28.5 C
Chennai
Sunday, November 27, 2022
Homeஅரசியல் & சமூகம்எம்.ஜி.ஆர் என்ற அசல் நடிகனும் போலி தலைவனும்...! அப்படி என்ன செய்தார் எம்.ஜி.ஆர்?

எம்.ஜி.ஆர் என்ற அசல் நடிகனும் போலி தலைவனும்…! அப்படி என்ன செய்தார் எம்.ஜி.ஆர்? [Part 1]

NeoTamil on Google News

1973. திண்டுக்கல் இடைத்தேர்தல் நேரம். தமிழக அரசியலில் அனலடித்துக்கொண்டிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி எம்.ஜி.ஆர் தனியாக தேர்தலில் நின்றிருந்தார். அதாவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மாயத்தேவர் என்னும் வழக்கறிஞரை நிற்க வைத்திருந்தார். கருணாநிதியை வீழ்த்தியாகவேண்டும். அதற்கான விலை எதுவாக இருந்தாலும் கொடுக்க எம்.ஜி.ஆர் தயாராகவே இருந்தார்.

அமைச்சர் பதவி சச்சரவில் துவங்கிய கருணாநிதி – எம்.ஜி.ஆர் போட்டியில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என தமிழகமே எதிர்பார்த்திருந்தது. சந்தேகங்களை தவிடுபொடியாக்கி எம்.ஜி.ஆர் அபாரமான வெற்றியைப் பெற்றார். அவரது சார்பில் நின்ற மாயத்தேவர் 1 லட்சத்து 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிபெற்று அ.இ.அ.தி.மு.க வின் அசுர வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தான் வெற்றிபெற்றதை விட திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது தான் அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. (ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் இரண்டாம் இடம் பிடித்தார்)

ஆளுங்கட்சி பலம், திராவிட சிந்தனை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு என இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திமுகவை வீழ்த்தும் வலிமை எம்.ஜி.ஆருக்குக் கிடைக்க காரணமாக இருந்தது சந்தேகமே இல்லாமல் அவரது தொண்டர்கள்தான்.

காரண கர்த்தாக்கள்

திண்டுக்கல்லில் ஆரம்பித்த வெற்றிப் பயணம் அவர் இறக்கும் வரையிலும் தொடர்ந்தது. எம்.ஜி.ஆர் என்னும் நடிகனின் கோடிக்கணக்கான ரசிகர்கள்தான் அவருடைய பலம். அவருக்காக எதையும் செய்யத் தயாராய் இருந்தார்கள். அதிமுக கொடியை பச்சை குத்திக்கொள்ளச் சொன்னபோது மறுப்பே சொல்லாமல் குத்திக்கொண்டார்கள். அவருடைய ஒரு சொல். ரசிகர்கள் அதனை வேதமாக ஏற்று பின்பற்றினர். அதனாலேயே அதிமுக யாராலும் தவிர்க்க முடியாத எஃகு கோட்டையாக உருவெடுத்தது.

ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ, வேளாண் மக்களின் கஷ்டங்களைப் போக்கவோ எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படி எம்.ஜி.ஆரின் ரசிகராய் இருந்து அதிமுக தொண்டர்களாக உருவெடுத்த லட்சக்கணக்கானோரில் படிப்பறிவில்லாத, பாமர மக்களே அதிகம். குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்த நலிவடைந்த மக்களின் இரட்சகராக எம்.ஜி.ஆர் மாறியிருந்தார். 1986 ஆம் ஆண்டு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் புள்ளியியல் துறை பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தியது.

அதன்படி படிப்பறிவில்லாதவர்களில் 60 சதவிகித மக்கள் எம்.ஜி.ஆரின் விசுவாசிகளாக இருந்தனர். அதேநேரத்தில் படித்த மக்களில் 20 சதவிகிதம் மட்டுமே எம்.ஜி.ஆர் எனும் பிம்பத்தால் ஈர்க்கப்பட்டிருந்தனர். 1973 ஆண்டு எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்களில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்மூலம் அவருடைய ரசிகர்களில் 73.4 சதவிகிதம் பேர் மாதம் 400 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தைப் பெற்றுவந்தனர் என்பது தெளிவாகிறது. இவர்களால் தான் எம்.ஜி.ஆர் தலைவரானார். இவர்களை முன்னிறுத்தித்தான் பெரும் வெற்றிகளை அவர் ருசித்தார். அதன் காரணமாகவோ என்னவோ அவர்களை அதே பாமரர்களாய், வறியவர்களாய் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.

உண்மைதான். ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ, வேளாண் மக்களின் கஷ்டங்களைப் போக்கவோ எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

ஏமாற்றப்பட்ட ஏழைகள்

1960-களில் வேளாண் பொருட்களுக்கான வரிவிதிப்பு தமிழகஅரசின் மொத்த வருவாயில் 1.9 சதவிகிதம் ஆகும். இது எம்.ஜி.ஆர் காலத்தில் 1.1 ஆகக் குறைந்தது. வேளாண் மக்களுக்கான வரிவிதிப்பை குறைத்து அவர்களின் மீதான பொருளாதார சுமையை எம்.ஜி.ஆர் குறைத்தார் என்பதுபோன்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் நீங்கள் கீழேயுள்ள பாராவைப் படிக்கவேண்டும்.

