கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் – பரபரப்பு நீங்காத சபரி மலை

0
47
sabarimala controversy
Credit : The Hans India

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் 17-ஆம் தேதி ஐப்பசி மாதப் பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்களை ஐயப்ப பக்தர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அப்போது கடும் மோதலும் ஏற்பட்டது.

ஐயப்பன் கோவில் நடை திறப்பு

இந்த நிலையில், 2 மாத கால மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு நடையைத் திறந்தார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கோவில் நடை திறக்கப்படுவது இது 3-வது முறையாகும்.

அத்தாழ பூஜை முடிகிற அடுத்த மாதம் 27-ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். பிறகு நடை மூடப்படும். பின்னர் மகர விளக்கிற்காக டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு கொண்டாட்டத்துக்குப் பின்பு ஜனவரி 20-ஆம் தேதி கோவில் நடை மூடப்படும்.

sabarimala controversy
Credit : The Hans India

இந்து அமைப்பின் தலைவி கைது

இதற்கிடையே, நேற்று இரவு ஐக்கிய வேதி என்ற இந்து அமைப்பின் தலைவி சசிகலா (வயது 56) சபரிமலைக்குச் சென்றார். ஆனால், இரவு நேரம் என்பதால் அவரைப் போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, சசிகலா அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், போலீசார் சசிகலாவை கைது செய்தனர். இந்த நிலையில், சசிகலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பாஜக உள்பட பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.