ஒரு காலத்தில் லத்தின் அமெரிக்க நாடுகளிலேயே பணக்கார நாடாக இருந்தது வெனிசுலா(Venezuela). இன்று அதன் நிலைமை தலைகீழ். வெனிசுலாவின் பணமான பொலிவரின் மதிப்பு அதல பாதாளத்தில் விழுந்து விட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை எட்டியுள்ளது. ஒரு காபி குடிக்கக்கூட 2 லட்சம் பொலிவர்கள் செலவாகும் நிலை. 2013-ஆம் ஆண்டு நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) பதவியேற்றதிலிருந்து நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

சாவரின் பொலிவர்
வெனிசுலாவின் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டும் விதத்தில் புதிய பணமான சாவரின் பொலிவரை அரசு அறிமுகப்படுத்தியது. இருப்பினும் எந்த வித முன்னேற்றமும் நிகழவில்லை.
2013 – லிருந்து கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாத் துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. பேரல் பேரலாக எண்ணெய் வசதி இருந்தும் அரசால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90% பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளனர்.
எதிர்கால சோமாலியா
விவசாயத்தில் அரசு ஆர்வம் காட்டாததே தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கட்டடத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், சாலையோர வியாபாரிகள் என அனைவரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையுயர்வால் 60% மக்கள் ஒருவேளை உணவுகூட இல்லாமல் தவிக்கின்றனர்.

பசியின் பிடியில் இருக்கும் வெனிசுலா மக்கள், தங்கள் தேவைகளைத் தெருவோரங்களில் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பசியின் காரணமாக குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் பழைய, கெட்டுப் போன உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வண்ணம் இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் எவ்வித மருத்துவ உபகரணங்களும் இல்லாததால் சிகிச்சை அளிப்பதிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளன. மருந்துகள் சரி வரக் கிடைக்காததால் வெனிசுலா மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்கத் தயங்குகின்றன.
- ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மரணிக்கும் 1 வயதிற்கும் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 30.12% அதிகரித்துள்ளது.
- பிறந்து 40 நாட்களுக்குள்ளாகவே பசியினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 65.79% அதிகரித்திருக்கிறது.
- 85% மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால் கர்ப்பிணிகளுக்குக் கூட சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் மருத்துவமனைகள் உள்ளன.

நிலைமை இன்னும் மோசமாகும்
உலகளாவிய அந்நியச் செலவாணி நிதியம், வெனிசுலாவின் பொருளாதார நிலைமை தொடர் சரிவை நோக்கிப் பயணிப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் வரும் ஆண்டில் 10 லட்சத்தைத் தாண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் வாழ்வாதாரத்தை மோசமாக பாதித்திருக்கிறது. அரசு வழங்கும் பாலினை வாங்க மைல் கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். ஒரு புறம் வறுமை. மற்றொரு புறம் வேலைவாய்ப்பின்மை என வெனிசுலா மக்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
வறுமை மீட்பு நடவடிக்கைகளை ஐ.நா எடுக்கக் கோரி பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஒரு பிடிச் சோற்றின் மதிப்பு என்ன என்பதை வெனிசுலா மறுபடியும் உணர்த்தியிருக்கிறது. உணவு வீணாக்கல் என்பது தவறு மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த மானுட சமுதாயத்திற்கே செய்யும் துரோகமும் கூட.