பாடையே கொண்டிருக்கிறது. சவூதியில் பெரும்பான்மை மக்கள் சன்னி இன மக்கள். இதனால் சவூதி சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தருகிறது. இது தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

சிரியா கிளர்ச்சியாளர்களில் குர்தீஷ் இன மக்களும் அடக்கம். இதனால் போரில் துருக்கி நாடு உள்ளே வருகிறது. போராளி குழுக்களுக்கு உதவும் இரண்டாவது பெரிய நாடு துருக்கி ஆகும்.

இந்தப் போரில் அமெரிக்கா இரட்டை விளையாட்டு விளையாடி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவது போல் காட்டிக்கொள்ளும் அதே நேரத்தில் பெரிய ஆயுதங்கள் அவர்கள் கையில் கிடைக்காமலும் பார்த்துக் கொள்கிறது. சிரியா போர் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக பெரும் பங்காற்றி வருகிறது அமெரிக்கா.

இங்கு பெரிய நாடுகள் ஆர்வம் கொள்ள வேறு பல காரணங்களும் உண்டு. சிரியா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. அரபு நாடுகளில் வணிகம் செய்ய சிரியாவின் கடல் வேண்டும். இந்த கடல் வழியாகத்தான் முக்கிய போக்குவரத்துகள் நடக்கின்றன. இது மட்டுமில்லாமல் இஸ்ரேல் நாட்டை கண்காணிக்கவும் சிரியாவின் உதவி வேண்டும். இதனால் அந்நாட்டை யார் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது என்ற போட்டி தான் போருக்கு முக்கிய காரணம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு இருந்தாலும் பாதிக்கப்படுவதும் கொன்று குவிக்கப்படுவதும் அப்பாவி பொதுமக்கள் தான்.

உலக நாடுகளே…ஓர் இனம் வாழ வழி தெரியாமல் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை வல்லரசுகளைப்போல பணமோ, பொருளோ அல்ல; அமைதியான வாழ்க்கை மட்டுமே.

நீடூழி வாழ்க…