கடந்த சில மாதங்களாகவே ஈராக்கில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அரசு அலுவகங்களுக்கு முன்னால் பொது மக்கள் அரசிற்கு எதிராகக் கோஷங்களை எழுப்புகின்றனர். போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு நடவடிக்கை எடுத்ததில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காயமுற்றிருக்கின்றனர். ஈராக்கில் இப்போராட்டங்கள் தொடரும் பட்சத்தில் மிகப்பெரிய மக்கள் புரட்சியை அந்நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை மல்லிகைப் புரட்சியின் அடுத்த அத்தியாயமாகக்கூட ஈராக் மாறலாம்.

மல்லிகைப் புரட்சி
உலக வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக நாடுகளில் புரட்சி நடந்தது 2010 – ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான். துனிஷியாவின் சாலையோர வியாபாரி ஒருவரின் மரணத்திலிருந்து இம்மாபெரும் புரட்சி துவங்கியது. ஊழலுக்கு எதிராக, அடிப்படை உரிமைகளுக்காக பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் வந்திறங்கிய போராட்டம். துனிஷியாவிலிருந்து எகிப்து, ஓமன், லிபியா, சிரியா என 15 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இப்புரட்சி காட்டுத்தீ போலப் பரவியது. பல அரசுகள் கவிழ்ந்தன. மணிமகுடம் தரித்த பலர் விரட்டியடிக்கப்பட்டனர். இவையெல்லாமே அந்தந்த அரசுகளின் மேல் மக்களுக்கு இருந்த கோபத்தினால் விளைந்தவை. இந்த நிலைக்குத் தான் தற்போது ஈராக்கும் வந்திருக்கிறது.
எதனால் பிரச்சனை?
முக்கியக் காரணம் பரமாத்மாவான ஊழல் தான். வறுமை, வேலைவாய்ப்பின்மை, அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை என ஈராக் மக்களின் போராட்டத்திற்கான காரணங்கள் நீண்டுகொண்டே போகின்றன. இத்தனைக்கும் ஒரு நாளைக்கு 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடு. நல்ல பணம் சம்பாதிக்கும் நாடு தான். ஆனாலும், அது மக்களுக்குச் சென்றடைவதில்லை. அங்கு தான் பிரச்சனை துளிர்க்கிறது. மின்சாரம், பள்ளிக்கூடம், மருத்துவமனை என எவ்வித அடிப்படை வசதிகளும் அம்மக்களுக்குக் கிடைப்பதில்லை.

பஸ்ரா(Basra) மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சராசரியாக 48 டிகிரிக்கு மேல் வெப்பம் கொளுத்துகிறது. மின்வெட்டு அதிக அளவில் இருப்பதால் வசிக்க இயலாமல் மக்கள் தவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போதெல்லாம் மின்சாரத்துறையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பார் அந்நாட்டு அதிபர் ஹைதர் அல் அபாதி (Haider al-Abadi). இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் அதிபர் மின்னியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தொடரும் போராட்டம்
வெகுகாலமாகவே மக்கள் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பினாலும் கடந்த இரண்டுவார காலமாக அவை உச்சநிலையை அடைந்துள்ளன. ஈராக்கின் பிரதான தொழிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 89% வேலை வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களின் மொத்த வருவாயில் 99% பணம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இருந்துதான் வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டத்தில் நாடே தவிக்கும் போது வெளிநாட்டவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அந்நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை வளர்த்து வருகிறது. சென்ற வாரம் பஸ்ரா விமான நிலையத்தின் அருகில் திரண்ட மக்கள் அரசிற்கு எதிராக கலகத்தில் இறங்கினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் போராட்டக்காரர்களின் மீது பீச்சியடித்து விரட்டினர்.
போலீசாரின் இத்தாக்குதலால் இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். போராட்டக்காரர்கள் காவல்துறையைத் தாக்கியதில் 29 அதிகாரிகளுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்தினை ஒடுக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை இணையதள வசதியை அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் தலையீடு
மேசன் (Maysan), தி கார் (Dhi Qar), பஸ்ரா (Basra), நஜாஃப் (Najaf) மற்றும் கர்பாலா (Karbala) ஆகிய பிராந்தியங்களில் தான் அதிகளவு போராட்டங்கள் நடைபெறுகின்றன. சன்னி முஸ்லிம்கள் இப்பிராந்தியங்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஈரான் சன்னி முஸ்லீம் நாடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஈராக்கிலிருக்கும் சன்னி முஸ்லிம்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவதன் மூலம் ஈரான் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசின் மீதான மக்களின் எண்ணம் வீழும் போது போராட்டத்தின் விதைகள் தூவப்படுகின்றன. அரை நூற்றாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் கூட மக்களால் துரத்தியடிக்கப்பட்டிருக்கின்றனர். மக்களின் உரிமைப் போராட்டங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பக்கத்திலிருந்து பார்த்த நாடான ஈராக் இதற்கு உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையேல் மக்கள் அந்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதுவார்கள்.