Home அரசியல் & சமூகம் மெரினா - சென்னையின் அடையாளம்

மெரினா – சென்னையின் அடையாளம்

சென்னை வாசிகளுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழர்கள் மத்தியிலும் மெரினா என்ற சொல் பிரசித்தம். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு வந்தால் அவர்கள் மெரினாவைக் காணாமல் செல்வதில்லை. மெரினா உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. தமிழகத்தின் ஒரு பெரும் அடையாளம். சென்னை மக்களின் மாபெரும் கேளிக்கை இடம். எழில்மிகு சூழல் கொண்ட மெரினா வெறும் கடற்கரை மட்டுமல்ல, பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம். ஏழைகள் பலருக்கு இது தான் வீடு.

chennai marina beach
Credit : The Hindhu

 மெரினா – போராட்ட களம்

 அன்றிலிருந்து இன்று வரை, உரிமைக்காகப் போராட முடிவெடுத்த பின் தலைவர்கள் நேராக வருவது மெரினாவிற்குத் தான். எத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களை இந்த கடற்கரை கண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் அரிசி ஒதுக்கீட்டிற்காக செய்த போராட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை காவிரித் தாயாக மாற்றிய உண்ணாவிரதப் போராட்டம், போர் நிறுத்தம் கோரி கலைஞர் கருணாநிதி செய்த உண்ணாவிரதப் போராட்டம், கடைசியாக நம் துணை முதல்வர் செய்த தர்ம யுத்த தியானம் என போராட்டங்களுக்கு புகழ் பெற்றது மெரினா.

இதையெல்லாம் விட, ஜல்லிக்கட்டுக்காக நடந்த தன்னெழுச்சிப் போராட்டத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்து விட முடியுமா? நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் தடம் மறையாது.

jallikattu protest
Credit : Deccan Chronicle

 மெரினா – தலைவர்களின் நினைவிடங்கள்

சென்னையில் புகழ் பெற்றது மெரினா மட்டுமல்ல அங்கு இருக்கும் தலைவர்களின் சமாதிகளும் தான். இன்றும் சாலையில் அண்ணா சமாதி எங்கே? எம்.ஜி.ஆர் சமாதி எங்கே? என்று வழிகேட்டுக் கொண்டு தேடி வருபவர்கள் ஏராளம்.

மக்களுக்கு மட்டுமல்லாமல் தலைவர்களுக்கும் மெரினா மீது தீராக்காதல்.

முதன் முறையாக , அண்ணா மறைந்த பின்னர் அவரது உடல் மெரினா கடற்கரையில் கூவம் நதிக்கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பகுதி அண்ணா சதுக்கமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று தலைவர்களுக்கு அங்கே தான் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இதோ, இப்போது மறைந்த கலைஞர் கருணாநிதியையும், போராடி அங்கே துயில் கொள்ளச் செய்திருக்கின்றனர்.

மக்களுக்கு மட்டுமல்லாமல் தலைவர்களுக்கும் மெரினா மீது தீராக்காதல்.

 மெரினா – வாழ்வாதாரம் மட்டுமல்ல பலரின் வாழ்விடம்

 ஆனால், இதையெல்லாம் தாண்டி மெரினாவிற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. இந்தக்  கடற்கரையை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் ஏராளம். அவர்களுக்கு மெரினா தான் வாழ்வாதாரம். மெரினா தான் வாழ்விடம். முழு வாழ்க்கையும் அங்கேயே வாழ்ந்து முடிப்பவர்கள் பலர். குடும்பற்றவர்கள் சிலரை, குடும்பத்தோடு சிலரை, குடும்பத்தால் கை விடப்பட்ட சிலரை தன்னோடு அரவணைத்துக் கொண்டிருக்கிறது மெரினா. நாடோடிகள் கூட கூடாரம் அமைத்துத் தான் போகிற வழிகளில் தங்கிக் கொள்வார்கள். இங்கு இவர்கள் வெயிலிலும், மழையிலும் கடலை மட்டுமே நம்பிக் கொண்டு வாழ்கிறார்கள்.

நல்ல நாடு என்பது சமத்துவம் பேண வேண்டும். ஒருவருக்கு நான்கு வேளை உணவளித்து விட்டு ஒருவருக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வாய்ப்பளிக்காமல் இருப்பது சமத்துவம் ஆகாது.

அந்தக் கடற்கரையில், நம்மிடம் கையேந்தும் பிஞ்சுக் குழந்தைகளும், தள்ளாடும் முதியவர்களும் வயது வந்த பெண்களும் மனதைக் கனக்க வைக்கிறார்கள். மெரினா தலைவர்களுக்கானது மட்டுமல்ல இந்த மக்களுக்குமானது. ஆனால், இதை நாம் பெருமையாக மார் தட்டிக் கொண்டு சொல்ல முடியாது என்பது தான் உண்மை.

நல்ல நாடு என்பது சமத்துவம் பேண வேண்டும். ஒருவருக்கு நான்கு வேளை உணவளித்து விட்டு ஒருவருக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வாய்ப்பளிக்காமல் இருப்பது சமத்துவம் ஆகாது. ஒரு வாய் உணவாயினும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். அத்தகைய சமத்துவத்தை நோக்கி நகர்வதே நம் இலக்காக இருக்க வேண்டும்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே…!

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -
error: Content is protected!!