கெஞ்சுவதில்லை பிறர்பால் அவர்செய்
கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை
மொழியையும் , நாட்டையும் தமிழர்கள்
ஆளாமல் துஞ்சுவதில்லை
எனவே தமிழர் தோளெடுங்கால் எஞ்சுவதில்லை
புவியில் எவரும் எதிர்நின்றே!!
என்பதற்கிணங்க வாழ்ந்தவர் கலைஞர். ஒரு நூற்றாண்டுப் போர் முரசு தன் இடி முழக்கத்தை நிறுத்தியுள்ளது. எத்தனையோ திரைச்சீலைகளுக்கு அப்பால் இருந்த சமூக நீதியைத் தன் வெண்கலக் குரலால் வாதாடி வெளி உலகத்திற்குக் கொண்டு வந்த மாபெரும் பேச்சாளர். எத்தனை போராட்டங்கள்? எத்தனை வழக்குகள்? எத்தனை தோல்விகள்? எத்தனை துரோகங்கள்? அத்தனையும் கடந்த இரும்பு நெஞ்சர்.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் , ஏழாயிரம் கடிதங்கள், என விரல் தேய எழுதியவர். வாழ்நாள் முழுவதும் அநீதியை எதிர்த்துச் சண்டமாருதம் செய்த பிறவிப் போராளி. தி.மு.க தலைவர், படைப்பிலக்கியவாதி, திரைத்துறை வசன கர்த்தா, முதலமைச்சர், இறுதிவரை சட்ட மன்ற உறுப்பினர் என பல பரிமாணங்களை தன்னகத்தே கொண்டிருந்தவர் கலைஞர். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக அவரின் வாழ்க்கை நம் முன்னே இருக்கிறது.
ஒடுக்குமுறைகளின் எதிர் நின்று எப்போதும் போர்ப்பரணி பாடியே பழக்கப்பட்ட கலைஞர், போர்க்களம் சோர்ந்திடினும் போரிடத் தயங்கா தோள் வலிமை கொண்டவர். நெருக்கடி நிலைமைக் காலம் தான் கலைஞரின் போர்க்குணம் உச்சத்தில் இருந்த காலம். மத்திய அரசை எதிர்த்து இந்தியாவின் எந்த மாநில முதல்வரும் பேசத் தயங்கிய நிலையில், இந்திரா காந்தியை எதிர்த்து நாப்பறை ஆர்த்தவர் கலைஞர். அதனாலேயே ஆட்சியை இழந்தவர். அண்ணா ஒருமுறை, “என் தம்பிக்குத் தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பதும், சட்டமன்ற உறுப்பினர் ஆவதும் ஒன்று போலத் தான் தெரியும்” எனக் கலைஞரைக் குறிப்பிட்டார். தன் அரசியல் வாழ்க்கையில் பதினான்கு பிரதமர்களோடு பணியாற்றியவர். இதுவரைத் தான் போட்டியிட்ட எந்த சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியைச் சந்திக்காத வெற்றி வேங்கை கலைஞர்.
‘இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூத்துக்கொண்டு தான் இருக்கிறது’, என்று பிரபஞ்சன் சொன்னது கலைஞருக்கு முற்றிலும் பொருந்தும். எந்தக் கடினமான சூழ்நிலையையும் புன்னகையோடு கடக்கத் தெரிந்தவர் கலைஞர்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சட்டசபை வளாகத்தை ஆய்வு செய்ய முக்கிய கட்சி உறுப்பினர்களுடன் சென்றிருந்தார் கலைஞர். இரண்டாம் தளத்திற்குச்செல்ல லிஃப்டை அணுகும் போது, அங்கிருந்த லிஃப்ட் உதவியாளர், ஐந்து பேர் மட்டுமே அனுமதி என்றார். உடனே கலைஞர், “லிஃப்ட் என்ன பாஞ்சாலியா?” என்று கேட்க, அவ்விடத்தை வெடிச்சிரிப்பு பற்றிக்கொண்டது சில நிமிடங்களுக்கு.
நாப்ஃதாவிலிருந்து என்ன தயாரிக்கலாம்?
கலைஞர் முதன்முதலில் முதலமைச்சராக பதவியேற்றிருந்த காலம். சட்ட சபை விவாதத்தின் போது நாப்ஃதாவிலிருந்து என்ன தயாரிக்கலாம்? என்று எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் கலைஞர். இரண்டு மணி நேரம் நீடித்த அப்பேச்சில் 99 வகையான பொருட்களை நாப்ஃதாவிலிருந்து தயாரிக்கலாம் என எடுத்துரைத்தார். எதிர்க்கட்சியிலிருந்து மற்றொருவர் எழுந்து நாப்ஃதாவிலிருந்து என்ன தயாரிக்கலாம்? என மறுபடியும் அதே கேள்வியைக் கேட்க , “காது கேட்கும் கருவி செய்யலாம்.” என்று சிரிக்காமல் கலைஞர் சொல்ல, சட்டசபை சிரிப்பிலிருந்து விலக சில நிமிட நேரங்கள் பிடித்தது.

விலக்கு விடைகளுக்கல்ல!!
அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொதப்பி விடுவர். அதனாலேயே பல அரசியல்வாதிகள் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதே இல்லை. தன்னை நோக்கி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் பொறுமையோடு கலைஞர் போன்று அணுகுபவர்கள் வெகு சிலரே. எந்தக் கேள்விக்கும் பதிலிருக்கும் அவரிடம். எண்பதாண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் பதிலளிக்காமல் விலகிச் சென்ற தருணங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
பல உயரங்களை அடைந்த கலைஞரின் வாழ்க்கையில் சில சறுக்கல்களும் நிகழ்ந்ததுண்டு. ஊழல் குற்றச்சாட்டுகள் , இருமுறை நிகழ்ந்த கட்சிப்பிளவு என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அவர் அளவிற்கு மக்களை அரசியல் படுத்திய , ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடப் போராடிய தலைவர் வேறு யாருமில்லை. விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்குத் தன் விலா எழும்புகளால் வீர வரலாறு எழுதியவர். மொத்தத்தில் கலைஞர் என்ற சொல் ஒரு சித்தாந்தம். அந்தச் சொல் நூற்றாண்டுகள் கழித்தும் வெல்லும் சொல்.