லத்தின் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மண்புழு போன்ற உயிரினம் ஒன்றிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பெயர்வைப்பதற்காக ஐரோப்பிய நிறுவனம் 25,000 டாலர் ரூபாயை செலவழித்துள்ளது. இவ்வளவு பணம் கொடுத்து ட்ரம்பின் பெயரை அந்த நிறுவனம் வைப்பதற்கு அந்நிறுவனம் சொல்லும் காரணம் தான் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. முதலில் இந்த “புது ட்ரம்ப்” பற்றி பார்ப்போம்.

நிலம் மற்றும் நீர் ஆகிய இரண்டிலும் வாழும் இந்த உயிரினத்திற்கு எழும்புகள் கிடையாது. அதேபோல் கண்பார்வையும் கிடையாது. பெரும்பாலும் மண்ணைத் தோண்டி குழி பறித்து அதற்குள் வசிக்கும் இந்தப்பிராணி சிசிலியன்ஸ் (caecilians) என்னும் வகையினைச் சேர்ந்தது.
லத்தின் அமெரிக்காவின் மழைக்காடுகளில் 12 வித்தியாச உயிரனங்கள் ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றிற்குப் பெயர் வைக்கும் உரிமையை ஏலத்தில் விடுவதாக கடந்த இந்த மாதம் 8 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. பரபரப்பாக நடந்த இந்த ஏலத்தில் Enviro Build என்னும் ஐரோப்பிய நிறுவனம் 25,000 டாலர்கள் செலவழித்து இந்த உரிமையினைப் பெற்றிருக்கிறது. இப்படி ஏலத்தின் மூலம் கிடைத்த தொகையானது conservation organization Rainforest என்னும் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்டது.
பெயர் வரக் காரணம்
உலக வெப்பமயமாதல் காரணமாக மாறிவரும் காலநிலை குறித்து அமெரிக்க அதிபர் காட்டும் அக்கறை அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாவதுண்டு. இதனால் மண்ணிற்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும் இந்த மண்புழுவைப்போல அதிபர் ட்ரம்ப் காலநிலை மாற்றப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிடும்படி இந்தப்பெயரானது வைக்கப்பட்டிருக்கிறது.
ட்ரம்பின் பெயர் இப்படி உயிரனத்திற்கு வைக்கப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே அந்துப்பூச்சி வகையினைச் சேர்ந்த பூச்சி ஒன்றிற்கு Neopalpa donaldtrumpi என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதிபரின் தலையினைப் போன்றே முடிகளைக் கொண்டிருப்பதால் இந்தப் பெயரினை வைத்தார்களாம்.

முதுகெலும்பு இல்லை, கண் தெரியாது, இந்த உலகத்தைப் பார்க்காமல் மண்ணிற்குள் தலையினைப் புதைத்துக்கொள்ளும் இந்த உயிரினத்திற்கு Dermophis Donald Trumpi எனப் பெயரிட்டிருக்கிறது அந்நிறுவனம். சரி, அப்படி ட்ரம்ப் என்னதான் செய்தார்? ஏதாவது செய்தால் தான் பரவாயில்லையே!!
அதிபர் ட்ரம்பின் அட்டகாசம்
உலகளாவிய விஷயங்களில் முண்டியடித்துக்கொண்டு மூக்கை நீட்டும் அமெரிக்கப் பாரம்பரியத்தில் இருந்து வந்த ட்ரம்பிற்கு அந்த ஜீன் இரத்தத்திலேயே இல்லை. உலகமே பாரீஸ் காலநிலை மாற்ற மாநாட்டில் அக்கறை காட்டியபோது மெக்சிகோவிற்கு வேலியிட வேண்டும் என்று முனங்கியவர் ட்ரம்ப். மேலும் பங்குபெற்ற அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்த போதிலும் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் தடைபோடும் விதத்தில் உள்ளது என்று ஒரே போடாகப் போட்டார் அதிபர்.

இதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஏதோ வெளிநாட்டு விஞ்ஞானிகள் சொன்னவை, அவர்கள் தயாரித்த திட்டம் என்று வைத்துக்கொள்ளலாம். தன்னுடைய அரசின் கீழ் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க வெப்பநிலையைக் கட்டுப்படுத்தாவிடில் அமெரிக்கா கடும் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்கும் என்ற முக்கியமான அறிக்கையை சமர்ப்பித்தபோது இந்த ஆராய்ச்சியெல்லாம் தேவைதானா? என்பது போல பேசியதுதான் அனைவரின் வயிற்றையும் கலக்கியது. உலகத்தின் மிகவும் வலிமையுள்ள அதிபருக்கு இருக்க வேண்டிய எதிர்காலம் குறித்த முன்னெச்சரிக்கை இல்லை என்பதாலேயே தனது பெயரை கண் தெரியாத மண் புழுவோடு தனது பெயரைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ட்ரம்ப்.