சீனாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே 4600 கோடி அமெரிக்க டாலர் செலவில் பொருளாதார ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தினை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. சீனா – பாகிஸ்தான் இடையேயான திட்டத்தை இந்தியா ஏன் எதிர்க்க வேண்டும் ? வெளிப்படையாக இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லாதது போல் தெரியலாம். ஆனால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவால் இது.

போர்மேகங்கள்
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வருகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் அதிகமான வளர்ச்சி விகிதங்களைக் கொண்டுள்ளன. ஏற்றுமதி, உட்கட்டமைப்பு போன்றவற்றில் சீனாவுடன் கடும் போட்டி போடுகிறது இந்தியா. இதனிடையே தற்போது அமெரிக்க அரசாங்கம் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளது. இந்திய – அமெரிக்க வர்த்தக உறவிற்கு இது புதிய கதவினைத் திறந்து வைத்துள்ளது. சீனப் பொருட்களை அதிக விலையின் காரணமாக அமெரிக்க மக்கள் தவிர்க்கவே, அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.
மேலும், கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, பர்மா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடனான வியாபாரத்தை இந்தியா பெருக்கி வருகிறது. இதனால் சீனப் பொருட்களின் விற்பனை இடங்கள் சுருங்கி வருகின்றன. இந்தியாவின் இந்த அதிவேக வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தும் விதமாக சீனா சில அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ராணுவக் கப்பல்களை நிலை நிறுத்துவது, இலங்கையுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் அதன் எல்லைகளுக்குள் தங்களது போர்க்கப்பல்களை வலம் வர வைப்பது போன்றவை அதன் காரணமாகத் தான். மாலத்தீவுகளுடனும் அந்த அரசு பேச்சுவார்த்தையில் உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் புதிய பாகிஸ்தான் – சீனா பொருளாதார ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
திட்டம்
சீனாவின் ஷின்ஜியாங் (Xinjiang) மாகாணத்திலிருந்து பாகிஸ்தானின் க்வாதார் (Gwadar) துறைமுகம் வரையிலும் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடக்க இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம், நெடுஞ்சாலை, ரயில் பாதை அமைத்தல், விவசாய மேம்பாடு, சுற்றுலா மையம் எனப் பல துறைகள் இதன் மூலம் முன்னேற்றமடையும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தான் மீள்வதற்கு இமாதிரியான திட்டங்கள் அத்தியாவசியமானவை.
இந்தியா ஏன் எதிர்க்கிறது ?
சீனா – பாகிஸ்தான் பொருளாதாரத் திட்டத்தினை இந்தியா எதிர்ப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. இந்தத் திட்டத்தின் படி அமைக்கப்படும் சாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் வருகிறது. ஏற்கனவே அப்பகுதிகளில் தீவிரவாதக் குழுக்களுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் தீவிரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என வாதாடுகிறது இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகம்.
மேலும், அப்பிராந்தியத்தில் உள்ள வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுடன் இராணுவ உடன்படிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது. தென்சீனக் கடலில் தன் பலத்தை அதிகரித்து வரும் சீனா, இந்தியாவுடனான வர்த்தகப் போட்டியில் தனது காய்களைப் பொறுமையாக நகர்த்தி வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இத்திட்டம் அதிகரிக்கும் என இந்திய அரசு கடுமையாகச் சாடுகிறது.
எந்தவொரு நாட்டிற்கும் பதற்றமான சூழ்நிலைகளைக் குறைப்பதே நீடித்த வளர்ச்சியினைக் கொடுக்கும். பாகிஸ்தானில் புதிதாகப் பதவியேற்றுள்ள இம்ரான் கான் தலைமையிலான அரசு, இந்தியாவுடன் நட்புறவு கொள்ள விருப்பம் தெரிவித்து வரும் நிலையில் இப்பிரச்சனையை பாகிஸ்தான் அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.