“என் தாய்நாட்டிற்கு ஒண்ணுனா நான் உயிரை கூட கொடுப்பேன்” இப்படி பஞ்ச் டயலாக்குகளை அள்ளிவீசி அரசிலுக்கு வந்தவர்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். சிலிர்த்துப்போய் சில்லறைய விட்டெறிஞ்ச அதே வேகத்தில் நடிகருக்கு ஓட்டுப்போடும் மக்களையும் சந்தித்திருக்கிறோம். ஆனால் ஒரே நாடகம் மூலம் மக்களைக் கவர்ந்து அந்நாட்டின் அதிபர் பதவியையும் கைப்பற்றியுள்ளார் உக்ரேனைச் சேர்ந்த வோலோதிமிர் ஜெலன்ஸ்கி.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான செர்வன்ட் ஆப் தி பீப்பிள் (Servant of the people) என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகனாக நடித்தார் ஜெலன்ஸ்கி. கதைப்படி ஜெலன்ஸ்கி ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு பொங்கியெழும் அக்மார்க் குடிமகன். இப்படியிருக்க அங்கு நடக்கும் ஊழலைப்பற்றி வீடியோ ஒன்றில் பேசி அதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறார். இதன்மூலம் ஜெலன்ஸ்கியின் புகழ் நாடு முழுவதும் பரவுகிறது. இந்த புரட்சியின் காரணமாக மக்கள் மனதில் நற்பெயர் எடுக்கிறார் நாயகன். இறுதியில் தேர்தலில் நின்று அபார வெற்றி பெற்று அதிபராகிறார். எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதா? நம்ம ஊர் முதல்வனில் பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்திருக்கிறார்கள்.
தேர்தல்
உக்ரைன் நாட்டின் அதிபரான பெட்ரோ போரோஷெங்கோவின், பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைவதையொட்டி அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பெட்ரோ போரோஷெங்கோ தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள, மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துத்தான் ஜெலன்ஸ்கி போட்டியிட்டார்.
கடந்த மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது. இதில் உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஆனால் முதல் சுற்று தேர்தலின் போது எந்த வேட்பாளரும், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.
இதனையடுத்து முதல் 2 இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் இடையே, 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி 2-வது சுற்றில் வோலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டதில், தொடக்கம் முதலே நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 73 சதவீத வாக்குகள் பெற்று ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபராக அபார வெற்றி பெற்றார்.
மக்களிடையே தனது நடிப்பின் மூலம் அபார வரவேற்பை பெற்றிருந்த ஜெலன்ஸ்கி கூடிய விரைவில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்க இருக்கிறார்.