2019 ஜனவரி. காங்கிரஸ் மேல்மட்ட கூட்டங்கள் அவ்வப்போது அவசர அவசரமாய் கூடிக்கலைந்தன. தேர்தலில் மிக முக்கிய முடிவு ஒன்றினை காங்கிரஸ் எடுக்கப்போகிறது என தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன. சொல்லிவைத்தாற்போல் 23 ஆம் தேதி அந்த அறிக்கையை வெளியிட்டார் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் உத்திர பிரதேச மாநில கிழக்குப்பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கப்படுவதாக வந்த செய்தியால் இந்தியா முழுவதும் இருந்த அக்கட்சியின் தொண்டர்கள் குதூகலித்தார்கள்.

பாஜக இதனை எதிர்பார்த்தது என்றாலும், வருங்காலத்தில் நிச்சயம் தலைவலியாக இருப்பார் என்று “உச்” கொட்டியது. அவ்வப்போது அரசியல் மேடைகளில் பிரச்சாரத்திற்காக வலம் வந்த பிரியங்கா, முழுநேர அரசியல்வாதியாக தற்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கிறார். அரசியல் முன்னனுபவம் இல்லாத பிரியங்காவை காங்கிரஸ் நம்புவதும், பாஜக எதிர்ப்பதும் ஏன்? அதற்கு நிச்சயம் பல காரணங்கள் இருக்கின்றன.
உத்திரப் பிரதேசம்
இந்தியாவின் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஒரே மாநிலம். இங்குள்ள 80 தொகுதிகளில் பெரும்பான்மையானவற்றைக் கைப்பற்றும் கட்சியே பிரதமரைத் தேர்வு செய்யும். 1980 களில் தனது ஆதிக்கத்தை இங்கு இழந்த காங்கிரசால் இன்றுவரை அங்கு வளர முடியவில்லை. கூட்டணிமூலம் ஆதாயம் தேட நினைத்த ராகுலுக்கு அதிர்ச்சியளித்தார்கள் அகிலேஷ் யாதவும், மாயாவதியும்.
காங்கிரஸின் வளர்ச்சியை மாநிலத்தில் தடுக்கும் அதே நேரத்தில் பகைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை அகிலேஷ். நட்பின் காரணமாக இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என அறிவித்துக்கொண்டது உபி.யின் இந்த திடீர் கூட்டணி.

ராகுல் காந்தியோ உத்திர பிரதேசத்தை விடுவதாய் இல்லை. காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையான அமேதி மற்றும் ராய்பரேலி ஆகிய இரண்டும் அங்கே தான் இருக்கின்றன. இந்திராகாந்தி காலந்தொட்டு அந்தத் தொகுதிகளை ராசியான இடமாக பார்க்கிறது காங்கிரஸ்.
பிரியங்கா காந்தி
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி ராய்பரேலியில் போட்டியிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தது. ஏற்கனவே ஏற்பட்ட தோல்வியின் காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் துவண்டுபோயிருந்தனர். அப்போது பிரச்சாரத்திற்கென களமிறக்கப்பட்டார் பிரியங்கா.
கடுமையான உழைப்பு. மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் புதுப்புது முயற்சிகளை எடுக்கவைத்தார். கிராமம் கிராமமாக நடைப்பயணம், எளிமையான சுபாவம் என மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தார் பிரியங்கா. தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் உங்கள் கட்சிக்கு? எனக்கேட்ட ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றிற்கு ஒரு வினாடிகூட யோசிக்காமல் “3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்” என்றார்.

அரசியல் கத்துக்குட்டி என காங்கிரசிலே கூட சிலர் நினைத்தார்கள். கடைசியில் பிரியங்காவின் வார்த்தைகள் வென்றிருந்தன. சொல்லிவைத்தாற்போல் 3 லட்சம் ஓட்டுகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் சோனியா காந்தி.
பேச்சில் நிதானம், எளிமையான வார்த்தைகள், ஏழைகளோடு நெருக்கம், மிக முக்கியமாக இந்திரா காந்தியின் சாயல் இவை பிரியங்காவின் செல்வாக்கை உயர்த்தியுள்ளன. பிரியங்கா காந்திக்கு உத்திரபிரதேச மாநிலத்தில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாகவே புள்ளி விவரங்களும் தெரிவிகின்றன.
பிஜேபி
பிரியங்காவின் வருகையை ஒட்டி, வாரிசு அரசியல் என பேச ஆரம்பித்து ஒருகட்டத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை பாஜக தலைவர்கள் பேச, கட்சி மேலிடம் அவற்றைக் கண்டித்து அறிக்கை விடவேண்டியிருந்தது. ஏனெனில் அரசியல் அறிமுகம் இல்லாத பிரியங்காவைப் பற்றி பேசி அவரை பெரிய ஆள் ஆகிவிடவேண்டாம் என எண்ணியது தலைமை.

உத்திர பிரதேசத்தில் எப்படி இருந்தாலும் பாஜகவிற்கு சிக்கல் காத்திருக்கிறது. அகிலேஷ் – மாயாவதி கூட்டணி கடைசி நேரத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ்வாதி என அமையும் பட்சத்தில் பாஜக மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும்.
உத்திர பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் பிரியங்கா காந்தியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.