1991 ஆம் ஆண்டு. அரசியல் வேண்டாம் என்ற குடும்பத்தாரை பேசி சரிகட்டி தேர்தலில் நின்றார் மனோகர் பாரிக்கர். எதிர்த்துப்போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹாரீஸ் சான்யே பிரம்மாண்ட வெற்றி பெற்றார். பாரிக்கருக்கு வெறும் 23,000 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. முதல் தேர்தலிலேயே தோல்வி. சாதனையாளர்களுக்கு தோல்வி எப்போது தடையாக இருந்திருக்கிறது?

அடுத்து 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பானாஜி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் பாரிக்கர்.
அயராத உழைப்பு
பாரிக்கரின் முதல் வெற்றி அவருக்குள் தன்னம்பிக்கை மடையைத் திறந்துவிட்டது. தீவிரமாக உழைத்தார். கோவாவைப் பொறுத்தவரை கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே அவர்களை கட்சியினுள் இணைப்பதைத் தவிர பாஜகவின் வெற்றிக்கான வாய்ப்பு கிடையாது எனப் புரிந்துகொண்டார் பாரிக்கர். அதற்கான பரிசு 2012 ஆம் ஆண்டு கிடைத்தது.
அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கத்தோலிக்க கிறித்தவர்கள் 7 பேருக்கு சீட்கள் வழங்கினார். அனைவரும் அதில் வெற்றிபெற்றார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சி கோவாவில் ஆட்சியைக் கைப்பற்றியது.
பாஜகவின் மீதான சிறுபான்மையினரின் வெறுப்பு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கோவாவில் அதற்கு வழியில்லாமல் போனது. அதற்கு முழுக்காரணம் பாரிக்கர் மட்டுமே. எல்லோருடனும் இணக்கம் காட்டும் அவருடைய குணமே இந்த மாபெரும் வெற்றியை அவருக்கு அளித்தது.
இந்தியாவிலேயே முதன் முறையாக ஐ.ஐ.டியில் படித்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதியவர் பாரிக்கர். மும்பை ஐ.ஐ.டி-யில் உலோகவியல் துறையில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.

எளிமை
எப்பொதும் அரைக்கை சட்டை, ஸ்கூட்டர் பயணம் என சாமானியரைப் போலவே வாழ்ந்தவர் பாரிக்கர். அவருக்கு ஸ்கூட்டர் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என பலமுறை அவரே தெரிவித்துள்ளார். வீட்டிற்குத் தேவையான பொருட்களை தனது வண்டியிலேயே சென்று வாங்கிவருவார் பாரிக்கர்.
பாதுகாப்பு அமைச்சர்
2013 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் பாரிக்கர். இவரது காலத்தில் தான் உரி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இந்தியாவின் பதிலடிக்காக நடத்தப்பட்ட “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவர் இவர்தான்.
கோவாவில் 2017 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க தனது மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார் பாரிக்கர். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானார்.

புற்றுநோய்
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர் அமெரிக்கா மற்றும் எய்ம்ஸில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சைகள் ஓராண்டினை மட்டுமே அவருக்கு கூடுதலாக அளித்தன. தன்னுடைய கடைசி காலம் வரையிலும் அரசின் செயல்பாட்டில் தன்னை இணைத்துக்கொண்டவர் பாரிக்கர். “மனிதன் உலகில் எந்த நோயையும் எதிர்த்துப் போராட முடியும்” என்ற அவருடைய வார்த்தைகள் இன்று மீண்டும் மவுனமாய் ஒலிக்கின்றன.