இந்தியா முழுவதும் மருத்துவ செலவுகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருகின்றன. இந்த விலைவாசி ஏற்றத்தில் மருந்துப்பொருட்களின் வரிவிதிப்பு மிகமுக்கிய காரணியாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக ஆதரவில்லாத வயதானவர்காளின் கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த மாபெரும் துயரிலிருந்து மக்களை கேரள அரசு மீட்டெடுக்கத் துணிந்திருக்கிறது. அம்மாநில உயர்நீதிமன்றம், மருந்துப்பொருட்களுக்கான வரிவிதிப்பை நீக்குமாறு அரசிற்கு உத்தரவிட்டிருக்கிறது. இதுவரை விதிக்கப்பட்டுவந்த விற்பனை வரி இனிமேல் இருக்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

“நீதி” மன்றம்
நீதிபதிகள் வினோத் சந்திரன், முகமது முஷ்டாக் மற்றும் அசோக் மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு மருத்துவமனைகளின் முதல்பணி நோயுற்றவர்களை குணமடையசெய்வது மட்டும்தான். மருந்துப் பொருட்களின் விற்பனைக்காக கூடுதல் செலவை மக்களிடம் திணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்குரிய செலவை நோயாளிகளிடம் பெற்றுக்கொள்ளலாம். அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான வரிவிதிப்பை முழுவதுமாக நீக்குவதன் மூலம் எளிய மக்களும் உரிய மருத்துவ வசதிகளைப் பெற்று நலமுடன் வாழ வழிவகை செய்யலாம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வியாபார சந்தை அல்ல
ஆதரவற்றோர் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் இயங்கும் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் எந்த மருந்துப் பொருட்களுக்கும் இனி வரிவிதிப்பு கிடையாது. பொதுமக்களிடையே இந்த தீர்ப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் ஏராளமான மக்கள் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

ஆண்டுக்கு சராசரியாக இந்தியா 10,000 கோடி மருத்துவத்துறைக்கு ஒதுக்குகிறது. இருப்பினும் கிராமப்புற மக்களுக்கான வசதிகள் இன்னும் சரிவர கிடைப்பதில்லை. மேலும் பெருகிவிட்ட தனியார் மருத்துவமனைகள் தங்களுடைய சுய லாபத்திற்காக பொதுமக்களைப் பயன்படுத்திக் கொல்(ள்)கின்றனர். சில அரசு மருத்துவமனைகள் செய்யும் தவறால் இலவச மருத்துவம் குறித்து மக்களிடையே ஐயப்பாடு அதிகரித்துள்ளது. இழந்துபோன நம்பிக்கையை மறுபடியும் அவர்களுக்கு அளிக்கவேண்டியது அரசின் கடமையாகும். அதற்கு இம்மாதிரியான திட்டங்கள் மிகவும் அவசியமானவை.