இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் அடையாள அட்டை கார்டை இணைக்க வேண்டும். இதற்கான இறுதி கெடு இம்மாதம் 31-ம் தேதி என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் தவறுபவர்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது. மேலும் பான் எண்ணும் ரத்து செய்யப்படும்.
தொடரும் அவகாசம்
வருமான வரித்துறையின் சார்பில் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு பல முறை அவகாசம் வழங்கப்பட்டது. நீட்டிப்பும் தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் இம்முறை வருமான வரித்துறை கறார் காட்ட இருக்கிறது. இந்த மார்ச் 31 ஆம் தேதிக்குப்பின்னால் கால அவகாசம் எக்காரணத்தைக்கொண்டும் நீட்டிப்பு செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் அவசியம் குறித்து கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. இதனை அடுத்தே வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தியது வருமான வரித்துறை.
எப்படி இணைப்பது?
உங்களது பான் மற்றும் ஆதார் எண்ணை இணையத்தின் மூலமாக எளிதாக இணைக்கலாம். வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்களது பான் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை அளித்தால் போதும். இணைப்புக்கான அடுத்த திரை உங்கள் முன் விரியும். ஆதார் மற்றும் பான் கார்டில் இருக்கும் பெயர்களில் வித்தியாசம் இருக்குமாயின் இந்த இணைப்புக்கான திரை திறவாது. இப்படி சிக்கல் உள்ளவர்கள் வேறு ஒரு வழியினைப் பயன்படுத்தலாம்.
பான் கார்டில் உள்ள தகவல்களை திருத்த NSDL இணையதளத்திற்கும், ஆதாரில் திருத்தம் செய்ய நினைப்போர் UTIITSL எனும் இணையதளத்திற்கும் சென்று திருத்தத்தை மேற்கொள்ளலாம்.
தகவல்களில் சிறிதளவு மாற்றம் இருப்பின் வருமான வரித்துறையினர் ஒரு முறை கடவுச் சொல்லை (OTP) மொபைல் போனுக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவரை உறுதி செய்வர் என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இரண்டு கார்டில் உள்ள தகவல்களில் எவ்வித பிழையும் இல்லை என்றால் நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இணைப்பை மேற்கொள்ளலாம். UIDPAN<SPACE><12 digit Aadhaar><SPACE><10 digit PAN> என்னும் முறையில் குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். இதற்கான விளக்கப்படம் கீழே கொடுக்கபட்டுள்ளது.
