2018 ஆம் ஆண்டை ஜப்பான் அரசு அந்நாட்டின் ”DISASTER”” ஆண்டாக அறிவித்தாலும் அறிவித்தது, அது இந்தியாவிற்கும் சேர்த்துதான் போல. அசாம் குடியுரிமை சிக்கல், இந்திய ராணுவத்தின் மீது அதிகரித்த பாகிஸ்தானின் வன்முறை, கேரளாவின் பிரளயம், டிட்லி – லூபான் இரட்டைப் புயல்கள் மற்றும் அண்ணன் கஜா! என ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களைப் பார்த்து ஐயோ பாவம்! என்று கூறுமளவிற்கு இந்த ஆண்டில் சருக்கல் கொஞ்சம் அதிகம்தான்.

வளர்ச்சி விகிதம் சரிவு
நாட்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) வளர்ச்சி விகிதம் எந்தவொரு பெரிய பொருளாதார நாடுகளை விடவும் அதிகமாக, அதாவது 8.2% என நல்ல ஓபனிங் கண்டாலும் மூன்றாவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) 7.1% என சரிவைக் கண்டது. சீனா மற்றும் அமெரிக்கா வரி விளையாட்டு இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. மேலும் வங்கிகளின் வாராக்கடன் உயர்வு (ஏறத்தாழ 9 லட்சம் கோடி) ரிசர்வ் வங்கிக்கு பெருத்த சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மோடி அவர்களுக்கு சற்று சிக்கலானதாகவே அமையும்.
டாலருக்கெதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அதைச் சரிசெய்ய அந்நிய செலவாணியை விற்றது, அதிகரித்த கச்சா எண்ணெய் விலை போன்றவை அளவிடப்பட்ட நிதிப் பற்றாக்குறையை (3.3%) தாண்டி விடுமோ என்று நடுங்க வைத்தது. தற்போது நிலவும் பெட்ரோல், டீசல் விலை சரிவு தொடருமாயின் அது மத்திய அரசுக்கு ஏற்றத்தையே கொடுக்கும்.
AAA rating
Moody’s Investor Services, Standard and Poor’s (S&P) மற்றும் Fitch Ratings Control இந்த மூன்று தனியார் அளவீட்டு நிறுவனங்களே ஒவ்வொரு நாட்டின் தேசிய வங்கிகள், தனியார் நிறுவனங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் தரக்கூறுகளை ஆராய்ந்து உலக அளவில் தனித்தனியான அளவீடுகளை வழங்குகின்றன. இதில் உள்நாட்டு அரசியல், பணவீக்கம் வங்கிகளின் செயல்பாடு, போன்ற காரணியும் அடங்கும். இந்த நிறுவனங்களின் மதிப்பீட்டு அளவிலேயே ஒவ்வொரு நிறுவனம் அல்லது வங்கியின் கடனைச் திருப்பிச் செலுத்தும் தன்மையை உலக நாடுகள் அறிந்துகொள்கின்றன.

இந்நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியாவின் மதிப்பீட்டு முறையே Baa2, BBB- , BBB-. அதாவது நமது மதிப்பு lower Medium Grade. இந்த அளவீடுகளை கருத்தில் கொண்டே முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வருவர். நாட்டில் ஏற்படும் சிறிய பொருளாதார சரிவு கூட இந்த அளவீடுகளை பாதிக்கும் . இது அந்நிய முதலீட்டில் முட்டுக்கட்டை இடக்கூடும். தற்போதய நாட்டு நடப்பை இந்நிறுவனங்கள் நன்கு கவனித்து வருகின்றன.
RBI டிஷ்யூம் டிஷ்யூம்
சக்திகாந்த தாஸ் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிலைநிறுத்தப்படும் என அசரீரி ஒலித்தாலும் அவர் மத்திய அரசுக்கு நெருக்கமானவர் என்பதால் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி மீட்கப்படுமா? எனக் குழப்பம் நிலவுகிறது.
லாப நஷ்டம்
பணமதிப்பிழப்பு மற்றும் GST அமலாக்கம் ஆகியன சம்மட்டியடியாக வர்ணிக்க பட்டாலும் அதன் பலனைக் காண சற்று காலம் பிடிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களிலேயே அதிக லாபம் தரக்கூடியதாக Indian Oil Corporation, NTPC, Ongc, Coal Inda நிறுவனங்கள் உள்ளன. இந்த ஏற்றத்தை சமப்படுத்த BSNL மற்றும் AIR India நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. இந்த இழப்பை சரிகட்ட 30 பொது நிறுவனங்களின் பங்குகள் தனியார் வசமாக்கப்பட உள்ளன. இதன் பலனை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மொத்தத்தில் 2018 ஐப் பொருத்தவரை சிறந்த சோதிடர் விருது ஜப்பானுக்கே !