டிக் டாக் வீடியோக்களுக்கு வேட்டு வைக்க இருக்கும் நீதிமன்றம்!!

0
129
tik tok
Credit: Livemint

இன்டர்நெட் தவிர்க்கமுடியாத அத்தியாவசியமாகிவிட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இணையத்தில் பல்வேறு வகையான தகவல்களை நம்மால் பெற முடியும். இங்கே பொழுதுபோக்கிற்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் அதே நேரத்தில் விளையாட்டே வினையாக மாறிவிட்டால்?

tik tok
Credit: Livemint

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் சுமார் 75 மொழிகளில் இந்த செயலியானது இயங்கிவருகிறது. ஆபாசமான முறையில் சிலர் இதைப் பயன்படுத்துவதாகவும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறி இந்தோனேசிய அரசாங்கம் டிக் டாக்கிற்கு தடை விதித்தது.

இந்தியாவிலும் டிக் டாக் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் பொதுமக்களிடமும் இதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது. பொழுதுபோக்கு செயலி என்றாலும் அதிலும் சில விஷமிகள் இருக்கத்தான் செய்கின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக சட்டப்பேரவையில் டிக் டாக் செயலியைத் தடை செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

Bijili-Ramesh-15உயர்நீதிமன்றம்

இதெல்லாம் ஒருபுறமிருக்க மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “பிராங்க் ஷோ என்று சொல்லக்கூடிய குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகையால் அதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மாணவர்களைத் தவறான பாதையில் செல்ல வைக்கும் டிக் டாக் செயலியைத் தடை செய்யவேண்டும்” என்று முத்துக்குமார் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பல சுவாரஸ்ய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. பொதுமக்களின் வாழ்விற்கு இடையூறு தரக்கூடிய அனைத்தையும் களையெடுப்பது ஒரு அரசின் கடைமையாகும். புளூவேல் விளையாட்டைத் தடை செய்யவேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரே மத்தியரசு அதில் தலையிட்டு தடையை அறிமுகப்படுத்தியது. இப்படி சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை மத்திய அரசு தாமாகவே தடை செய்யவேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

madurai high courtமேலும் பிராங்ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனைத் தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 16-ம் தேதியன்று நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர். அன்று டிக் டாக் செயலிக்கு தடை குறித்து நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது? என பலரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.