கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியை போட்டியிடுமாறு கேரள காங்கிரஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் ராகுல் காந்தி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். ராகுலைக் காண பெருவாரியான மக்கள் அங்கு திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காயமடைந்த பத்திரிக்கையாளர்களுக்கு ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உதவி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வயநாட்டில் ராகுல்
தென்னிந்தியாவில் சரிந்துவரும் காங்கிரசின் செல்வாக்கை உயர்த்தவும், கம்யூனிஸ்ட்களின் கோட்டையான கேரளாவில் காங்கிரசை முன்னிலை பெற வைக்கவும் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் ராகுல் காந்தியை அங்கே போட்டியிடுமாறு வலியுறுத்திவந்தனர். பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு காங்கிரஸ் மேலிடம் இதற்கான ஒப்புதலை அளித்தது.
வேட்புமனுத் தாக்கல்
இதனிடையே நேற்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆகியோர் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றார்கள். அப்போது சாலையின் இருமருங்கிலும் மக்கள் கூடி ஆராவரம் செய்ய, சிறிதுநேரத்தில் கூட்டம் பெருகியது. ராகுல் காந்தியின் மனுத்தாக்கலைப் பற்றி தகவல் சேகரிக்க ஏராளமான பத்திரிக்கையாளர்களும் அங்கே கூடியிருந்தனர்.
அலுவலகத்தைவிட்டு ராகுல் வெளியே வந்ததும், அவரைக்காண மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் இரண்டு பத்திரிக்கையாளர்கள் காயமுற்றனர். அதில் ஒருவர் மயக்கமுறவே தகவல் ராகுல்காந்திக்கு தெரிவிக்கப்பட்டது.
The media bus met with an accident at the end of @RahulGandhi‘s roadshow in Wayanad. Few journalists were hurt.
Both RG and @priyankagandhi rushed to help them. pic.twitter.com/ijEOu8px25
— Srivatsa (@srivatsayb) April 4, 2019
உதவி
உடனடியாக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வர காயமுற்றவரை வண்டியில் ஏற்ற ராகுல் காந்தி உதவியிருக்கிறார். மேலும் அவருடைய ஷூக்களை பிரியங்கா காந்தி பத்திரமாக தனது கையில் வைத்திருந்திருந்தார். இதனை அருகிலிருந்தோர் வீடியோ எடுக்க அது சிறிது நேரத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ ஆரம்பித்தன.