மோடி தலைமயிலான மத்திய அரசு அந்தமான் நிக்கோபாரில் உள்ள மூன்று தீவுகளுக்கு பெயர்மாற்றம் செய்ய உள்ளது. தற்போது ரோஸ் (Ross Island), நீல் (Neil Island) மற்றும் ஹாவ்லாக் (Havelock Island) என்னும் பெயரில் வழங்கப்படும் தீவுகள் தான் பெயர் மாற்றத்தினைச் சந்திக்க உள்ளன. இந்திய உள்துறை அமைச்சகம் அளித்த ஆலோசனையின்படி பிரதமர் மோடி இந்த மூன்று பெயர்களை வைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் ரோஸ் தீவு – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு (Netaji Subhas Chandra Bose Island) எனவும், நீல் தீவு – ஷாஹீத் தீப் தீவு (Shaheed Dweep), ஹாவ்லாக் தீவு – ஸ்வராஜ் தீப் தீவு (Swaraj Dweep) என்றும் பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளது.
75 ஆண்டுகள்
ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியப் பகுதி ஒன்றினை முதன்முதலில் மீட்டது சுபாஷ் சந்திரபோஸ் தான். மீட்கப்பட்ட பகுதி அந்தமான் தீவுகள். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் அந்தமானைக் கைப்பற்றிய போது நேதாஜியின் ராணுவப்படை அந்தமானை ஆக்கிரமித்து இந்திய தேசியக்கொடியினை பறக்க விட்டது.
ஏ.டி. லோகநாதன் (A.D. Loganathan) என்பவரை அந்தமானின் ஆளுநராக நியமித்தார் போஸ். இந்திய தேசிய ராணுவத்தின் அப்போதைய ஜெனரலாக லோகநாதன் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி நேதாஜி தலைமையில் இந்தியாவின் மூவர்ணக்கொடியை அந்தமானில் ஏற்றினார். எனவே இந்த வருடம் அந்த நிகழ்விற்கான 75 வது ஆண்டு விழாவை இந்திய அரசு கொண்டாட இருக்கிறது.

இதற்காக டிசம்பர் 30 அன்று பிரதமர் மோடி அந்தமான் செல்கிறார். அப்போது இந்தத் தீவுகளுக்கான பெயர்மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பிரதமர்
நவம்பர் மாதம் மேற்கு வங்காளத்தின் பாஜக துணைத்தலைவர் சந்திர குமார் போஸ் (நேதாஜியின் உறவினர்) பிரதமருக்குக் கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். அதில், முதன்முதலில் இந்தியப்பகுதி ஒன்றினை மீட்டு தனது ஆளுமைக்குக் கீழ் கொண்டுவந்த நேதாஜி இந்தியாவின் முதல் பிரதமர் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் கைப்பற்றிய தீவான அந்தமானில் இருக்கும் எதாவது ஒரு தீவிற்கு அவருடய பெயரை வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அதன்பிறகே இந்தத் திட்டமானது சூடுபிடிக்கத் துவங்கியது.

நேதாஜி நம் மூவர்ணக் கொடியை முதன்முதலில் ஏற்றிய அந்தமானின் ஜிம்கானா என்னும் இடத்திற்கு வரும் 31 ஆம் தேதி மோடி பயணிக்க உள்ளார். நேதாஜியின் வீரச் செயலினைக் குறிக்கும் விதமாக தேசியக்கொடியை மோடி ஏற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நேதாஜியின் தியாகத்திற்கு 75 ஆண்டுகள் கழித்து இந்தியா தனது நன்றிக்கடனைச் செலுத்த உள்ளது.