உலகம் முழுவதும் இன்று மகாத்மா காந்தியடிகளின் 72 வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களுள் காந்தியடிகளுக்கான இடம் என்றுமே முதன்மையானது. உலகின் மாபெரும் ஜனக்கூட்டத்தை வழிநடத்திய அகிம்சை வழியில் நடத்தியவருக்கு கிடைத்த பரிசு மாபெரும் மவுனம். காந்தி இன்றய வாழ்க்கையில் எங்கிருக்கிறார்?

இயேசுவிற்குப் பின்னால்…
உலகம் சுழலத் துவங்கிய காலத்திலிருந்து போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதனை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று மதம் சார்ந்த போராட்டம். மற்றொன்று உரிமைகளுக்கான, அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டம். பெரும்பாலும் உரிமைசார் போராட்டங்களில் முன்னிலை வகிப்பவர் தான் பின்னாளில் தலைவராவார். இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். சீனாவில் செங்கொடி ஏந்திய மாசே துங், ரஷியாவின் லெனின், தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, கியூபாவின் பிடல் கேஸ்ட்ரோ, அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் என பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவருமே போராட்டத்தில் தலைமை வகித்தவர்கள். சுதந்திரம் கிடைத்தவுடன் நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தவர்களும் அவர்களே.
ஆனால் மொத்த இந்தியாவும் சுதந்திரத்தினைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், நேரு, படேல் போன்ற காங்கிரஸ் இயக்கத்தின் பெரும் தலைவர்கள் டெல்லியில் இந்தியாவின் மூவர்ணக்கொடியை ஏற்றும்போது, காந்தி கல்கத்தாவில் இடிக்கப்பட்ட வீடு ஒன்றில் உண்ணாவிரதத்தில் இருந்தார். மதத்தின் பெயரால் மனிதம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எதிர்ப்பையும் மீறி காந்தி உள்நுழைந்தார். கலவரக்காரர்கள் காந்தியின் வழியில் மலத்தையும், முள்ளையும் கொட்டினார்கள். தன் கைகளால் அவற்றைச் சுத்தம் செய்து கூப்பிய கரங்களுடன் முன்னேறினார் காந்தி. உலக வரலாறு காந்தியை வரவு வைத்த நாள் அதுதான். காந்தியை விமர்சிக்கும் பலரும் அவருடைய அந்த நவகாளி யாத்திரையை கொண்டாடுகிறார்கள்.

தொடர் உண்ணாவிரதம். நரம்பில் இரத்தம் பாய்வது தெரியுமளவிற்கு மெலிந்திருந்தார் காந்தி. போராட்டத்தை துவங்கிய சுஹவர்த்தி நேரில் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். பூரண அமைதி திரும்பிய பிறகே உணவு என்றார் கொள்கைக் கிழவர். கலவரக்காரர்கள் தங்களது ஆயுதத்தை கைவிட்டார்கள். மூன்று நாளைக்குள் தூரதேசம் போயிருந்த அமைதி நாடு திரும்பியது. அதேநேரம் அன்றைய பாகிஸ்தானில் பிரிவினை காரணமாக எழுந்த கலவரங்களை அடக்க 50,000 பேர்கொண்ட ராணுவப்படை அங்கு அனுப்பட்டிருந்தது. ஆயினும் சகஜ நிலையை அங்கே கொண்டுவர முடியவில்லை. காந்தி தன்னந்தனியாக வன்முறையை உலகின் வலிமையான ஆயுதமான அன்பால் வெற்றி கொண்டிருந்தார். அன்று மவுண்ட்பேட்டன் வெளியிட்ட அறிவிப்பில் “ஐம்பதாயிரம் பேரால் செய்ய முடியாததை காந்தி கண்முன்னே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்” என்றார்.
டெல்லியில்
கலவரம் எங்கெல்லாம் கட்டவிழ்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் காந்தி பயணப்பட்டிருக்கிறார். கல்கத்தாவைத் தொடர்ந்து டெல்லியில் பிரிவினையின் காரணமாக பதற்றம் அதிகரித்தது. தன் வாழ்நாளின் கடைசி உண்ணாவிரதத்தை அங்கே துவங்கினார். காங்கிரஸ் கட்சியிலும் உட்கட்சிப்பூசல் முளைத்திருந்தது. பிரிவினையின் கோர முகங்களை சந்தித்தவர்களுக்கு காந்தி ஆறுதல் கூட்டம் நடத்தினார். மிகவும் களைத்துப்போயிருந்த காந்தி உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லையென்றால் மீட்கமுடியா நிலைக்குச் சென்றுவிடுவார் என்றனர் மருத்துவர்கள். நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் அனைவரும் காந்தியிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் காந்தி. அதற்கு சில நாட்களுக்குப்பின்னர் தான் கோட்சேயின் தோட்டாக்களுக்கு தனது வேற்று மார்பை காட்டினார் காந்தி.

பணம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி கோவில்களில் மேல்தட்டு மக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில் கோவில்கள் விபச்சார விடுதிகளாக செயல்படுகின்றன என எழுதினார். நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் தன்னுடைய வாக்குமூலத்தை திரும்பப்பெற மறுத்தார் காந்தி. அதே வேளையில் ராமபிரானின் பக்தராகவும் விளங்கினார். மக்கள் அனைவரும் சமம் என்பதை கடைசிவரை போதித்தவர் அவர். அதனால் தான் அனைத்துவிதமான மக்களுடன் அவரால் இணைந்திருக்க முடிந்தது. எனவே மனிதர்களை சமம் என்றென்னும் எல்லோருக்குமானவர் காந்தி. அனைவருடைய நினைவுநாளில் அவர்வழி நடப்போம். ஒற்றுமையான தேசம் வளர்ப்போம்.