ஓய்வு பெற்றார் தீபக் மிஸ்ரா – புதிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்

0
44
chief justice of india

உச்சநீதி மன்றத்தின் 46 – வது தலைமை நீதிபதியாக, நீதிபதி ரஞ்சன் கோகாய் (Ranjan Gogoi) பதவி ஏற்றுள்ளார். அவருக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரஞ்சன் கோகாய்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் நேற்றோடு (அக்டோபர் 2-ம் தேதி) முடிந்து அவர் ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தரான நீதிபதி ரஞ்சன் கோகாய், அசாமில் வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு 2001-ஆம் ஆண்டு கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார்.

பின்னர், 2012-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பல்வேறு வழக்குகளைச் சந்தித்த நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தற்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் 17-ம் தேதி வரை உள்ளது.

தீபக் மிஸ்ரா அளித்த  முக்கியமான தீர்ப்புகள்

தனது பதவிக்காலத்தில் தீபக் மிஸ்ரா பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். புயலுக்குப் பின் அமைதி என்பது போல நாட்டையே புரட்டிப் போட்ட தீர்ப்புகளை வழங்கி விட்டு இப்போது ஓய்வு பெற்றிருக்கிறார். தீபக் மிஸ்ரா அளித்த சில முக்கியத் தீர்ப்புகளை இங்கே காணலாம்.

1. திரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர்.

2. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் அதனை வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்’ என்று 2016 செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதியன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது.

3. 2016, மே மாதம் 13-ஆம் தேதியன்று, குற்றவியல் அவதூறு நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என்று கூறிய உச்ச நீதிமன்ற சட்ட அமர்வில் நீதிபதி மிஸ்ராவும் ஒருவர்.

4. 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுகள் வெடிப்பு சம்பவத்துக்குக்  காரணமான குற்றவாளி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், தூக்கு தண்டனைக்குத் தடை விதிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

2013, ஜூலை 29-ஆம் தேதி இரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டு அந்த மனுவை தீபக் மிஸ்ரா உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வாதங்கள் முடிந்தபிறகு காலை ஐந்து மணிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில், ‘யாகூபுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது, நீதியை ஏளனம் செய்வதற்கு ஒப்பானதாகும், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டது.

5. நாட்டில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளான தீர்ப்பு தன்பாலின ஈர்ப்பிற்கு எதிரான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 377 நீக்கப்பட்டது ஆகும். இதன் மூலம் ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக்கிய தீர்ப்பை அளித்த அமர்வில் தீபக் மிஸ்ராவும் ஒருவர்.

6. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு கிரிமினல் குற்றமல்ல என்று, தீபக் மிஸ்ரா உள்ளடங்கிய நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு நாடு முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

7. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் எந்த வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பிலும், தீபக் மிஸ்ராவின் பங்கு இருந்தது.