மோடி முதல் எடப்பாடி, ரஜினி வரை அரசியல்வாதிகள் மௌனத்திற்கு 5 காரணங்கள்

Date:

இன்று, நேற்றல்ல அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாகவே மௌனம் சாதிக்க தெரிந்தவர்களாக இருந்து வருகிறார்கள். இந்திய நாடு என்று இல்லை; உலகில் பல நாட்டு அரசியல்வாதிகளும் கூட கள்ள மௌனம் சாதிக்கத் தெரிந்தவர்கள்.

அவர்கள் முழு நேர அரசியல்வாதிகளாக மாறுவதே இந்த மௌனத்தினால் தான்.

சிரிக்காமலே கூட இருந்த ஒரு அரசியல்வாதி நமக்கு பிரதமராக இருந்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா போன்ற சிறந்த இசையமைப்பாளருக்கு தெரியும் எந்த காட்சியில் இசைக்க வேண்டும்; எந்த காட்சியில் இசையின்றி விட வேண்டும் என்று. ராகுல் டிராவிட் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரருக்குத் தெரியும் எந்த பந்தை அடிக்க வேண்டும்; எந்த பந்தை விக்கெட் காப்பாளரிடம் விட வேண்டும் என்று. தேர்ந்த அரசியல்வாதிக்கு தெரியும் எப்போது பேச வேண்டும்; எப்போது பேசவே கூடாது என்று.

அரசியல் என்று வந்துவிட்டால் அனைத்துக்கும் கருத்துக்கள் கூறாது, மௌனம் சாதிக்க வேண்டும். அதுவும் கள்ள மௌனம்.

தேர்ந்த அரசியல்வாதிக்கு தெரியும் எப்போது பேச வேண்டும். எப்போது பேசவே கூடாது என்று.

செயல்படவே தேவையில்லாத, பேச்சு மட்டுமே ஆயுதமாகக் கொண்ட அரசியல் களத்தில் திடீரென்று சிலர் பேசுவதேயில்லை. சரி! அரசியல்வாதிகள் பேசாமல் இருப்பதன் காரணம் தான் என்ன? அவர்கள் பேசா ஊமைகளாகிப் போக பல உளவியல் ரீதியிலான காரணங்கள் சில உள்ளன. அவற்றை இங்கே காண்போம்.

1. பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர

அரசியல்வாதிகள் பேசாமல் இருக்க முழு முதற் காரணம் இதுவே. பேசாமல் இருந்தால் பிரச்சினை முடிந்துவிடும்.

திரு.மோடியை நோக்கி எதிர் கட்சிகள் மட்டுமின்றி மக்களும் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தாலும், அதற்கு திரு. மோடியின் பதில் மௌனமே.

பிரதமர் மோடியின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன பதில் கூறுவீர்கள்? மோடி இதற்கு முன்பு எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பல முறை காங்கிரஸ் தான் காரணம் என்று கூறிவிட்டார். அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால் இம்முறையும் காங்கிரஸே காரணம் என்று கூற முடியாது. மீதம் இருக்கும் ஒரே வழி கேள்வியை கண்டும் காணாமல் போய் விடுவது. மீறி அதற்கு ஏதாவது பதில் சொன்னால், அந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வராது.

பொதுவாக பிரச்சினைகளை வன்முறையால் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தையால் தான் தீர்க்க முடியும். ஆனால், அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் தெரியும், பேசாமலிருந்தாலே பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது.

reasons-behind-silence-of-politicians-Modi-vs-press

2. டோக்ஸோஃபோபியா (Doxophobia)- கருத்துக்கூற பயம்

ஃபோபியா என்றால் பயம். டோக்ஸோஃபோபியா என்றால் கருத்து சொல்வதற்கே ஏற்படும் பயம். பொதுவாக அரசியல்களத்தில் பலரும் அச்சமில்லாமல் இருப்பது போல் நடிப்பது வழக்கம்.  அதனால் அச்சப்படுவோர் உள்ளோர் எல்லாம் அறிவு இல்லாதவர்கள் என்று பொருள் இல்லை.

தங்களது கருத்துக்கள், திரித்து கூறப்படும் வாய்ப்பு இருப்பதால், முழு விவரமும் தெரியாமல் இருப்பதால் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும்.

secrets-behind-silence-of-politicians

சில எடுத்துக்காட்டுகள். தி.மு.க செயல் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களிடம் ‘குடியரசு தினம் எப்போது?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டால், பதில் தெரிந்தாலும் அவருக்கு நிச்சயம் அச்சம் வரும்; ஏனெனில், பல மாதங்களுக்கு முன்பு ஒருமுறை அவர் பிழையாக ஒரு தேதியைக் கூறியதால்.

கர்நாடக முன்னாள் முதல்வர் திரு.எடியூரப்பாவிடம், நீங்கள் பத்தாண்டுகளுக்கு முன்னர் கோரிக்கை வைத்ததுபோல், லிங்காயத்து தனி மதமாக அங்கீகரிக்கப்பட்டது. மகிழ்ச்சியா? என்றால் அவருக்கும் ஒரு பயம் வரும். மகிழ்ச்சி என்றால் பா.ஜ.க வின் கோபத்திற்கும், மகிழ்ச்சி இல்லை என்றால் லிங்காயத்து மக்களின் / ஓட்டுக்களின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.

3. எல்லாம் தெரிந்தமை

சில பகுதிநேர அரசியல்வாதிகள், தேறாத அரசியல்வாதிகள், வேறு வேலையேதும் இல்லாத அரசியல்வாதிகள் (சுப்ரமணிய சாமி) மட்டுமே (ஏதும் தெரியாவிடினும்) எல்லாம் தெரிந்தது போல் பேசுவர்.

