1960 -ஆம் ஆண்டு. அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தமிழகத்திற்கு வந்து செல்கிறார். அந்த ஆண்டு முடிந்தபின், கணக்குத் தணிக்கை அலுவலகம் நேருவுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறது. “நீங்கள் தமிழகத்துக்கு வந்தது, பிரதமர் என்ற நிலைமையில் அல்ல, காங்கிரசுக் கட்சியின் கூட்டத்துக்கே வந்து சென்றீர்கள். நீங்கள் வந்து சென்ற செலவுகளைத் தமிழக அரசு ஏற்றுள்ளது. இச்செலவுத் தொகையைக் காங்கிரசுக் கட்சியிலிருந்து, தமிழக அரசுக்கு நீங்கள் செலுத்த வேண்டும்”. சில நாட்களில் தமிழக அரசின் கருவூலத்துக்குக் காங்கிரசுக் கட்சியிலிருந்து காசோலையாக அப்பணம் வந்து சேர்ந்தது. இதன் பொருள், அரசின் வரி வருவாயானது உரிய திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதாகும்.
நேர்மையின் வறுமை
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்த போது, சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு சிக்கலும் இல்லை. வெள்ளம் இல்லை. தொடர்ந்து மின்சாரம் இருந்தது. உணவு, குடிநீர்ப் பிரச்சினைகளும் இல்லை. எனினும் வண்ணாரப்பேட்டையில் வெள்ள நிவாரணப் பணம் வங்கிக் கணக்கின் மூலம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.10 இலட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள், சென்னையில் 2 வீடுகள் உள்ளவர்கள், ஆண்டுக்கு ரூ.1 இலட்சத்திற்கு மேல் வருமானவரி செலுத்தியவர்கள் ஆகிய பலருக்கும் வெள்ளத்தில் பாதிக்கப்படாமலேயே, தமிழக அரசின் நிவாரணம் (?) பணம் வழங்கப்பட்டது.

ஆண்டுக்கு ரூ.10 இலட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவருக்கு ரூ.5000 பெற்றதனால், பெரிய மகிழ்ச்சி வந்துவிடப்போவதில்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.60,000 வருமானம் சம்பாதிக்கும் நபருக்கு, இந்தப் பணம் நிவாரணமாய்ப் போயிருந்தால் அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சூழும் சிக்கல்கள்
தமிழக அரசின் நிதி நிலை இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியப் பணம் இன்னும் ரூ.5000 கோடி வழங்கப்படவில்லை. (வேறு திட்டங்களுக்குப் பணத்தை மாற்றி விட்டதால், போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பிடித்த தொகையை அவர்கள் ஓய்வு பெறும் பொழுது தமிழக அரசால் வழங்க முடியவில்லை).
உலக வங்கி போன்ற நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்குத் தமிழக அரசு, பெரிய தொகைகளை வட்டியாகச் செலுத்தி வருகிறது. பல முக்கியமான திட்டங்கள், நிதியின்மையால் தமிழக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் உணவுப் பங்கீட்டு அட்டை (Ration Card) உள்ள ஏழை, பணக்காரர்கள் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு தரப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு இவற்றைப் பொங்கல் சமயத்தில் உணவுப் பங்கீட்டு அட்டைக்கு வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

அரசியல் காய் நகர்த்தல்
இப்பொழுது பொங்கல் பரிசு ரூ.1000 வேண்டும் என்று யார் கேட்டார்கள்? ரூ.1000 செலவழித்துப் பொங்கல் கொண்டாட முடியாத ஏழ்மை நிலையில், அனைத்துத் தமிழக மக்களும் உள்ளார்கள் எனத் தமிழக அரசு கருதுகிறதா? தமிழகத்தில் 2.01 கோடி உணவுப் பங்கீட்டு அட்டைகள் உள்ளதாக, 04.01.2019 தேதியிட்ட இந்து நாளிதழ் கூறுகிறது. ரூ.1000 வீதம் இந்த உணவுப்பங்கீட்டு அட்டைகளுக்கு வழங்கினால், தமிழக அரசுக்குக் கூடுதலாக ரூ.2020 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.15000 கோடி எனத் தமிழக அரசு, நடுவண் அரசிடம் உதவி கோரியது. நடுவண் அரசு தருவதாக அறிவித்த தொகை ரூ.1300 கோடி. உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்த ரூ.2020 கோடியை, கஜா புயலால் பாதித்த மக்களுக்கு வழங்கினால், அவர்கள், தமிழக அரசை வாயார வாழ்த்துவார்கள். அதைவிடுத்து இம்மாதிரியான திட்டங்கள் அரசியல் லாபங்களுக்காக செய்யப்படுபவை என்றாலும் இதனால் பாதிப்படயப்போவது அப்பாவி ஏழை மக்கள் மட்டுமே.
சொ. பாசுகரன்
சென்னை 21.
9840316020