மரபுசார் ஆற்றலை அதிகம் பயன்படுத்துவது மனிதகுலத்திற்கு பல்வேறு சிரமங்களைக் கொடுக்கிறது. பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் என இதனால் இயற்கை அதன் அச்சில் இருந்து விலகி வெகுதூரம் பயணித்துவிட்டது. நம்மால் மீண்டும் பூமியை பசுமையாக்க வேண்டுமென்றால் கிட்டத்தட்ட அமெரிக்கா அளவிற்கு மரங்களை வளர்க்கவேண்டும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளையில் மரபுசாரா ஆற்றல் மூலம் இயற்கையின் மீதான வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்பதற்கு சாட்சியாக மொராக்கோவில் உருவாகி வருகிறது உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தைக்கொண்டு பாராகுவே போல இரு நாட்டிற்கு மின்சாரம் வழங்கலாம். அதாவது சுமார் 10 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான மின்சாரத்தை இந்த பூங்காவால் தயாரிக்க முடியும்.

மொராக்கோவின் நூர் குவார்சசேட் (Noor Ouarzazate) என்னும் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது 3500 கால்பந்தாட்ட மைதானத்திற்கு சமமாகும். இதன்மூலம் 580 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்க முடியும். இவ்வளவு மின்சாரத்தை பெட்ரோல் நிலக்கரி கொண்டு உருவாக்கினால் சுமார் 760,000 டன் கரியமிலவாயு உருவாகும். இந்த திட்டம் எத்தனை முக்கியமானது என்பதற்கு இதுவே சாட்சி.
சஹாரா பாலைவனத்தின் அருகில் 243 அடி உயர குறத்தில் இந்த சோலார் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. உருகிய நிலையில் உப்பினை சேகரித்துவைக்க தனியாக கலன்களும் இங்கே அமைப்பட்டிருக்கிறது. பகல்வேளையில் இந்த உப்பு கொள்கலனில் சூரியக்கதிர்கள் பாய்ச்சப்பட்டு உருக்கப்படும். அதில் தேங்கியுள்ள வெப்பத்தினை இரவில் மின்சாரமாக மாற்றிக்கொள்கிறார்கள்.

தற்போதைய நிலையில் மொராக்கோ 97% மின்சார உற்பத்தியை மரபுசார் வளங்களைக்கொண்டு பெறுகின்றனர். ஆனால் இந்த திட்டம் மூலம் நாட்டின் மின்சார தேவையில் 42 சதவிகிதத்தை சமாளிக்கலாம். இனிவரும் காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என இங்கு பணியாற்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இங்கே 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் அடுத்த இருபது ஆண்டுகளில் நாட்டின் மின்சார தேவை இருமடங்காகும் எனத் தெரிவிக்கப்படிருந்தது. இதையடுத்து தீவிரமாக செயல்பட்ட அந்நாட்டு அரசு உலகவங்கியிடம் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப்பெற்று இந்த திட்டத்தை துவங்கியது. கிளீன் டெக்னாலாஜி நிறுவனம் 216 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த சோலார் பூங்காவில் முதலீடு செய்துள்ளது. இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் வளர்ச்சி பாதையினை அமைப்பதுதான் நம்மிடம் இருக்கும் ஒரே வழி என்பதை மொரோக்கோ மக்கள் நான்கு புரிந்துகொண்டுவிட்டனர்.