அப்போதைய தமிழகத்தில் பணம் படைத்த, பம்ப்செட் வசதிகள் கொண்ட பெறும் பணக்காரர்களிடம் மட்டுமே நிலம் மிகுந்திருந்தது. ஆகவே, எம்.ஜி.ஆர் அரசின் வரிக்குறைப்பினால் லாபமடைந்தவர்கள் இவர்களே. இப்படி மேலோட்டமாகப் பார்த்தால் எளிய மக்களை தரம் உயர்த்துவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் போலத் தோன்றினாலும் பணக்காரர்களுக்கும் நிலம்கொண்ட செல்வந்தர்களுமே அதிமுகவால் பலனடைந்தார்கள்.

இதற்கு இன்னொரு உதாரணமும் சொல்லலாம். அரசு வேளாண் மின்சாரத்திற்கான கட்டணத்தைக் குறைத்தது. 1979 ஆம் ஆண்டுமுதல் இதனால் ஒருவருடத்திற்கு 150 கோடி வீதம் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த திட்டமும் பம்ப்செட் முதலாளிகளுக்கே லாபத்தை அளித்தது. நிலமில்லாத, வேளாண் கூலித் தொழிலாளர்கள் நிலை மீட்கமுடியாத துயரத்திற்குச் சென்றது.

“குடி”மக்கள் பணம்

இது ஒருபுறம் என்றால் செல்வந்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துதருவதில் அதிமுக காட்டிய அவசரத்தினால் தமிழகத்தின் கஜானா காலியானது. 1960-65 காலத்தில் நிலவரி, வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி போன்ற செல்வந்தர்கள் செலுத்தும் வரிகளுக்கான விகிதம் தமிழக வருமானத்தில் 15.5 சதவிகிதமாக இருந்தது. இந்த வருவாய் மூலத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு தகர்த்து செல்வந்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் செய்தது. எப்படி? 1975-80 காலகட்டத்தில் மேற்கண்ட வரிகளின் மூலம் தமிழக அரசு பெற்ற வருமானம் 4.6 சதவிகிதமாகக் குறைந்தது. 1980-85 ஆம் ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகி 1.9 சதவிகிதமாக குறைந்து பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாற வழிவகுத்தது.

தமிழகத்தில் யாருமே செய்திடாத மோசமான காரியம் ஒன்றினையும் எம்.ஜி.ஆர் செய்தார். IMFL (Indian-made foreign liquor) என்னும் உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மது தயாரிப்பு நிறுவனங்களே விலைகளை தீர்மானித்துக்கொள்ளலாம் என எம்.ஜி.ஆர் அறிவித்தார். இதனால் டாஸ்மாக்கின் விற்பனை விலை நிர்ணயம் செய்யும் உரிமை IMFL நிறுவனங்களுக்குச் சென்றது. இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு (IMFL) தமிழக அரசே டாஸ்மாக் மூலம் கலால் வரி செலுத்தியது.

இது ஒருபுறமிருக்க உள்ளூர் சாராய ஆலை உற்பத்தியாளர்களை குஷிப்படுத்தும் முயற்சியில் அதிமுக இறங்கியது. அதன்படி சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான கலால் வரியில் இருந்து சாராய உற்பத்தி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் மட்டும் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ஒரு துரோகத்தை அடித்தட்டு மக்களுக்குச் செய்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் துரோகம்

1977-85 ஆம் ஆண்டுகாலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சீரமைக்க அப்போதிருந்த மத்திய அரசு 26.70 லட்சம் தொகையை ஒதுக்கியது. இதில் 17.04 லட்சத்தினை அதிமுக செலவழிக்கவே இல்லை. இதுபோதாதென்று 3.68 லட்சத்தினை மத்திய அரசுக்கே திருப்பி செலுத்தியது அரசு. கால் வயிற்றுக் கஞ்சிக்காக போராடிய மக்களுக்கு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு செய்த துரோகமாகவே இந்த செயல் பார்க்கப்படுகிறது.

வேளாண் மக்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தொகை ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் மாற்றியமைக்கபட வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்றியிருந்தது. இருப்பினும் அதிமுக அரசு அதனை 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளவேயில்லை.

எம்.ஜி.ஆர் இறந்தபோது சுமார் 30 பேர் துயரம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்கள். கை,விரல் போன்றவற்றை வெட்டி வழியும் குருதியோடு தங்களது தலைவனுக்கு பிரியாவிடை அளித்தார்கள். இப்படி யாரால் எம்.ஜி.ஆர் உச்சபட்ச நட்சத்திரமாக வலம்வந்தாரோ, யாரால் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தாரோ அவர்களுடைய எதிர்காலத்தை சிதைத்தே தனக்கான சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்துகொண்டார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் பொருளாதார சீர்கேடுகள், அதனால் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அவர் ஒடுக்கிய விதம், தனது எதிரிகளை வெல்ல எம்.ஜி.ஆர் கொடுக்கும் விலை போன்றவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

சந்திர கிரகணம் (lunar eclipse)

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள் நிலவுகளைக் கொண்டுள்ளன. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சந்திரன் மற்றும் சந்திர கிரகணம் பற்றிய தகவல்கள்! சந்திர கிரகணம் என்றால்...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!