முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்லன்.
சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினியின் பேச்சை தாமதமாக அடுத்த நாள்தான் கேட்க முடிந்தது. அதுவும் சிறிதளவே (20 நிமிடங்கள் இருக்கும்) கேட்டேன். திரையரங்கில் ஒரு திரைப்படம் பார்க்கும் போது, ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே கூட சில நேரங்களில் பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதை நம்மில் சிலர் கண்டுபிடித்துவிடுவோம். சில நேரங்களில் இறுதிக்காட்சியைக் கூட முன்கூட்டியே யூகிக்கமுடியும். ரஜினியின் பேச்சும் அப்படிதான் இருந்தது. பல லாஜிக் ஓட்டைகள் இருந்ததால், என்னால் தொடர்ந்து பார்க்கவும், கேட்கவும் முடியவில்லை. மேலும், இறுதிக்காட்சியை யூகிக்க முடிந்த படியால் முழுவதும் பார்க்க விருப்பமும் இல்லை, இப்போதுவரை.
நான் பார்த்தவரை, எனக்கு லாஜிக் ஓட்டையாக பட்டவை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவைகள் கேள்வி/பதிலாக இங்கே.
ரஜினிகாந்த்: எம்.ஜி.ஆர் விழாவில் சினிமாத்துறைக்கு ஏன் அழைப்பு இல்லை?
கேள்வி: எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் என்று இந்த அரசு, அரசுப்பணத்தில் விழா கொண்டாடுகிறதா? இல்லை. அவர் ஒரு முன்னாள் முதல்வர் என்பதற்காகத்தான். அதற்கு ஏன் திரைத்துறையினருக்கு அழைப்பு கொடுக்க வேண்டும்?
எம்.ஜி.ஆர் ஒரு நடிகன்; அவருக்கு விழா எடுத்து பெருமைப்படுத்த வேண்டும் என்று நீங்கள் உட்பட்ட திரையுலகம் முற்பட்டால், தடுக்க யார் இருக்கிறார்கள்? வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கிரிக்கெட் போட்டியெல்லாம் நடத்தி கையேந்துகிறீர்களே. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் என்று போய் பாத்திரம் ஏந்த தெரிந்த உங்களுக்கு, இங்கே நடத்த முடியாதா?
அரசு நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மீதே மக்கள் வெறுப்பு கொண்டுள்ளனர் என்பதை தொலைநோக்குள்ள உங்கள் ரசிகர்கள் உங்களிடம் சொல்லவில்லையா?
நடிகர் என்பதால் உங்களுக்கு பாசம் வருமாயின், சமீபத்தில் நடிகர் சிவாஜி சிலையை அகற்றிய போது உங்கள் திரைத்துறையினர் கொடுத்த குரல் என்ன… நீங்கள் ஏதாவது பேசினீர்களா?
ஏன் நீலிக்கண்ணீர் ரஜினி? திடீரென்று எம்.ஜி.ஆர் மீது இவ்வளவு பாசம்?
ரஜினிகாந்த்: ஏன் ஏளனம் செய்கிறீர்கள்?
கேள்வி: உங்கள் ரசிகர்கள், இல்லை இல்லை… தீவிர ரசிகர்கள் தவிர பிறர் அனைவரும் ஏளனம் செய்கிறார்கள்.
தலைமைப் பண்பு உள்ளவர் ஏளனம் செய்வோரை பொருட்படுத்த மாட்டார். அவர் அமைப்பதே பாதை என்று அதிலே தொடர்ந்து பயணிப்பார். வல்லான் வகுத்ததே வாய்க்கால். இதிலிருந்தே தெரிகிறது உங்களிடம் தலைமைப்பண்பு இல்லை இல்லை என்று.
சரி.. ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்பதற்கு பதில் தெரியுமா? அதாவது, அவர்கள் ஏளனம் செய்யும் படி தங்களது செயல் இருப்பதால் தான் ஏளனம் செய்கின்றனர்.
(எ.கா: இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, ஓய்வு பெரும் வயதில் நாங்கள் மட்டுமே ஓட்டப்பந்தயத்துக்கு வருவோம் என்று 67 வயதான நீங்கள் கூறினால் ஏளனம் செய்யாமல்…)
ஏளனம் செய்யும்படி பல ஆண்டுகாலம் அனுபவம் உள்ள ‘செயலே’ இருக்கிறார். நீங்கள் எம்மாத்திரம்?
ஆனால் ஒன்று, ஏளனம் என்ற அந்த நல்ல தமிழ் சொல்லை உதிர்த்தமைக்கு நன்றி.
ரஜினிகாந்த்: எம்.ஜி.ஆர் எனக்கு நிறைய உதவி இருக்கிறார். அவர் நல்லவர்.
கேள்வி: உங்களுக்கு உதவினால் எங்களுக்கு நல்லவரா? அது ‘முகஸ்துதி’ பாடி பெற்ற பரிசில் இல்லையா… ? இன்றைய ஜனநாயக நடைமுறையில் எம்.ஜி.ஆர் செய்ததற்கு பெயர் ‘அதிகார துஷ்பிரயோகம்’. நீங்கள் பெற்றதற்கு பெயர் ‘குறுக்கு வழியில் நன்மை’. நீங்கள் நல்லாட்சி தரப்போகிறீர்கள்?
ஆனால் சிஸ்டம் சரியில்லை. இதை முன்பொரு நாள் உதிர்த்து விட்டு இப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி சிறந்தது, கலைஞர் நல்லவர், ஜெயலலிதா நல்லவர் என்றால், யாரால் அந்த சிஸ்டம் சரி இல்லாமல் போனது?
இங்கே மக்கள் அனைவரும் காமராஜர் ஆட்சி வேண்டும் எனக்கேட்டால் இவர் எம்.ஜி.ஆர் போல் நல்லாட்சி தருகிறாராம்.
அதோடு, உங்கள் மண்டையில் சிஸ்டம் சரி இல்லை என்று நான் காணொளியை நிறுத்திவிட்டேன்.
‘பெரியார் சிலை இடிப்பு’ பரபரப்பில், நேற்றே பதிய முடியவில்லை. அதனால் இன்று.
இப்பதிவு பற்றி உங்களது கருத்துக்களை பகிரவும். நன்றிகள். வணக்கம். வாழ்க வளமுடன்!