இலவசங்களால் வீழ்ந்தோமா? – என்ன சொல்கிறது ‘சர்கார்’ திரைப்படம்

0
87

தீபாவளி அன்று வெளியாகி, பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம். சென்னை மற்றும் பிற ஊர்களில் சர்கார் திரைப்படத்தின் விளம்பரப் பலகைகள் கிழிக்கப்படுகின்றன. எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆளுங்கட்சி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி, வெகுஜன மக்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பது, திரைப்படம் முன்வைக்கும் “இலவசங்களால் வீழ்ந்தோம்” என்று கூற்று தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இலவசங்களால் வீழ்ந்தோமா ?

முன்பொரு காலம் இருந்தது. அப்போது பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல மாட்டார்கள். ஏழை மக்களால் அந்த செலவுகளைச் சுமக்க முடியாது. வீட்டில் இருந்தால் வருமானம் இல்லாவிட்டாலும் செலவாவது இருக்காது என்பது அந்தக் கால மக்களின் நியாயமான எண்ணம். அப்போது தான் அன்றைய முதல்வர் காமராஜர் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஒரு வேளையாவது பிள்ளைகள் உணவு உண்ணட்டும் என்று பள்ளிக்கு அனுப்பினர் பெற்றோர். அதன் பின்னர் தான் சீருடை முதல் செருப்பு வரை இலவசமாக பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த இலவசங்களால் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் ஏராளம்.

அரசு இலவசமாகத் தரும் அரிசியை நம்பி வாழும் மக்கள் இன்றும் எங்கள் கிராமங்களில் உண்டு. பேருந்து வசதி கூட இல்லாத அந்த கிராமங்களில் இருந்து படிக்கச் செல்லும் மாணவ மாணவிகளுக்காக வழங்கப்பட்டது தான் சைக்கிள். காப்பீட்டுத் திட்டம் வருவதற்கு முன்பு வரை எத்தனை பேர் இன்சூரன்ஸ் என்பது ஆடம்பரச் செலவு என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? வீட்டில் நடக்கும் பிரசவங்களைத் தவிர்த்து மருத்துவமனைக்கு வர வைக்கத் தான் மகப்பேறு நலத்திட்ட உதவிகள்.

கல்லூரிக்குச் செல்லும் வரை கணினி என்பதைக் கண்ணில் கூட கண்டிராத மாணவ மாணவிகள் இன்று பாடங்களை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து படிக்கின்றனர். விறகடுப்பிலும், மண்ணெண்ணெப் புகையிலும் வெந்த பெண்கள் காஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தான் இலவசங்களால் வீழ்ந்தோம் என்கிறார்களா?

அரசின் கடமை

குடிமக்களின் தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்வது ஒவ்வொரு அரசின் கடமை ஆகும். அவையெல்லாம் ஒரு போதும் இலவசங்களில் சேராது. இலவசங்கள் கண்ணில் காண்பவர்களுக்கு எல்லாம் தூக்கிக் கொடுக்கப் படுவது இல்லை. தேவையிருக்கும் மக்களுக்கு மட்டுமே அளிக்கப் படுகின்றன. ரேஷன் அட்டைகளில் கூட எல்லா அட்டைக்குமெல்லாம் இலவச அரிசி கிடைக்காது. வருமான வரம்பை வைத்தே தகுதியானோர் பிரிக்கப் படுகிறார்கள்.

ஆனால், அதிலும் அத்தியாவசியம், ஆடம்பரம் என்று பிரிவுகள் இருக்கின்றன.  வெறுமனே மக்களைக் கவர்வதற்காக இலவசங்களை வாரி இரைத்தல் விரயத்தில் தான் சேரும். (பணிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டி அத்தியாவசியம், வீட்டிற்கொரு ஸ்மார்ட்போன் ஆடம்பரம்). இதற்கெல்லாம் மேலாக  வழங்கப்படும் பொருட்களின் தரம் என்று ஒன்று இருக்கிறது. வழங்கப்படும் இலவசப் பொருட்களில் பாதிக்குப் பாதி தரம் குறைந்தவையாகவே இருக்கின்றன என்பது நாம் கண் கூடாகப் பார்த்த உண்மை. அரசு இதைச் சலுகையாக நினைத்துச் செய்யாமல், தங்கள் கடமையாக நினைத்துச் செய்ய வேண்டும்.

இலவசங்களின் தேவை ஏதும் இல்லாமல் தன்னிறைவு பெற்ற வாழ்வை வாழ்பவர்களுக்கு அவை கேலிப் பொருளாகத் தான் தெரியும். அவர்களைப் பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. அவை இலவசங்கள் அல்ல. நம் சர்கார் நமக்கு செய்ய வேண்டிய கடமை.