அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள செய்திகள் அனைத்தும் தற்போது அந்த நாட்டு மக்களுடைய காலணிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்தர்பல்டி அடிக்கும் அதிபரின் இந்த சிறப்பு ட்விட்டுகளை கூர்நோக்கி, அதை காலணியாக செய்திருக்கும் விளம்பர மேதையின் பெயர் சாம் மாரீசன்(Sam Morrison). ட்ரம்பின் குண்டக்க மண்டக்க போஸ்ட் எல்லாம் திரட்டி அவற்றை காலணிகளில் பொறித்து விற்பனை செய்கிறார் மாரீசன். அமெரிக்காவில் 47 மாகாணங்களில் இருந்தும் இந்த சிறப்பு காலணிக்கான முன்பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி என்ன எழுதிவிட்டார் ட்ரம்ப். வாங்க பாத்துடுவோம்.

ட்ரம்ப் – திரும்பு
அமெரிக்க அதிபர் போல ட்வீட்டுவது மிக எளிது. இன்று காலையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சிரிய போர் பற்றிய நடவடிக்கையைப் பற்றி கழுவி ஊத்தி ஒரு போஸ்ட். போர் செய்வது மனித குலத்திற்கு செய்யும் துரோகம். மனித சேவையே மகேசன் சேவை போன்ற மானே, தேனே, பொன்மானே வசனங்கள் முக்கியம். சரியாக அடுத்த மாதம் சிரியாவில் ஒரு குண்டு. அது வெடிக்கும் சத்தம் அமெரிக்காவிற்கு கேட்கும். அப்போது ஒரு போஸ்ட். தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் வேரறுக்க முடியும். இப்போதும் மானே, தேனே அவசியம். இவ்வளவு தான் ட்ரம்ப் அவர்களின் ட்விட்டர் செய்திகள்.
இப்படி ஏராளமான நேர் – எதிர் தகவல்கள் அன்னாரின் ட்விட்டர் அக்கவுண்டில் கொட்டிக் கிடக்கின்றன. படித்துவிட்டு, சிரித்து, கோபத்தில் கொப்பளித்து, கமெண்டில் காது கொடுத்து கேட்க முடியாமல் திட்டும் மக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் நம் மாரீசன். பொறுமையாக அவற்றை பிரிண்ட் செய்து செருப்பில் ஒட்டி விடுகிறார். அதிபர் செருப்பு என பெயர் வேறு வைத்துவிட்டார். அதனால் விற்பனை படுபயங்கர வேகத்தை எட்டியுள்ளது.
மாரீசனின் கைவண்ணத்தில் ஒரு துளி

நீங்கள் கூர்ந்து பார்க்கும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. Electoral College என்னும் ஒரு அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. அதாவது மாகாண வாரியாக கிடைக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் அதிபரை தேர்ந்தெடுக்கும் முறை. அந்த அமைப்பை எதிர்த்து ட்ரம்ப் போட்ட ட்வீட் தான் வலது பக்க காலணியில் உள்ளது. அப்படியென்றால் இடது காலணியில் என்ன இருக்கும்? புத்திசாலி. அமெரிக்க வரலாறு உங்களுக்கு தெரிந்துவிட்டது. இப்படித்தான் மாரீசன் வெற்றி பெற்றிருக்கிறார்.
மாரீசன்
இதை உருவாக்குவதற்காக ட்ரம்பின் 40,000 ட்விட்டர் செய்திகளை படித்துள்ளார் மாரீசன். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த மகத்தான கலைப் படைப்பை உருவாக்கத் துவங்கி விட்டார் இவர். இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளத்தின் பெயர் தான் பகீர் என்று இருக்கிறது. அப்படி என்ன என்கிறீர்களா? PresidentFlipFlops.com. தான் முகவரி. முதற்கட்டமாக 1000 ஜோடி காலணிகளை உருவாகியுள்ளார். ஒரு மாதத்திற்குள் அனைத்தும் தீர்ந்து போகவே வசனங்கள் மறுபடி பொறிக்கப்படத் தொடங்கிவிட்டன.
ஐந்து வெவ்வேறு அளவுகளில் இவை தயாரிக்கப்படுகின்றன. ஒரு காலணியின் விலை 30 டாலர்கள். ஆரம்பத்தில் கையாலேயே பிரிண்ட் செய்துவந்த மாரீசன் தற்போது உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறார். அதனால் ரோபோக்கள் மூலம் காலணி தயாரிக்கும் முறையைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார் மாரீசன். ட்ரம்ப் இருக்கும் வரை உங்களுக்கு என்ன கவலை மிஸ்டர் மாரீசன்?