அண்டை நாடான சீனாவைப் பாருங்கள். அவர்கள் எத்துறையில் எந்த அளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும் சரி அங்கே வாழும் பல பணக்காரர் கூட இந்தியாவில் வசிக்கும் ஒரு ஏழையின் சுதந்திரத்தை எட்டிப்பிடிக்க முடியாது. பேருந்தை மறிக்கலாம், அநாவசியமாக அரசைக் கண்டித்து, ராணுவத்தை தன்னோடு போருக்கு அழைக்கலாம். உங்களை ஒருவர் சீண்டா! அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமா வைப்பற்றி ‘பெய்டு’வில் (baidu- சீனாவின் அதிகாரப்பூர்வ தேடுபொறி) தேடினால் அவர் ஒரு நாடுடைக்கும் தீவிரவாதி என்றே வரும். அப்படி இல்லையப்பா! அவரைப்பற்றி எனக்குத் தெரியும் நல்லா பாரத்துசொல் என துருவித்துருவி கேட்டீர்களானால் உங்கள் இணையம் நிறுத்தப்படும். அடுத்த அரை மணிக்குள் உங்கள் வீடு தேடி ஜின்பிங் ஆள் அனுப்பி விடுவார். சீனர்கள் கண்ட அனைத்து முன்னேற்றத்தையும் சர்வாதிகாரம் என்று பெயரிட்டு அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் உண்மையில் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. ஆயினும் இக்கட்டுரை சீனாவைப் பற்றியதல்ல.

ஒரு குழந்தைத் திட்டம் Vs இரு குழந்தைத் திட்டம்
நம் நாடு சுதந்திரம் அடைந்த போது இருந்த மக்கள்தொகை இப்போதைய எண்ணிக்கையைக் காட்டிலும் நான்கு மடங்கு குறைவு. அதே கால அளவில் இந்த சர்வாதிகார சீனாவில் மக்கட்தொகை வெறும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. சீனர்கள் சின்னக் கண்கள் கொண்டவராயினும் அக்கண் கொண்டே எதிர்காலத்தில் இயற்கை வளங்களின் தேவையைக் கண்டு ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த களமிறங்கிவிட்டிருந்தனர். அதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் இந்த “ஒரு குழந்தைத் திட்டம்” (1979). ஆண், பெண் விகிதாச்சாரம் (100 பெண்கள் : 115 ஆண்கள்) முரண்பாட்டால் 2015 ல் இத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டு இருகுழந்தைத் திட்டமாக மாற்றம் பெற்றது.
அதற்கு அடுத்த ஆண்டில்தான் இந்தியாவில் இந்த சிக்கலான யோசனையை முன்னெடுத்தார் மத்தியப்பிரதேச MP (தாமோ தொகுதி) பிரஹலாத் சிங் படேல். 2016 ல் அவர் தாக்கல் செய்த மசோதா இன்னும் விவாதத்திற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படாவிட்டாலும், அந்த மசோதாவின் தாக்கம் கருத்தில் கொள்ளப்படவேண்டியது. மசோதாவின்படி “இச்சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியத் தம்பதிகள் இருகுழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது. மீறுவோர் அரசின் சலுகைகளைப் பெற இயலாது. ஒரு சில மருத்துவ காரணங்கள் மட்டும் விலக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.” (அதாவது இரண்டாவது பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள் போன்றவை.)

இது பற்றி அவர் கூறுவதாவது “இந்தியாவில் இயற்கை வளங்கள் குறைவு. இந்த வேகத்தில் மக்கள் தொகை உயருமானால் சுத்தமான தண்ணீர், தரமான உணவு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை எதிர்காலத்தில் அனைவருக்கும் கொடுக்க இயலாது.” மற்றும் மசோதாவோ “இத்தகைய விரைவான மக்கள் தொகை பெருக்கமானது இந்தியாவில் இயற்கை வளங்களின் மீது அதீத சுமையை விதிக்கிறது. அதிகப்படியாக வளங்களை உபயோகப்படுத்துவதால் அவை நாள்தோறும் குறைந்துகொண்டே வருகின்றன. எனவே உடனடியாக இதற்கான சட்டத்தை இயற்றுவதன் தேவை அவசியமாகிறது” என்று குறிப்பிடுகிறது. உண்மைதான். நாட்டில் எக்கோவிலைக் கட்டினாலும் இயற்கை வளங்கள் தானாக உயருவதில்லை. அதை இக்கணம் வரை சிலர் உணர்ந்ததுமில்லை.
தொடரும் சிக்கல்
ஆனால் மக்கள் தொகைக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தலைமை அதிகாரி பஸ்வான் அவர்கள் கூறும்போது “ இத்திட்டத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த விகிதாச்சாரம் முற்றிலும் நடைமுறைக்கேற்றதல்ல. மாற்றங்கள் முன்னேற்றத்தோடு சேர்ந்தே வருகிறது. அதை நோக்கியே நாடு தற்போது சென்றுகொண்டிருக்கிறது” என்கிறார். மேலும் இந்தியாவில் 54 விழுக்காடு மக்களே கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்துகின்றனர்” என்றும் குறிப்பிடுகிறார்.
உண்மையில் இந்தியாவில் பிறப்பு விகிதம் 2000 ஆம் ஆண்டை விட 2016 ல் குறைவுதான் (3.2 – 2.3). 1991 முதல் 2001 வரை ஜனப் பெருக்க விகிதம் 21.5% . அதுவே 2001 முதல் 2011 வரை 17.6% தான். இந்த பெருவெற்றிக்கு காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கடும் முயற்சிகள் தான். நாட்டில் இன்னும் பெண்கள் குழந்தைபெற்றுத்தரும் இயந்திரமாகவே கருதப்படுகின்றனர். அரசு எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் “அப்படியா சேதி இன்னும் கடைசி முயற்சியாக ஒன்று” என மூன்றாவதாக ஆண்குழந்தைக்கு முயற்சிக்கும் குடும்பமும் உண்டு. 1994 ல் நடந்த International Conference on population and Development Declaration மாநாட்டில் இந்தியா மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து கையெழுத்திட்டிருந்தாலும் இந்நாள் வரை ஏதும் குறிப்பிடும்படியான முயற்சி எடுக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. அதன்படி குழந்தை பெறுதல் என்பது தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பமும் அவர்களின் பொருளாதார வசதியையும் சார்ந்தது .

என்னதான் வழி?
மகப்பேறுக்கு ருபாய் 6000 வரை தரும் அரசு, குடும்பக் கட்டுப்பாடுக்கோ 1500 முதல் 2000 மட்டுமே வழங்குகிறது. 2011ல் மட்டுமே 20 மில்லியன் குழந்தைகள்/சிறுவர்கள் காப்பகத்தில் இருந்துள்ளனர் அப்போதைய மக்கள் தொகையில்அது 4 சதவிகிதம் ஆகும். இப்படி இரண்டு தரப்பிலும் தேவைகள் இருக்கின்றன. கட்டுப்பாடுகள் வெகுகாலத்திற்கு உதவும் நடவடிக்கையல்ல. மேலும் பூதாகரமான பல சிக்கல்களை கொண்டுவரும். ஆனால் அதேசமயத்தில் எதிர்காலம் குறித்த திட்டமிடுதலும் அவசியம். அதற்கு ஒரேவழி அதிதீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை கிராமந்தோறும் எடுத்துச்செல்வது தான்.