காஷ்மீர் பிரச்சனைகள் பற்றிய செய்திகளின் போது அதில் தவறாமல் இடம்பெறும் வாக்கியம் 35A சட்டத்தை நீக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கும். பொதுவாக, சட்டம் என்பது நெறிப்படுத்திய வழியில் மக்களை நடக்கச்செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் தான். அப்படியிருக்க ஏன் சட்டத்திற்கு எதிராக/ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள்? அப்படி என்னதான் இருக்கிறது அந்தச் சட்டத்தில்? விரிவாக பார்க்கலாம்.

35A
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரமாக வசிப்பவர்கள் என்று கருதுபவர்களுக்கு வேலை மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் `35A சட்டவிதி` சிறப்பு சலுகையை அளிக்கிறது. குறிப்பிட்ட சில சலுகைகளை அம்மாநிலத்தவர் மட்டும் அனுபவிக்கலாம். குறிப்பாக, காஷ்மீர் மக்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். வெளிமாநிலத்தவர் எவருக்கும் இந்த உரிமை கிடையாது. மாநில அரசுப்பணிகளுக்கு அம்மாநிலத்தைச் சேராதவர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாது. மேலும் இந்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை மறுக்கும் உரிமை காஷ்மீர் சட்ட மன்றத்திற்கு உண்டு. இப்படியான சலுகைகளை அரசியலமைப்புப் பிரிவு 35A அம்மாநிலத்திற்கு வழங்குகிறது. 1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
வி தெ சிட்டிசென்ஸ்` (We the Citizens) என்னும் டெல்லியைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தால், சட்டவிதி 35A ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மனு 2014ஆம் ஆண்டு தொடரப்பட்டது. இது “சட்டவிரோதமானது” என்றும், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறி, அந்த சட்ட விதியை ரத்து செய்யக் கோருகின்றனர். இந்த அரசு சாரா நிறுவனம், இந்துத்துவா வலது சாரி நிறுவனங்களின் ஆதரவு பெற்றது என்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் நிறுவனம் என்றும் பல ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏன் நீக்க வேண்டும்?
காஷ்மீரின் இந்த விவகாரமான சட்டம் நேருவினால் 1947 ஆம் ஆண்டிலேயே பரிந்துரைக்கப்பட்டாலும், 1954 ஆம் ஆண்டு தான் இச்சட்டம் அதிகாரப்பூர்வமாக கொண்டுவரப்பட்டது. அப்போதைய காஷ்மீரில் நடைபெற்ற கலவரங்களைக் கட்டுப்படுத்த இந்த முடிவை எடுத்தார் இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத். விதி 370 ஐப் பயன்படுத்தி ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கவோ மறுக்கவோ முடியும். அங்குதான் சிக்கல் முளைக்கிறது. 370 ன் மூலம் பழைய சட்டங்களில் திருத்தம் கொண்டுவர முடியுமே தவிர, நிரந்தர சட்டத்தை கொண்டுவர முடியுமா? என்ற கேள்விக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பதில் இல்லை.

அதே நேரம் புதிய சட்டம் ஒன்றினைக் கொண்டுவர வேண்டுமானால் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறது 368 வது பிரிவு. எனவே குடியரசுத்தலைவர் தாமாகவே இந்த சட்டத்தை முன்மொழிந்திருப்பதாகவும், இது தவறு என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
என்னதான் தீர்வு?
இந்திய அரசிலமைப்புச் சட்டத்தினை இந்திய குடிமக்கள் அனைவரும் மதிக்கவேண்டும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் மரபின் அடிப்படையில் ஒருவருக்கு கிடைத்துவந்த உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் செயல்படுவதும் தவறாகிறது. காஷ்மீர் மக்களின் அவலக்குரல்கள் சில நேரங்களில் கோபத்தின் வெளிப்பாடகவும் மாறுவதை வரலாறு நமக்குக் காட்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறிப்பது மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படத்தும்.
ஏராளமான அப்பாவி பொதுமக்களின் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படும். குருதி தோய்ந்த நிலத்தின்மீது நடந்துசென்று நாம் யாருக்காக சட்டத்தை நிறுவப்போகிறோம்?