தொடரும் ‘சர்கார்’ சர்ச்சைகள் – விஜய் ரசிகர்களைக் கைது செய்ய விரையும் காவல்துறை

0
41
actor vijay

சர்கார் திரைப்படம் வெளியான தினத்திலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. கட்சியினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, அரசு இலவசமாகக் கொடுத்த பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி ஆகிய பொருட்களை விஜய் ரசிகர்கள் உடைப்பது, எரிப்பது போன்ற காணொளிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இன்று ஒரு ரசிகர் அனைத்திற்கும் மேலே சென்று அரசு அளித்த வீட்டையே உடைத்துக் கொண்டிருக்கும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

விஜய் ரசிகர்களின் சர்ச்சைக் காணொளி

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, “விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தின் சுவரொட்டிகளைக் கிழிக்க யாராவது வந்தால் அவர்களை வெட்டி விடுவேன்” என்று  இரு நபர்கள் அரிவாளை வைத்து மிரட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அந்த நபர்களைக் கைது செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக அவர்கள் மீது வழக்குப் பதியப் பட்டுள்ளது.

vijay fansமேற்கண்ட நபர்களைப் பற்றிய விவரங்கள் தெரிந்தவர்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு கணினி வழி குற்றப் பிரிவில், 044-23452348, அல்லது 044-23452350 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

அந்தக் காணொளியில் அரிவாளோடு தோன்றியவர்கள் உண்மையில் அப்பாவிகளாகக் கூட இருக்கலாம், ஏதோ ஆர்வக் கோளாற்றில் அல்லது புகழுக்கு ஆசைப்பட்டு உணர்ச்சிவயப்பட்டிருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு ஏற்படுத்தப் போகும் விளைவு என்னவாக இருக்கும்?

இவ்வளவு தான் இளைஞர்களா ?

திரைப்படம் எனது ஒரு சாதாரண பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. அதற்காக, ஒரு நடிகர் தன் படத்தில் ஒன்றைச் சொல்லி விட்டார் என்பதற்காக பொருட்களை உடைப்பது, வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்கள் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. படிப்பறிவில், பகுத்தறிவில், தொழில்நுட்பத்தில் நாம் உயர்ந்துவிட்டதாக மார் தட்டிக் கொள்ளும் இதே நேரத்தில் தான் இத்தகைய விரும்பத்தகாத செயல்களும் சமூகத்தில் அரங்கேறுகின்றன.

அதிலும் மேற்கண்ட காணொளிகளில் காணப்படுபவர்கள் பெரும்பாலும்  ஏறத்தாழ 20 வயதிற்குள் தான் இருப்பார்கள். நாளைய இந்தியாவின் நம்பிக்கையாக நாம் கண்டு கொண்டிருக்கும் சமூகத்தின் உண்மை நிலை இது தானா ? என்ற கேள்வி பாரபட்சமின்றி முகத்திலடிக்கிறது.

vijay fansசவால்

காவல்துறையும், ஊடகங்களும் அவர்களை  வன்முறை வெறியர்களாகக் குறிப்பிடுகின்றன. இது தான் ஒரு பொழுது போக்கும் அம்சத்தை இளைய சமூகம் எடுத்துக் கொள்ளும் விதமா என்பதை சற்று சிந்திக்க வேண்டும். ரசிகர் கூட்டம் இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களின் ஆஸ்தான தலைவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். எப்போதும் தலைமையில் இருப்பவர்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.

“யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே” என்கிறார் பெரியார். ஆனால், இன்றைய தலைமுறையை எளிதாக ஒரு திரைப்படமோ, நடிகரோ மடைமாற்றி விட முடிகிறது. நம் முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவாலே இது தான் எனத் தோன்றுகிறது.