உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதகுலம் எத்தனையோ படிநிலைகளைத் தாண்டி முன்னேற்றப்பாதையில் வீறு நடைபோடுகிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் உழைப்புதான்.
உழைப்பாளர் தினம் வரலாறு
காலச்சக்கரம் வேகமாக சுழன்றதில் தலைவர்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் மக்கள் வாழக்கற்றுக்கொண்டனர். அதனையடுத்து செல்வந்தர்கள், தொழிற்சாலை நிறுவனர்கள் வளரத்தொடங்கியபோது பொருளாதார வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது. மனிதர்களது தேவைகளும் அதிகரித்துக்கொண்டே சென்றன. இதனை தொழிலதிபர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதிக உற்பத்திக்காக உழைப்பாளர்களை மிருகம் போல் வேலைவாங்கினர்.

எண்ணெய் பிசுபிசுப்பும், வியர்வை பூத்த சட்டையும் சில துண்டு ரொட்டிகளுமே சாதாரண உழைக்கும் வர்க்கத்தின் வாடிக்கையாகிவிட்டது. ஒருபுறம் செல்வந்தர்கள் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொள்ள அதே நேரத்தில் கால் வயிற்றுக்கஞ்சிக்கு பல மணிநேரம் மக்கள் உழைக்க வேண்டியிருந்தது. இதனை எதிர்த்து முதலில் மக்கள் போராடத் தொடங்கியது அமெரிக்காவில் தான்.
அன்று மே 1 ஆம் தேதி 1886 ஆம் வருடம். கார்மிக் ஹார்வெஸ்டர் தொழிற்சாலையின் முன்பாக ஏராளமான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வேலை நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்யக்கோரி நடந்த அப்போராட்டத்தில் அப்பாவி மக்கள்மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. போலீசார் நடத்திய தாக்குதலில் சில தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனை எதிர்த்து அன்று இரவே மீண்டும் பொதுஇடங்களில் தொழிலாளர்கள் கூடினர். மீண்டும் தாக்குதல்களை நடத்தியது ஆளும் வர்க்கம்.

இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் இருந்தவர்களால் தான் இந்த உலகத்தின் திசையை மாற்ற முடியும் என்பதற்கு சாட்சி சொன்னார்கள் அங்கிருந்த அனைவரும். அவர்களுடைய போராட்டம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. தீப்பொறி விழுந்து காடு எறிந்து சாம்பலானது. அதனோடு பழைய குரூர சட்டங்களும் தீக்கிரையாயின.
உலகம் முழுவதும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்றக் காரணமாக இருந்த இந்த மாபெரும் உரிமைப்போராட்டம் துவங்கிய நாள் மே 1 என்பதால் தான் இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் நியோதமிழின் இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!!