இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் இன்னும் மூன்று வாரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி இன்று வெளியிட்டிருக்கிறார். விவசாயி முதல் தொழில்முனைவோர் வரை பலரையும் கவரும் வகையிலான அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில சிறம்பம்சங்கள் இதோ….
- நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த தேர்வு முறையானது ரத்து செய்யப்படும்.
- பொதுப்பட்டியலில் உள்ள சில துறைகள் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.
- ‘நியாய்’ எனப்படும் குறைந்தபட்ச வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும். ‘நியாய்’ திட்டத்தால் நாட்டிலுள்ள 20 சதவீதம் ஏழைக்குடும்பங்கள் பயனடையும்.
- பண மதிப்பிழப்பு திட்டத்தின் பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் ‘நியாய்’ திட்டம் இருக்கும்.
- கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதி ஒதுக்கப்படும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தவிர்த்து, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும்.
- விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். விவசாய கடன்களை திரும்பிச் செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது. சிவில் குற்றமாகவே பார்க்கப்படும்.
- 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
- கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
- மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள நிரப்பப்படாத பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
- புதிய தொழில் துவங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை.
- 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
- பயங்கரவாதத்தை ஒழிக்க முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- தற்போது அமலில் உள்ள GST முறை மாற்றப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.
- பெட்ரோல், டீசல் GST வரம்பிற்குள் கொண்டு வரப்படும். (இதை செய்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என்பது கூடுதல் தகவல்)
- இலங்கை உடனான மீனவர் பிரச்னை முழுமையான தீர்க்கப்படும்.
- அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
- ரஃபேல் போர் விமான முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.
- புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படாது.
முன்னதாக, தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டார் ராகுல்காந்தி.