கேரள வெள்ளம் தமிழ்நாட்டிற்கும் பாடம்..! – என்ன தான் தீர்வு ?

0
69
Credit : NDTV

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி மீண்டுள்ளது கேரளா. மழையின் கோர தாண்டவத்தில் 350-க்கும் மேற்பட்டோர் மரணித்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். 4000-க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் நம்மை, உலகெங்கும் மாறி வரும் பருவ சூழல்களை கவனிக்கச் சொல்லி நினைவுறுத்துகிறது. உலகில் ஏற்படும் எல்லா வெள்ளங்களும் மழைப்பொழிவால் ஏற்படுவதில்லை. சென்னையில் 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தை மறக்க முடியுமா? அது இயற்கையால் அல்லது மழையால் ஏற்பட்டது இல்லை. ஆனால், மாறி வரும் பருவச்சூழல்கள் இத்தகைய பேரிடர்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Credit : NDTV

கேரளாவில் மழை

பருவ காலம் பொதுவாகவே நல்ல மழையைப் பரிசளிக்கும். ஆனால், இந்த வருடம் கேரளா, வழக்கத்தை விட 42% அதிகமான மழையைப் பெற்றுள்ளது. ஜுன் மாதம் தொடங்கிய பருவ காலத்தில், மாநிலம் முழுவதும் சுமார் 2300 மிமி மழை பதிவாகியுள்ளது. அதில் ஆகஸ்ட் மாதம் மட்டும் 700 மிமி-க்கு மேல்.

இது சென்ற வருடம் அமெரிக்காவின் ஹூஸ்டன் (Houston) நகரத்தைப் புரட்டிப் போட்ட, ஹார்வி புயலின் (Hurricane Harvey) தன்மையை ஒத்த பாதிப்பை கேரளாவில் ஏற்படுத்தியுள்ளது. ஹார்வி போன்ற சூறாவளிகளால், உலக வெப்பநிலை 2℃ முதல் 10% வரை உயரும் எனக் கணிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால், தீவிர மழை பொழியும் அளவு இந்த நூற்றாண்டின் இறுதியில் ஆறு மடங்கு அதிகரிக்குமாம். கேரளாவின் ஆறுகள்  மற்றும் வடிகால் அமைப்பு போன்றவற்றின் காரணமாக இத்தகைய பெரிய அளவிலான வெள்ளத்தை அவர்களால் சமாளிக்க முடியாமல் போயிற்று.

காடுகள் அழிவே காரணம்

தென்னிந்தியாவிலேயே மலைக்காடுகளை அதிகம் சீரழித்திருப்பது கேரளா தான். காடுகளை மனிதர்களால் ஒருக்காலும் உருவாக்க முடியாது. மலையாளக் காடுகளில் அவர்கள் பேணுவதெல்லாம் அவர்கள் உருவாக்கிய தோப்புகளே.

கடந்த 40 வருடங்களில் கேரள மக்கள் 9000 சதுர கிலோ மீட்டர் காடுகளை அழித்திருக்கிறார்கள்.

மலைகளில் அதுவும் தென்மேற்கு பருவக்காற்று மழை பொழியும் சோலைக் காடுகளைக் கொண்ட மலைகளில், இத்தனை அணைகள் கட்டியிருப்பதை என்னவென்று சொல்வது.

கடந்த 40 வருடங்களில் கேரள மக்கள் 9000 சதுர கிலோ மீட்டர் காடுகளை அழித்திருக்கிறார்கள். இது அவர்கள் கொண்டிருந்த காடுகளின் 50% ஆகும்.  இதனால், அதிகம் மழை பொழியும் நேரங்களில் தண்ணீர் இயற்கையாக வடிய வசதி இல்லாததால், வெள்ளமாகப் பிரவாகமெடுக்கிறது.

