இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளை கணக்கெடுப்பது என்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. ஒரு கட்சி உடைந்து இரண்டாகி பின்னர் நான்காகி அப்படியே செல்பிரிதல் போல புதுப்புது கட்சிகள் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. கடந்த ஜூன் 20-ம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு கட்சியை மாநில கட்சியாகவோ, தேசிய கட்சியாகவோ தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துகொள்ளலாம். ஆனால் பதிவுசெய்யப்பட்ட அனைத்து கட்சிகளையுமே தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விடாது. அதற்கென சில தகுதிகளை அக்கட்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி
- மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும்.
- மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
- நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகளைப் பெற்றிருந்தால் தான் ஒரு கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் கிடைக்கும். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மொத்தம் 7. அவை, இந்திய தேசிய காங்கிரஸ், பாராதிய ஜனதா, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி.

அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி
மாநில கட்சி என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட ஒரு கட்சியானது கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம்.
- சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
- மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும்.
- மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியிலோ, 2 சட்டப்பேரவை தொகுதிகளிலோ வெல்ல வேண்டும். அல்லது, 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மொத்தம் மூன்று. அவை அதிமுக, திமுக, தேமுதிக.
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தான் அதிகம். மேற்கண்ட மூன்று கட்சிகள் தவிர்த்து பாமக, மதிமுக, விசிக, தமாகா, கொ.மு.க போன்ற அனைத்து கட்சிகளும் இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

எதற்கு அங்கீகாரம்? ஏன் பதிவு?
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- கட்சிக்கான சின்னம் ஒதுக்கீட்டின்போது சுயேட்சைகளை விட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தல் போட்டியிட ஒருவர் மட்டும் முன்மொழிந்தால் போதும்.
- அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளருக்கு அவரது தொகுதியின் இறுதி வாக்களாளர் பட்டியல் நகல் இலவசமாக வழங்கப்படுகிறது.
- அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள் பிரச்சாரத்தின் போது அதிகபட்சம் 40 நட்சத்திரப் பேச்சாளர்களை பயன்படுத்தவும், ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள் அதிகபட்சம் 20 நட்சத்திரப் பேச்சாளர்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது. நட்சத்திரப் பேச்சாளர்களின் போக்குவரத்து செலவு வேட்பாளரின் தேர்தல் செலவில் கணக்கு காட்டவேண்டாம்.