Home அரசியல் & சமூகம் சர்வதேச அரசியல் ஜமால் கஷோகி யார்? அவர் கொலை செய்யப்பட்டது ஏன்? தொடரும் பிரச்சினைகள்

ஜமால் கஷோகி யார்? அவர் கொலை செய்யப்பட்டது ஏன்? தொடரும் பிரச்சினைகள்

சமீப காலமாக அனைத்து ஊடகங்களும் உச்சரிக்கும் ஒரே பெயர் ஜமால் கஷோகி (Jamal Khashoggi). சவூதி அரேபியாவில் செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர் ஜமால். சவூதி அரச குடும்பத்திற்கு ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். சோவியத் யூனியன் ஆஃகானிஸ்தானைக் கைப்பற்றும்போது களத்திலிருந்து செய்திகளை சேகரித்தவர் ஜமால். சவுதியை விட்டு வெளியேறி அல்காயிதாவை ஆரம்பித்த நேரத்தில் ஒசாமாவை அவரது இருப்பிடத்திலேயே பேட்டி எடுத்தவர். அவரது பத்திரிக்கை சவூதி அரச குடும்பத்தை விமர்சிக்கும் விதத்தில் ஒரு கட்டுரையை வெளியிடவே அன்று ஆரம்பித்த பிரச்சனை இன்று அவர் மரணத்தில் வந்து நிற்கிறது. ஆனால் இது இத்தோடு முடிவடையக்கூடிய பிரச்சனை இல்லை.

Jamal Khashoggi
Credit: Middle East Eye

முற்போக்கு காலம்

ஜமால் துவங்கிய அல் வதான் பத்திரிகை வஹாபியிசத்தினை விமர்சித்ததாக அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சவுதியில் முற்போக்குச் சிந்தனைக்கு ஒரே தளமாக அல் வதான் இருந்துவந்தது. அதன் பின்பு சவூதி அரச குடும்பத்தின் மதமான சலாபியிசத்தைக் குறித்து அவர் வெளியிட்ட கட்டுரை பரப்பரப்பைக் கிளப்பியது. சவூதி பல வழிகளிலும் அவருக்கு தொல்லைகள் தர ஆரம்பித்தது. தன் உயிருக்கு சவுதியில் பாதுகாப்பில்லை என்று உணர்ந்த ஜமால் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.

அமெரிக்கா சென்றவுடன் வாஷிங்டன் போஸ்ட் இதழில் அவருடைய கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. அதில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானின் கொள்கைகள் குறித்து அவர் விமர்சித்து எழுதிய கட்டுரை பழைய பகையை புதுவேகத்துடன் கிளப்பியது. சவூதி அரசு வெளிப்படையாக இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவில்லை எனினும் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டு இருந்தது. அதற்கான காலம் வந்தது அக்டோபர் மாதம் இரண்டாம் நாள்.

காத்திருந்த ஆபத்து

தன்னுடைய முதல் மனைவியினை விவாகரத்து செய்ததற்கான பத்திரங்களை வாங்குவதற்காக இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்திற்கு சென்றார் ஜமால். தூதரகத்திவிட்டு வெளியே வர தாமதமானால் துருக்கியைச் சேர்ந்த அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்படி தனது காதலியான செங்கிஸ் (Cengiz) இடம் கூறியிருக்கிறார் ஜமால். செங்கிஸ் துருக்கியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1.30 மணிக்கு தனக்குத் தரப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே அதாவது 1.14 மணிக்கே தூதரகத்திற்குள்ளே சென்றுவிட்டார் ஜமால். 11 மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகும் ஜமால் வரவில்லை. துருக்கியின் அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

jamal MBS
Credit: Newstalk

முதலில் தங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லிவந்த சவூதி 20 – ஆம் தேதி ஜமால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஒத்துக்கொண்டது. துருக்கியின் அதிபர் எர்டோகன் சவுதிதான் இந்தப் படுகொலைக்குப் பின்னால் இருக்கிறது என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்து வருகிறார். மக்களும் ஜமாலின் கொலையைப் பற்றிய விசாரணையை வேண்டி பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சதித்திட்டம்

எர்டோகனின் கருத்துப்படி சவூதி அரசு அனுப்பிய 15 கொலையாளிகள் செப்டம்பர் 29 தேதியன்றே துருக்கிக்குள் வெவ்வேறு வழியில் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஜமாலின் வருகைக்காக வெளியே காத்திருந்தவர்கள் அவர் தூதரகத்திற்குள் நுழைந்ததும் உள்ளே சென்று ஜமாலைக் கொலை செய்திருக்கிறார்கள்.

உள்ளே நடந்த உரையாடல்கள் அனைத்தும் தங்கள் வசமுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜமாலின் மகனை சவூதி அரச மாளிகைக்கு அழைத்து தங்களது அனுதாபங்களை தெரிவித்தார் முகமது பின் சல்மான். அமெரிக்க அதிபரும் இந்த விஷயத்தில் சவூதியைக் கடுமையாக சாடி வருகிறார். கொலையினைப் பற்றிய தெளிவான தகவல்கள் இனிவரும் காலங்களில் வெளிவரும் நிலையில் பல நாடுகளின் எதிர்ப்பை சவூதி நிச்சயம் சம்பாதிக்கும். கருத்து சுதந்திரம் மத்திய கிழக்கில் எப்படி இருக்கிறது என்பவதற்கு ஜமாலின் கொலை ஒரு பயங்கர உதாரணம்.

Jamal Khashoggi
Credit: The Times Of Israel

 

- Advertisment -

Must Read

- Advertisment -