ஜெயலலிதா, மன்மோகன் சிங் போன்றோருக்கு பல விவரங்களும் தெரியும். இருந்தும், எதுவும் பேசாமல் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்து விடுவர்.

Secrets behind silence of politicians

2G விவகாரம் பற்றி மன்மோகனுக்கு எல்லாம் தெரியும். இருந்தும் அவர் பல மாதங்களாக எதுவுமே பேசவில்லை. இவ்விவகாரம் மட்டுமல்ல; பேசினால் வரும் பின் விளைவுகள் எல்லாம் தெரிந்ததால் தான்.

4. ஏதும் தெரியாமை

ரஜினியிடம் சென்று நீங்கள் ‘கீழடி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றோ… அல்லது ஆதிச்ச நல்லூர் சிறு குறிப்பு வரைக’ என்றோ கேள்வி கேட்டால் என்ன கூறுவார். ‘நோ கமெண்ட்ஸ்’ என்று தான் கூறுவார். இப்போது கூட கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டால் ‘தலை சுற்றுகிறது’ என்றோ, ‘முழு நேர அரசியல்வாதி’ ஆகவில்லை என்றோ தான் கூற முடியும். ஏனெனில், எதுவும் தெரியாமை தான் காரணம்.

5. சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை

என்ன பேசினாலும் அதை இன்று நகைப்புக்குள்ளாக்க முடியும் அல்லது சர்ச்சைக்குள்ளாக்க முடியும். யார் கத்தினாலும், கதறினாலும் பேசாமல் இருந்து விட்டால் எல்லாம் நலம் தரும். ஏனெனில் மிகப்பெரிய இவ்வுலகில் மக்களை மறக்கடிக்க பல்வேறு சரக்குகள் இருக்கின்றன. இவ்வாறு பேசாமல் இருந்தால் சிலர் இந்தப் பக்கமும் இல்லாமல், அந்தப் பக்கமும் இல்லாமல் ‘மய்யமாக’ இருக்கிறார் என்று கூட மக்களில் சிலர் கற்பனை செய்து கொள்வர். இதைத்தான் கவியரசு கண்ணதாசன் 57 வருடங்களுக்கு முன்பே கூறினார் ‘சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை’ என்று.

ஜெயலலிதா இறப்பு பற்றி யாரேனும் நம்பகமான தகவலைக் கூறி இருக்கின்றனரா? நேதாஜியின் இறப்பு பற்றி இந்திய அரசு ஏதேனும் கூறி இருக்கிறதா? நாம் தான் குழம்பி போக வேண்டும். அது தான் மௌனத்தின் வலிமை.


சிலர் எது நடந்தாலும் தானே முன்வந்து கருத்துக் கூறுவார்கள். அவர்கள் தங்களது இருப்பை காட்டிக்கொள்ளவே அவ்வாறு பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, அவர்கள் இன்னும் அரசியல்வாதிகளாக பக்குவம் அடையவில்லை என்று கூறுவது சரியல்ல. நாற்காலியைப் பெற்ற நாள் முதல் வாய் மூடி தவமிருக்கத் தொடங்கி விடுவர்.

Reasons behind silence of politicians

ஒரு அரசியல்வாதி முழு நேர அரசியல்வாதியாக மாறுவதே இந்த மௌனத்தினால் தான். என்னை பொறுத்தவரை ரஜினி எப்போதோ முழு நேர அரசியல்வாதியாகி விட்டார்.

இப்பொழுது புரிகிறதா ஏன் தலைவர்கள் ‘Mute’ ஆகிறார்கள் என்று?

நமக்கு வாய்த்த தலைவர் ‘அமைதி! வளம்! வளர்ச்சி!’ என்று கூறியதன் பொருள் இப்போது தான் எனக்கு புரிகிறது. முதலமைச்சர் தனது கட்சி நிர்வாகிகளிடம், அமைதியாக இருந்து இருக்கும் வளத்தை விற்று தத்தமது குடும்பத்தை வளர்ச்சி பெறச்செய்வோம் என்று கூறியது தான் அது போலும். நாம் தான் அன்று தவறாக புரிந்துகொண்டோம்.

அது சரி! இப்படியே எல்லோரையும் எடைபோட்டால் எவர் தான் உண்மையான அரசியல்வாதி? யோசித்தால் தலையே சுற்றுகிறதா?

யாவையும் அறிந்து எல்லாவற்றைப் பற்றியும் கருத்துக்கூறும் வள்ளுவர் இதை எப்படி விட்டுவைத்திருப்பார்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் வாய்மொழி இது.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்

– குறள் 549

குடிமக்களை வருந்தவிடாமலும், தானும் வருந்தாமலும் மக்களைக் காத்து மக்களுக்குத் துன்பம் விளைவிப்பவரை அடையாளங்கண்டு அவர்க்கு தண்டனையளித்துத் தன் பணியைச் செவ்வனே செய்பவரே நல்ல ஆட்சியாளர். குற்றம் புரிந்தோரை தண்டித்தல் ஆள்பவருக்கு வடுவாகாது. மாறாக அது ஆள்பவரின் தொழிலே ஆகும் என்கிறது இக்குறள்.

தேடுவோம்! வள்ளுவர் வாய் மொழிப்படி யாரேனும் தலைவன் கிட்டுகிறானா என்று தேடுவோம்!! ஓம்!!!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!