மரணத்திற்குப் பிறகும் படுகொலை செய்யப்படும் மகாத்மா காந்தி

0
65
kamal_haasan

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமலின் இந்தப் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் எதிர்வினையாக கமலஹாசன் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்று யாரோ திருத்தம் செய்து இருக்கிறார்கள். அதன் பின்னர் அது மாற்றப்பட்டு சில மணி நேரங்களுக்குள்ளாகவே மீண்டும் அதே ஆசாமி கமலஹாசன் பிறந்த இடம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற தகவலையும் சேர்த்துள்ளார்.

kamal_haasan

இப்படி இணைய தகவல் வழங்கி வலைத்தளமான விக்கிபீடியாவில் கமலுக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதிமுக, பாஜக கட்சிகள் இந்த பேச்சுக்கு கடும் எதிர் வினையை ஆற்றி வருகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு படி மேலே போய் கமல்ஹாசன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார், அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என காட்ட சட்டமாக பேசியிருக்கிறார். பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மீண்டும் மீண்டும் கொல்லப்படும் காந்தி

சுதந்திர இந்தியாவின் மண்ணில் காந்தியின் ரத்தம் ஊற்று எடுப்பதற்கு காரணமாக இருந்தவன் நாதுராம் விநாயக் கோட்சே. உலகத்தை உலுக்கிய மரணங்களில் ஒன்று மகாத்மா உடையது. காந்தியை புரிந்துகொள்ள எப்படி காந்தியின் படுகொலை அவசியமோ? அதேபோல் கமல்ஹாசனின் இந்தப் பேச்சில் இருக்கும் தர்க்கத்தைப் புரிந்துகொள்ள காந்தியின் கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ளுதல் மிக அவசியம். கொலைகளுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அல்லது எந்த வன்முறை செயலுக்கும் பின்னால் இருக்கும் பிரதான காரணம் என்ன? என்பதைத் தான் இந்த உலகம் கவனித்து வந்திருக்கிறது.

ஹிட்லரின் காலத்தில் இலட்சக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட யூதர்களின் மரணங்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? சந்தேகமே இல்லாமல் அது ஹிட்லரின் இனவெறி தான். யூதர்களின் மீதான அவருடைய கொலைவெறித் தாக்குதல்களை வார்த்தைகளில் விவரித்து விட முடியாது. அத்தனை பெரிய துயர சம்பவத்திற்கு காரணமாயிருப்பது தன்னை இனரீதியாக முன்னிறுத்திக்கொள்ள முயன்ற ஹிட்லரின் ஆபத்தான நடவடிக்கைதான்.

Mahatma-Gandhi
Credit: The Wire

நபிகள் நாயகத்திற்கும், அபுபக்கருக்கும் அடுத்து வந்த கலிஃபாக்கள் சுழற்றிய வாளினால் கொப்பளித்த ரத்த ஊற்றின் கண் இஸ்லாம் மதத்தை தவறாக புரிந்து கொண்டதன் விளைவே ஆகும். சிலுவைப் போர்களும் இதே மாதிரியான எடுத்துக்காட்டைத்தான் நம்மிடம் தருகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் சிக்கல்களை மதத்தின் அடிப்படையில் ஓர் இனத்தின் அடிப்படையிலும் எதிர்கொள்ளும் ஒரு தனி மனிதன் செய்யும் தவறு அந்த இனத்தின் மீதே பரவுகிறது. இதனைக் களைய மதங்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மதத்தின் காரணமாக வன்முறையில் இறங்குவது தவறு என்பதை மத தலைவர்கள் வெகுஜன மனிதர்களிடம் புரியவைக்கவேண்டும்.

கோட்சே காந்தியைக் கொன்றதற்கான முதற்காரணம் அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார், இதனால் இந்தியாவில் இந்துக்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்னும் குறைமதி கொண்ட சிந்தனையால். இந்து மதத்தை காக்கும் பொருட்டு செய்யப்பட்ட கொலை என சில மதவெறியர்கள் பேசுவது கோட்சேவின் இந்த செயலுக்கு எல்லா இந்து மக்களின் ஆதரவும் இருப்பது போல் உள்ள பிம்பத்தை கட்டமைக்கத்தான். தனிமனிதனை பலியிடுவதன் மூலம் மதத்தை தூய்மையாக்கி விடலாம் என்பதுதான் பயங்கரவாதிகள் முகவரி. அதில் விநாயக் கோட்சேவும் அதே தெரு தான், ஒசாமா பின்லேடனும் அதே தெரு தான். அவர்கள் இருவருமே அவர்கள் சார்ந்த மதத்துடன் தான் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். காரணம் அவர்கள் இயங்குவதற்கு முழு காரணமே அல்லது அவர்களுடைய கோர முகத்திற்கு காரணமே மதம் பற்றிய அவர்களுடைய தவறான புரிதலாகும். இதனால் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிவேக வளர்ச்சியை கொண்டிருக்கும் மதங்கள் தங்களது ஆணிவேர் கவனிக்காமல் விட்டதன் விளைவுதான் இவை. இதை இப்படியும் சொல்லலாம் ஒரு குறிப்பிட்ட மதத்தில் நடக்கும் மதம் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க அதன் தலைவர்கள் களம் காண வேண்டும். அவர்களிடையே ஒற்றுமையின்மையும் தீவிரவாதக் மனப்போக்கும் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். கோட்சே காலத்தில் அவர் பின்பற்றிய இந்து மதத் தலைவர்கள் அப்படி இருந்ததன் விளைவு தான் இது.

சரி, கோட்சேவுக்கு கோவில் கட்டுவோம் என்று அறிக்கைவிட்ட மத்திய அமைச்சருக்கு அரசு ஒரு எச்சரிக்கை கூட வழங்கவில்லை. மகாத்மா காந்தியின் சிலையை துப்பாக்கியால் சுட்ட சாமியாரினி உட்பட பலரும் இன்றும் காந்திக்கு எதிராகத்தான் பேசி வருகின்றனர். அப்படி என்றால் மத்திய அரசு கோட்சேவிற்கு ஆதரவாக செயல்படுகிறதா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

மதங்களை விட மனிதம் முக்கியம் என்ற எண்ணத்தை வெகுஜன மக்களிடம் பரப்ப மதங்கள் ஒத்துழைத்தால் மட்டுமே நாளை நம்முடையதாக இருக்கும். சமாதானத்தையும், அன்பையும் மட்டுமே ஆதரித்த காந்தியின் உடம்பிலிருந்து அதுவரை ரத்தம் கசியும்.

எஞ்சும் கேள்விகள்

கமல்ஹாசன் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலின்போது இப்பிரச்சினையை பேசாமல் தற்போது காந்தி மரணம் பற்றி பேசுவது ஏன்?

வழக்கத்திற்கு மாறாக அதிமுக அமைச்சர்கள் குறிப்பாக ராஜேந்திர பாலாஜி இதில் கமலை சாடுவது யாரை ஈர்ப்பதற்காக?

பிஜேபியின் பி டீம் என மக்கள் நீதிமையத்தை வசைபாடிய கட்சிகளைக் கொண்டே பாஜகவை எதிர்த்து தனது ராஜ தந்திரத்தைக் கொண்டு களமாடியிருக்கிறாரா கமல்? போன்ற கேள்விகளுக்கு தர்க்கத்துடன் விடை சொல்லத்தெரிந்தால் சமகால அரசியல் எதை நோக்கி பயணிக்கிறது என்பது புரியும்.