கேரள வெள்ளம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பார்க்கும் போது நமக்குத் தெரியும். பெரும்பாலான சேதங்கள் நிலச்சரிவால் தான் ஏற்பட்டிருக்கின்றன. ஓடும் தண்ணீர் மண்ணின் நிறத்தில் ஓடுகிறது. மண்ணரிப்பு காரணமாக மாறி வரும் புவியின் தன்மையும் மழைப்பொழிவின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வரலாறு காணாத வெள்ளம்

100 ஆண்டுகளில் ஏற்பாடாத பெரும் அழிவு என கேரள வெள்ளத்தை அம்மாநில முதல்வர் குறிப்பிடுகிறார். ஒரு சம்பவத்தின் தீவிரத் தன்மையைக் குறிக்க இது போன்ற சொல்லாடல்கள் அடிக்கடி பயன்படுகின்றன. கடந்த 100 வருடத்தில் வரலாறு காணாத வெள்ளமாக கேரளா வெள்ளம் அங்கீகரிக்கப் பட்டாலும், ஒரு இயற்கைப் பேரிடரை வர்ணிக்க இத்தகைய வார்த்தைப் பயன்பாடுகள் பயனற்றவை. ஒரு வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.

Credit : Hindustan

ஒரு எடுத்துக்காட்டுக்கு, 100 ஆண்டுகளில் இத்தகைய பேரிடர் ஏற்பட நான்கில் ஒரு பங்கு வாய்ப்பிருப்பதாக வைத்துக் கொள்ளலாம். இந்த 25% வாய்ப்பு, ஒரு வேளை, நாம் வீட்டிற்காக வாங்கிய கடனைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஏற்படலாம். வாங்கிய கடனை அடைக்கும் முன்னரே நம் வீடு வெள்ளத்தால் பாதிக்கப் படலாம். எனவே, வரலாற்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இராமல், நாம் நமக்கு ஏற்பட வாய்ப்பிருக்கும் அபாயத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

என்ன செய்வது ?

மத்திய மற்றும் மாநில அரசுகள், முகவர்களையும் தன்னார்வலர்களையும் ஒன்றிணைத்து வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களின் வரைபடங்களைத் தயாரித்து, அவற்றை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற அபாயங்களில் நமக்கு பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்வது தான் பெரும் சவாலாக இருக்கும். அத்தகைய பிரச்சனைகளுக்கு இந்த நீண்ட கால கொள்கை முடிவுகள் தீர்வளிக்கும். இங்கிலாந்து அரசு இது போன்ற 25 ஆண்டு கால சுற்றுச்சூழல் திட்டத்தைக் கொண்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு என்பது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும், பிராந்தியங்களுக்கும் மற்றும் உலகத்திற்கே ஒரு சவால் ஆகும்.

தற்போது நம்மிடம் இருக்கும் வெள்ள அபாயம் குறித்த புள்ளி விவரங்கள், திட்டங்கள் அனைத்தும் நதிகளின் முந்தைய போக்கிற்குத் தகுந்தாற் போல வடிவமைக்கப் பட்டது. ஆனால், இப்போது பருவநிலை மாறி இருக்கிறது, மழை பொழியும் பருவங்கள் மாறியிருக்கின்றன, நதிகளின் போக்கு மாறி இருக்கிறது. இது போன்ற தீவிர மழைப் பொழிவுகள் நம் நிலத்தை பாதிக்கின்றன. ஆறுகளும் அதன் தளங்களும் இன்னும் மாறும் அல்லது மாற்றப்படும். நாம் பின் தங்கி இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

எவ்வளவு விரைவாக இயற்கை மாறி வருகிறது ? எவ்வளவு விரைவாக வெள்ள வடிகால் அமைப்பிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நாம் கவனம் செலுத்துகிறோம் ? என்பது வரும் காலங்களில் வெள்ள அபாயங்களில் முக்கியப் பங்கு வகிக்கும்.

வெள்ளப்பெருக்கு என்பது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும், பிராந்தியங்களுக்கும் மற்றும் உலகத்திற்கே ஒரு சவால் ஆகும். இனி வரும் காலங்களில் இத்தகைய பேரிடர் அபாயங்கள்  ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். அது மிகப்பெரிய தாக்கத்தையும் உருவாக்கலாம். நமக்குத் தேவை இப்போது தீர்வு தான்.