வெனிசுலாவில்(Venezuela) ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை மற்றொரு புறம் வரலாறு காணாத விலையேற்றம் என அந்நாட்டை வாழத் தகுதியில்லாத இடமாக மாற்றியுள்ளது. என்ன செய்வதென்று அறியாமல் பெருங்குழப்பத்தில் உள்ளனர் வெனிசுலா மக்கள்.

காலையில் நீங்கள் மார்க்கெட்டிற்குச் செல்கிறீர்கள். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ தக்காளி, இரண்டு கிலோ கோழிக்கறி, ஒரு கிலோ கேரட் மற்றும் பாலாடைக்கட்டி ஒரு கிலோ வாங்குகிறீர்கள் எவ்வளவு வரும்? ஒரு 500 ருபாய்? மிஞ்சிப்போனால் 1000. அதற்கு மேல் வர வாய்ப்பில்லை. ஆனால் இதே பொருட்களை வெனிசுலாவில் உள்ள ஒருவர் வாங்க வேண்டுமானால் அந்நாட்டுப் பணத்திற்கு 3 கோடியே 16 லட்சம் பொலிவர்கள் வரும்.!!
2010 நிலவரப்படி ஒரு நாளைக்குச் சராசரியாக 24 லட்சம் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்த நாடு. அதன் மூலம் 6100 கோடி சம்பாதித்த நாடு.
தலை சுற்றுகிறது எனக் காபி குடிக்க நுழைந்தால் அவ்வளவுதான். ஒரு கோப்பைக் காபி 2 லட்சம் பொலிவர்கள்!! கடைக்குப் போவதாக இருந்தால் மூட்டையில் பணத்தைக் கட்டி எடுத்துச்செல்ல வேண்டும். இதில் வீடு கட்டுவதற்கு, தொழிற்சாலைகளை நடத்துவதற்கு எவ்வளவு ஆகும் எனக் கணக்கிட்டால் கால்குலேட்டர் காலமாகிவிடும். இத்தனைக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே அதிகம் எண்ணெய் வளம் கொழிக்கும் நாடு வெனிசுலா தான். 2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு நாளைக்குச் சராசரியாக 24 லட்சம் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்த நாடு. அதன் மூலம் 6100 கோடி சம்பாதித்த நாடு. இன்று அதன் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. எண்ணெய் வளத்திலும் ஏற்றுமதியிலும் கோடிகளில் குளித்தவர்கள். இன்று அதே கோடிகளில் தங்களது இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொள்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் மட்டுமே அங்கு செழித்து வளர்ந்து வருகிறது.

ஏன் இந்த நிலை?
வெனிசுலாவின் இந்த அவல நிலைக்கு அந்த நாட்டு அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். ஏற்றுமதியைப் பொறுத்தவரை முதலிடம் எண்ணெய் தான். அடுத்தாக இரும்பு, அலுமினியத் தாதுக்கள், கரிம, கனிம இரசாயனங்கள் , பிளாஸ்டிக் பொருட்களே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்ற எல்லாம் இறக்குமதி தான். கொஞ்ச நஞ்சம் இருந்த விவசாயம் அறவே படுத்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் எண்ணெய், தாதுக்கள் தவிர வேறு எந்தத் துறையிலும் அரசு கவனம் செலுத்தாததே. மற்றைய துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறையும் போது அதன் வளர்ச்சியும் குறையுமல்லவா? இப்படி ஆரம்பித்தது தான் வெனிசுலாவின் வீழ்ச்சி.
- 90% வெனிசுலாவின் மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளனர். அதில் 60% மக்கள் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் அவதியுறுகின்றனர்.
- இந்த ஆண்டு வெனிசுலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது
வேறு தொழில்களில் இருந்தவர்களும் வறுமையின் காரணமாக கனிமச் சுரங்கத்திற்கோ, எண்ணெய் நிறுவனங்களுக்கோ வேலைக்குச் செல்லத் துவங்கினர். அதிக அளவில் எண்ணெய் எடுத்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது வெனிசுலா. தேவையை விடப் பொருளின் வரத்து அதிகமாகத் துவங்கியது உலக எண்ணெய் சந்தைகளில். என்ன நடக்கும்? அதே தான். விலைக்குறைப்பு!! அதையே காரணமாகக் காட்டிப் பல பேரை வீட்டுக்கு அனுப்பியது எண்ணெய் நிறுவனங்கள். அதுமட்டுமல்லாமல், இன்றைக்குப் பல நாடுகளும் எண்ணெய் எடுக்க ஆரம்பித்துவிட்டன. தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்ள ஆரம்பித்தது வெனிசுலாவிற்கு பெரிய தலைவலியாகிப் போனது.

எண்ணெய் வர்த்தகத்தில் மற்றுமொரு மிகப்பெரிய பிரச்சனை இடைத்தரகர்கள் செய்யும் லீலை. விலை குறைவாய் இருக்கும் காலங்களில் வாங்கி குவித்துவிடுவது. விலை ஏற்றத்தின் போது விற்றுக் கொள்ளைப் பணம் சம்பாதிப்பது. என்றைக்காவது விலை ஏறாமலா போய்விடும். அதுமட்டுமல்லாமல் கெட்டுப்போக இதென்ன கத்தரிக்காய் கொத்தமல்லியா? எனவே தங்கள் இஷ்டத்திற்கு வாங்கினார்கள். இவ்வுலகில் பிறப்பெடுத்ததே இந்த வேலைக்குத் தான் என்பது போல காலங்காலமாய் செய்து வருகிறார்கள் இத்தொழிலை. ஒரு நாட்டில் போர், உள்நாட்டு யுத்தம் என அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே இவர்கள் வெளிவருவார்கள். எண்ணெய் வர்த்தகத்தில் கருப்புச்சந்தை தவிர்க்க முடியாத ஒன்று.
என்ன ஆகும் வெனிசுலா?

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) புதிய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் புதிய பணத்தினை அச்சடித்து புழக்கத்தில் விட தீர்மானித்திருக்கிறது அரசு. வந்திருக்கும் புதிய பணத்தின் பெயர் சாவரின் பொலிவர்(Soverighn Bolivar) ஆகும். மீட்பு , வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் புத்துயிர்ப்பு என மதுரோவால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் படி 1 சாவரின் பொலிவரின் மதிப்பானது 1000 பழைய பொலிவர்களுக்குச் சமம்.
இத்திட்டத்தின் மூலம் அதிபர் வெனிசுலாவின் அழிவிற்குப் பாதை வகுக்கிறார் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நடைமுறைக்கு வந்திருக்கும் இப்புதிய பண மாறுதல்களால் பொருட்களுக்கு என்ன விலை விதிப்பது எனத் தெரியாமல் பல கடைகள் மூடப்பட்டே கிடக்கின்றன. பல பொருளாதாரத் துறை வல்லுனர்களும் இந்த நடவடிக்கை தற்காலிகத் தீர்வை மட்டுமே தரும், நீண்ட காலத்திற்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும் பட்சத்தில் வெனிசுலா மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.