ராணுவத்தில் ஆள் சேர்ப்பு பற்றி நாம் அனைவரும் பார்த்திருப்போம், படித்திருப்போம். பெரிய மைதானத்தில் ஓடவும், தாண்டவும், குதிக்கவும், பதுங்கவும் இருப்பார்கள். உயரம், மார்பின் அகலம், இத்யாதி இத்யாதி. ஆனால் பிரிட்டனில் வேறுவிதமாய் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள். அவற்றின் முக்கிய தகுதிகளாவன, உங்களுக்கு செல்பி எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும், வெறித்தனமான வீடியோ கேம் விளையாடுபவராக இருக்கவேண்டும், நீங்கள் காமெடி பீஸ் என்று தோன்றுகிறதா? அப்படியென்றால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். இப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு ஆனந்த அதிர்ச்சியை அளித்திருக்கிறது பிரிட்டிஷ் ராணுவம்.

போனும் போரும்
முதலாம் உலகப்போர் சமயம். பிரிட்டிஷ் ராணுவத்தின் பீல்டு மர்ஷலாக இருந்த லார்டு கிச்சனர் (Lord Kitchener) இளைஞர்களுக்கு மத்தியில் “Your Country Needs You” என்னும் பெயரில் போஸ்டர்கள் அடித்து பரப்ப செய்தார். இதனால் நல்லா பலன் கிடைத்தது. அதையே திரும்ப செய்து வருகிறது இப்போதைய ராணுவம். ஆனால் வாசகம் “Your Army Needs You” என மாற்றப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் பிராதன வீதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
செல்ஃபி எடுப்பதால் தன்னம்பிக்கையும், வீடியோ கேம் விளையாடுவதால் மன ஒருமைப்பாடு, விடா முயற்சி, தோல்விகளைக் கண்டு துவளாத மனம் ஆகியவை கிடைக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த அறிவிப்புகளுக்குக் காரணம்.
தனித்திறமை
செல்ஃபி எடுப்பதன்மூலம் இளைஞர்களின் சிந்திக்கும் திறன் அதிகளவில் வெளிப்படுகிறது. வீடியோ கேமிலும் வெற்றியை நோக்கிய தொடர் முயற்சிகள் அவசியம். இதனாலேயே ராணுவம் இந்த முடிவினை எடுத்ததாகச் சொல்கிறார், பிரிட்டிஷ் ராணுவத்தின் மேஜர் ஜென்ட்ரலான பால் நான்சன் (Paul Nanson). மேலும் ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை என்பது நிச்சயம் இருக்கும். அதனைக் கண்டறிந்து, நாட்டிற்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்றார்.

இந்தத் தேர்வின் மூலம் இளைஞர்களிடையே நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தவும், இளைய தலைமுறையினருக்கு ராணுவத்தின் மீது ஈர்ப்பை அதிகப்படுத்தவும் இது உதவும் என்கிறார் பிரிட்டனின் பாதுகாப்புத்துறை செயலாளர் காவின் வில்லியம்சன் (Gavin Williamson).
மொத்தமுள்ள 82,500 காலிப்பணியிடங்களில் தற்போது வரை 77,000 இடங்கள் நிரம்பியுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் அனைத்து பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.